

பேஷன் டெக்னாலஜி தொடர்பான படிப்புகள் குறித்தும், அவற்றை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கலாம் என்பது குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். இவற்றுக்கு இணையாக தோல்பொருள் வடிவமைப்பு சார்ந்த ஃபேஷன் டெக்னாலஜியும் பல்வேறு தளங்களில் விரிவான வேலைவாய்ப்புகளுடன் வளர்ந்து வருகிறது.
மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் தோல் பொருள் வடிவமைப்புக்கு என்றே பிரத்யேகமான உயர்கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த வகையில் சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் பல்வேறு கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன.
FDDI – AIST நுழைவுத் தேர்வு
இவற்றில் தோல் பொருட்கள் வடிவமைப்பு, காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, அலங்கார வடிவமைப்பு என 3 விதமான டிசைனிங் படிப்புகள் வழங்கப்படுகின்றன. வழக்கமான பொறியியல் உயர்கல்விக்கு மாற்றாக இந்த இளங்கலை வடிவமைப்பு (B.Des.,) சார்ந்த உயர்கல்விக்கு முன்னு ரிமை தருவோர் அதிகரித்து வருகின்றனர். இவற்றில் சேர்ந்து பயில ‘FDDI – AIST ‘(Footwear Design and Development Institute – All India Selection Test) என்னும் தேசிய அளவிலான தேர்வை எழுத வேண்டும்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுகிறார்கள். விண்ணப்பதாரர் 25 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக (www.fddiindia.com/index.php) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப நடைமுறைகளின் அங்கமாக ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணம் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300, ஏனையோருக்கு ரூ.600 ஆகும்.
வரும் கல்வியாண்டுக்கான விண்ணப்ப நடைமுறைகள் 2023 பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி ஏப்ரல் 4வது வாரத்தில் முடியும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையை அவர்கள் குறிப்பிடும் நாளில் இணையதளத்தில் இருந்து தரவிறக்கி அச்சிட்டு வைத்துக்கொள்வது அவசியம்.
தேர்வு நடைமுறைகள்
FDDI AIST நுழைவுத் தேர்வு 2023 ஜூன் இரண்டாவது வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் நான்காவது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும். இதன் தொடர்ச்சியாக ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்கி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கும். சென்னை உட்பட நாட்டின் 31 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைந்திருக்கும்.
பேனா பேப்பர் கொண்டு எழுதும் இத்தேர்வு, 2.30 மணி நேரத்துக்கு நடைபெறும். தவறான விடைக்கு மதிப்பெண் கழிக்கும் நடைமுறை இத்தேர்வில் கிடையாது.
நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாளா னது, Quantitative Aptitude, Verbal Ability, General Awareness, Business Aptitude Test என 4 பிரிவுகளில் 150 வினாக்களுடன் 200 மதிப்பெண்களுக்கு அமைந்திருக்கும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் பகுதியில் இருந்து கணிசமான வினாக்கள் கேட்கப்படும். இத்துடன் நடப்பு செய்திகள் மற்றும் பொது அறிவையும் மேம்படுத்திக் கொண்டால் நுழைவுத் தேர்வுக்கு தயாராகலாம்.
நேரடி கலந்தாய்வின் நிறைவாக 12 வளாக மையங்களில் ஒன்றில் சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம். FDDI வளாக நிறுவனங்கள் மட்டுமன்றி, இந்த நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களை அடைவாக கொண்டு டிசைனிங் உயர்கல்விக்கு அனுமதிக்கும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை பெறலாம்.
| தடம் பதிக்கும் தமிழகம் ‘காலணி மற்றும் தோல் பொருட்களுக்கான புதிய கொள்கை’யை கடந்த மாதம் தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி, எதிர்வரும் 2025-ம் ஆண்டுக்குள் காலணி மற்றும் தோல் பொருள் உற்பத்தியில் ரூ.25 ஆயிரம் கோடிக்கான முதலீடுகளை ஈர்க்கவும், 2 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. |
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com