

"பெண்கள் பருவமடைதல் போல ஆண்களுக்கு எதுவும் நிகழ்வதில்லையா டாக்டர்? அவங்க எப்பவும் ஜாலியா இருக்காங்களே?" எட்டாம் வகுப்பு படிக்கும் இனியாவின் கேள்வி இது.
பெண்கள் பருவமடைவது போலவே, ஆண்களும் பருவமடைகின்றனர். ஆனால், பெண்களுக்கு நிகழ்வது போல இவர்களுக்கு சுழற்சி முறையிலோ, குறிப்பிட்ட கால இடைவெளிகளிலோ இது வெளிப்படுவதில்லை. ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்று மாதவிலக்கு ஏற்படும் போது கூறுகிறோம்.
மாதவிலக்கு வெளித்தெரிவதுதான் பருவமடைதலின் முதல் அறிகுறி என்று அனைவராலும் பார்க்கப்பட்டாலும், உண்மையில் ஒருபெண் பருவமடைவது என்பது ஒருநாள் நிகழ்வல்ல. ஒரு குழந்தை வளர்ந்து பெரியவர் ஆவதைப் போலவே, படிப்படியாக நடக்கும் ஒரு நீண்ட காலப் பயணம்தான் இது.
எட்டாவது வயதுக்கும் பத்தாவது வயதுக்கும் இடைபட்ட காலத்தில் பெண்கள் உடலில் பிட்யூட்டரி மற்றும் சினைப்பை ஹார்மோன்களால் சில மாற்றங்கள் நிகழத் தொடங்கும். இந்த மாற்றங்களில் முதலில் தோன்றுவது மார்பக வளர்ச்சி. இதனைத் தொடர்ந்து அக்குள், பூப்பு மேடு உட்பட்ட இடங்களில் ரோம வளர்ச்சி, இடை சிறுத்தல், இடுப்பு எலும்புகள் விரிவடைதல், குரல் மென்மையடைதல் ஆகியன படிப்படியாக நிகழும். பிறகு ஒரு காலகட்டத்தில் முதல் மாதவிடாய் அல்லது முதன்முதலில் உதிரம் வெளியேறுவதும் நிகழ்கிறது. இதைத்தான் பெண் பருவம் அடைதல் என்கிறோம்.
கிட்டத்தட்ட இதேபோலத்தான் ஆண்களுக்கும் நிகழ்கிறது. ஆண்களுக்கும் பத்து முதல் பதினான்கு வயது வரை மூளையில் சுரக்கும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் உந்துதலால், ஆணின் விரைப்பைகள் வளர்ந்து, ஆணின் உள்உறுப்புகளும் விரிவடைகின்றன. அத்துடன் அவற்றில் சுரக்கும் பிரத்தியேக ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன்கள் அவர்கள் உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
உடலிலும் உணர்விலும் மாற்றங்கள்
ஆண்களின் உடலில் முதன்முதலாக வெளித்தெரியும் மாற்றம் உயரம் கூடுதலேயாகும். அத்துடன் தோள்பட்டைகள் விரிந்து, புஜபலம் பெருகுவதும், ஆதாம் ஆப்பிள் எனும் குரல்வளை புடைத்து, குரல் உடைந்து கரகரப்பாவதும், தசைகள் வளர்ச்சியடைந்து, வலிமையடைவதும் படிப்படியாக இவர்கள் உடலில் தொடர்ந்து நிகழ்கிறது. அதே சமயம் டெஸ்டோஸ்டிரோன்களின் ஊக்கத்தால் விந்தணுக்கள் உற்பத்தி நிகழத் தொடங்கி,
வலிமையைக் குறிக்கும் விளையாட்டு களில் ஈடுபாடும் ஆண் பிள்ளைகளுக்கு அதிகரிக்கிறது. இப்பருவத்தில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் மட்டுமன்றி அட்ரீனல் ஹார்மோன்களும் அதிகரிப்பதால், உடலெங்கும் ரோம வளர்ச்சிதொடங்கி, வியர்வை நாளங்கள் மற்றும்எண்ணெய் சுரப்பிகள் பெருகுகின்றது. இதுதான் அரும்பு மீசையாகவும், முகப்பருக்களாகவும், அதிக வியர்வையாகவும் வெளிப்பட்டு, ஒரு ஆண் குழந்தை, ஆண்மகனாக உருவாகிறான்.
உடலில் இத்தகைய மாற்றங்கள் நிகழும் அதேசமயம் மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் அதிகளவு மாற்றங்களை சந்திக்கும் பெரும்பாலான பருவ வயது ஆண்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதும், தங்கள் வயது சார்ந்தவர்களிடம் மட்டுமே நெருங்கிப் பழகுவதும், ஒருசிலரில் பெண்களின் பால் ஈர்ப்பு ஏற்படுவதும் நிகழ்கிறது. கிட்டத்தட்ட குழந்தைப் பருவத்திற்கும், வளர்ந்தவர்களுக்கும் இடையேயான பருவகாலம் இது.
இதில் இனியாவுக்கும், இனியா வயதைச் சேர்ந்த பெண்களுக்கும், அதே வயதைச் சார்ந்த ஆண்களுக்கும் ஏற்படும் மாற்றங்களை, இவர்கள் இருவரையும் வளர்க்கும் பெற்றோரும், கற்பிக்கும் ஆசிரியர்களும் புரிந்துகொள்வதும், அதை அவர்களுக்குப் புரியவைப்பதும் இந்த சமயத்தில் மிகவும் முக்கியம். இதை தெளிவாக எடுத்துச் சொன்னாலே இந்தபருவத்தில் உள்ள குழந்தைகள் சந்திக்கநேரும் பல சங்கடங்களை தவிர்த்து விடலாம்.
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு:savidhasasi@gmail.com