

முத்துவின் மனநிலை, உணர்ச்சி, சூழ்நிலை ஆகியவற்றை ஆசிரியர் கதிர் தனது ஒத்துணர்வுத் திறனால் அவனது நிலையில் இருந்து புரிந்துகொண்டார் என்று ஆசிரியர் எழில் விளக்கியதை கடந்த வாரம் பார்த்தோம்.
இதை கேட்டதும், அப்படியானால் அதற் குப் பின் முத்து நாள்தோறும் பள்ளிக்குக் காலங்கடந்துதான் வந்தானா என்று நன்மொழி கேள்வி எழுப்பினாள். அப்படி வரஒருவரை மட்டும் அனுமதிப்பது சரியில்லையே என்று தனது கருத்தைச் சொன்னான் சாமுவேல்.
இப்போது மட்டும் எப்படி?
கதை இன்னும் முடியவில்லை என்றார் ஆசிரியர் எழில். வகுப்பறை அமைதியானது. ஒரு வாரம் கழித்து முத்து சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு தொடர்ந்து வந்தான். அந்த மாற்றத்தைக் கவனித்த தலைமையாசிரியர் அவனை அழைத்து, எப்படி இப்பொழுது உன்னால் சரியான நேரத்துக்கு வர முடிகிறது என்று கேட்டார்.
நான் தொடர்ந்து தாமதமாக வருவதால் பள்ளியின் ஒழுங்கு எப்படிக் கெடுகிறது என்றும் அதனால்தான் உரிய நேரத்தில் வரும்படி நீங்கள் வலியுறுத்துகிறீர்கள் என்றும் ஆசிரியர் கதிர் எனக்குப் புரியும்படி விளக்கினார். எனவே, எனது அன்றாடநடத்தைகளில் மாற்றம் செய்தோ, பேக்கரியில் வேலை நேரத்தை மாற்றிக் கொண்டோ உரிய நேரத்திற்குப் பள்ளிக்கு வரும்படி கூறினார்.
அதன்படியே மாலையில் நண்பர்களோடு வீண்கதை பேசிய நேரத்தில் பேக்கரிக்குச் சென்று வேலை பார்க்கிறேன். அதனால் காலையில் உரிய நேரத்திற்கு வந்துவிடுகிறேன் என்று பதிலுரைத்தான் முத்து. அந்த மாற்றத்தைத் தலைமையாசிரியர் பாராட்டினார் என்று கதையை முடித்தார் எழில்.
தலைமையாசிரியரின் மனநிலை, நோக்கம்,சூழ்நிலை ஆகியவற்றையும் கதிர் சிந்தித்திருக்கிறார் என்றான் அருளினியன். ஆம் என்றார் எழில். ஒத்துணர்வும் இரக்கமும் வெவ்வேறா என்று வினவினாள் பாத்திமா.
உணர்வுகள் பலவிதம்
அல்லியும் முல்லையும் ஓடிப்பிடித்து விளையாடினர். அல்லி கால்தடுக்கி கீழே விழுந்தாள். இச்சூழலில், ஐயோ… அல்லி விழுந்துவிட்டாயே… கவனமாய் ஓடியிருக்கலாமே என்று முல்லை கூறினால் அது இரக்கம் (Pity). ஐயோ ... அல்லி விழுந்துவிட்டாயே… அடிபட்டுவிட்டதா? வலிக்கிறதா? ரத்தம் வருகிறதா? என்று முல்லை பதறிக் கூறினால், அது பரிவு (Sympathy). ஐயோ… அல்லி விழுந்துவிட்டாயே…
அடிபட்டுவிட்டதா? எழு. ரத்தம் வருகிறதா எனப் பார்ப்போம் என்று முல்லை பதறிக் கூறியவாறே சென்று அவளைத் தூக்கி நிறுத்திக் காயம்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், அது தயை (Compassion). ஐயோ… அல்லி விழுந்துவிட்டாயே…. அடிபட்டுவிட்டதா? வலிக்கிறதா? காயம்பட்டு ரத்தம் வருகிறதா எனப் பார் என்று கூறியவாறே அல்லி தானாக எழுந்துநின்று, காயம்பட்டு ரத்தம் வருகிறதா எனப் பார்ப்பதற்கு முல்லை உதவினால், அஃது ஒத்துணர்வு (Empathy) என்று விளக்கினார் எழில்.
அதாவது, மற்றவர்களுக்கு இப்படி நிகழ்ந்துவிட்டது என உணர்வது இரக்கம். இப்படி நிகழ்ந்ததால் இந்தப் பாதிப்பு வந்திருக்கக் கூடுமே என உணர்வது பரிவு. வந்திருக்கக் கூடிய பாதிப்பை உணர்ந்து, அதனைச் சரிசெய்ய முனைவது தயை. அந்தப் பாதிப்பை உணர்ந்து, அவரே அதனைச் சரி செய்ய உதவுவது ஒத்துணர்வு எனலாமா என்று தனக்குப் புரிந்ததைக் கூறி வினவினாள் மதி. நேர்த்தியாகப் புரிந்து கொண்டாய் என்று பாராட்டினார் எழில்.
சுருக்கமாய்ச் சொன்னால், மற்றவர்களின் தேவையைப் புரிந்துகொண்டு, அதனை அவர்களே நிறைவேற்ற உதவுவதே ஒத்துணர்வு ஆகும் என்று வரையறுத்தான் காதர். அருமை என்று அவனைப் பாராட்டி அன்றைய வகுப்பை நிறைவுசெய்தார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com