

பாட்டி சொல்லைத் தட்டாததால் குடிமைப்பணி தேர்வில் வென்று ஐஆர்எஸ் ஐடி பெற்றுள்ளார் ஜபீன் பாத்திமா.ஜே. இவர் தற்போது பெங்களூரூவில் உள்ள மத்திய வருமான வரி அலுவலகத்தில் துணை ஆணையராகப் பணியாற்றுகிறார்.
ஜபீன் பாத்திமாவின் பெற்றோர்,தமிழகத்தின் தாராபுரம் தலையூரிலிருந்து வியாபாரத்துக்காக கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள். மின்னணு பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ள தந்தை ஜமால்முகம்மது, தாய் பரீதா பானுவுடன் ஒரு தம்பியும் ஜபீனுக்கு உள்ளனர். எனினும், தம் தாய்வழிப் பாட்டியான ஜீனத் பேகத்தை தன் வாழ்வின் முன்மாதிரியாக கொண்டு வாழ்ந்துள்ளார் ஜபீன். இவர், ஒன்றாம் வகுப்பு படிக்க ஆரம்பித்ததில் இருந்தே ஒன்று அல்லது இரண்டாவது ரேங்கை பெற்றுள்ளார்.
படித்தது பொறியியல்
பெங்களூருவில் அடிக்கடி வீடு மாற நேரிட்டதால் ஆறாம் வகுப்புவரை பள்ளிகளையும் அவ்வப்போது மாற்ற வேண்டியதாயிற்று. பிறகு கெங்கேரி பகுதியிலுள்ள பிரியதர்ஷினி வித்யா கேந்திராவில் 7 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வியில் ஜபீன் பயின்றுள்ளார்.
பிறகு ஹொசகரஹள்ளியில் உள்ள ஸ்ரீகுமரன் பிரீ யூனிவர்சிட்டி கல்லூரியில் பிளஸ் 2-வை கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 93.4% மதிப்பெண்ணுடன் முடித்துள்ளார். மாநில அரசின் பொது நுழைவுத்தேர்விலும் உயர் மதிப்பெண் பெறவே எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பிரிவில் சேர்ந்து படித்தார். 2013-ல்இளநிலை பொறியாளர் பட்டம் பெற்றார்.
அம்மாவை பார்த்து கற்றேன்
இது குறித்து மத்திய வருமான வரித்துறையின் உயர் அதிகாரியாக தற்போது பதவி வகிக்கும் ஜபீன்கூறும்போது, “பிஎஸ்சி படிப்பை பாதியில் விட்ட தாயும், தன் குழந்தைகளுடன் பேரன், பேத்திகள்வரை வளர்த்து ஆளாக்கிய நன்னிமா பாட்டியும்தான் எனது வெற்றிக்கு முழு முதற்காரணம்.
எனது தாய்மாமன்களும் பேரூதவி புரிந்தனர். அம்மா, மாலை 4 முதல் 8.00 மணி வரை அக்கம்பக்கம் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பார். அந்த நேரத்தில் நானும் பள்ளி பாடங்களை படிப்பது வழக்கமானது. அனைத்து பள்ளி வகுப்புகளிலும் ஆசிரியைகள் அனைவரும் எனக்கு ஊக்கமூட்டியதும் பலன் அளித்தது” என்றார்.
நுழைவுத் தேர்வில் வெற்றி
பொறியியல் படிப்பின் இறுதியாண் டில் யூபிஎஸ்சி தேர்வு குறித்து யோசித்துள்ளார் ஜபீன். இதற்கான பயிற்சிக்கு நிதி உதவி அளிக்கும் கர்நாடக மாநில அரசு சிறுபான்மை துறையினரின் நுழைவுத் தேர்விலும் ஜபீன் தேர்ச்சி பெற்றார்.
அதேநாளில் தனியார் பெருநிறுவனத்திலும் ஜபீனுக்கு பணி கிடைத்தது. எனினும், குடிமைப்பணி தேர்வு எழுத முடிவு செய்து டெல்லியின் வாஜிராம் ரவி பயிற்சி நிலையத்தில் இணைந்தார்.
மூன்றாவது முயற்சியில் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டவருக்கு இந்திய வருவாய் துறையின் வருமான வரி பிரிவு பணி(ஐஆர்எஸ் ஐடி) 2017-ல் கிடைத்தது. இதற்கு பின் ஐஏஎஸ் பெற ஜபீன் ஒரு முயற்சியுடன் நிறுத்திக் கொண்டார். இதற்கு அவர், பெற்ற ஐஆர்எஸ் ஐடி பணியின் பயிற்சியில் கவனம் செலுத்தி தொடர முடிவு எடுத்திருந்தது காரணமானது.
அந்த நாள் முதல்!
இக்கால கட்டத்தில் தனது அனுபவம் குறித்து அதிகாரி ஜபீன் பாத்திமா கூறும்போது, “மைசூரில் இருந்த எனது பாட்டி, பெங்களூரு வரும் போதெல்லாம் என்னை பள்ளியில் வந்து சந்தித்து, நமது குடும்பத்தின் முதல் உயரதிகாரியாக நான் தலையெடுக்க வேண்டும் எனக் கூறி உற்சாகப்படுத்தி வந்தார்.
இது மனதில் ஆழமாகப் பதிந்ததால்தான் யூபிஎஸ்சி தேர்வை எழுதினேன். பள்ளி காலங்களில் தமது பெஞ்சில் அமர்பவர்களுக்கு தெரியாததை, தெரிந்தவர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் அளித்த யோசனை அதிக பலன் தந்தது. இதேவகையில், டெல்லியில் உடன் படித்த நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படித்து வந்தது, யூபிஎஸ்சி பணி பெற உதவியது” என விவரித்தார்.
விளையாட்டிலும் கெட்டி
பள்ளி நாட்களில் ஆசிரியர்கள் அவ்வப்போது மாணவ, மாணவி களின் எதிர்காலத் திட்டம் குறித்து கேட்பது உண்டு. அன்றிலிருந்தே, ஜபீன் தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என ஒரே பதிலைக் கூறி வந்துள்ளார். கோகோ போன்ற விளையாட்டுகளிலும், பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளிலும் தவறாது கலந்து கொண்டார்.
பள்ளி வகுப்பில் படித்த பாடங்கள் முதல் அன்றாடம் தான் செய்ய வேண்டியவற்றை திட்டமிட்டு டைரியில் எழுதும் பழக்கமும் தனக்கு கைகொடுத்ததாக சொல்கிறார். இதுபோல், பள்ளி வயதில் கற்ற பல நல்ல பழக்கங்கள், ஜபீன் பாத்திமாவை ஐஆர்எஸ் ஐடி அதிகாரியாக்கி விட் டது.
யூபிஎஸ்சிக்கான தனியார் பயிற்சிநிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஃபரீஸ் ரஹ்மான் என்பவரை 2020-ல் மணமுடித்துள்ளார் ஜபீன்.பெங்களூருவின் மத்திய வருமானவரித் துறையின் உளவு மற்றும் கிரைம் பிரிவில் உதவி இயக்குநராக முதலில் சேர்ந்தார் ஜபீன். அடுத்து உதவி ஆணையரானார். அதிலிருந்து தற்போது, சர்வதேச வரிப் பிரிவின் துணை ஆணையராக வளர்ந்து நிற்கும் ஜபீன் பாத்திமா பாராட்டுக்குரியவரே!
கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in