

ஊடகங்களின் வடிவம் இன்று மாறிவருகிறது. பல நாடுகள் ஊடகங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றம் செய்து வருகின்றன. அதற்குத் தகுந்தாற்போல் வாசகர்களும் மாறி வருகின்றனர். குறிப்பாக வானொலியில் டிஜிட்டல் ஆடியோ புராட்காஸ்டிங் மற்றும் டிஜிட்டல் ரேடியோ மோண்டியல் புகழ்பெற்று வருகிறது.
ஒரு காலத்தில் இது போன்ற வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரிக்க மெல்ட்ரான் போன்ற பெரிய எடிட்டிங் கருவிகள் தேவைப்பட்டன. ஆனால், இன்று நாம் கைப்பேசியிலேயே எடிட் செய்துவிட முடியும். நிகழ்ச்சியையும் கைப்பேசியிலிருந்தே ஒலிபரப்பிவிட முடியும். சர்வதேச ஊடகங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் நாம் உள்ளூர் ஊடகங் களை மட்டுமே சார்ந்து இருந்தோம். ஆனால், இன்று படித்து முடித்து வெளியே வரும் மாணவர்களுக்குச் சர்வதேச வாய்ப்புகள் பலவும் கொட்டிக் கிடக்கின்றன.
அக்கம் பக்கம் கேள்
அதனால், வெளிநாட்டு ஊடகங்களில் என்ன வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வது தவிர்க்க முடியாத ஒன்று. எப்படி எளிதாக இவற்றை அறிந்துகொள்வது? இதற்கு விடை சர்வதேச ஊடகங்கள் மட்டுமே.
உதாரணமாக ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ எனும் அமெரிக்காவின் பொதுச் சேவை ஊடகம், ‘தொடர்பியல் உலகம்’ (Communication World) எனும் நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. இந்த நிகழ்ச்சியே பலருக்கும் ஊடகத்தில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதை ஒரு காலத்தில் தெரியப்படுத்தியது.
அந்த நிகழ்ச்சி மூலமாகத்தான் இதழியல் மற்றும் தொடர்பியல் படிப்பு என் போன்ற பலருக்கு 90களில் அறிமுகமானது. எனவே ஊடகம் தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களையும் வேலை வாய்ப்பினையும், இது போன்ற பல நிகழ்ச்சிகள் நமக்கு வழங்குகின்றன.
அமெரிக்காவின் சமய வானொலியான ‘அட்வண்டிஸ்ட் உலக வானொலி’ குவாம் எனும் சிறு தீவிலிருந்து நீண்ட காலமாக தொடர்பியல் சார்ந்து ‘வேவ்ஸ் ஸ்கேன்’ எனும் நிகழ்ச்சியை ஒலிபரப்பி வருகிறது. இன்றும் இந்த நிகழ்ச்சி தொடர்பியல் மாணவர்களுக்கு பயனுள்ள ஒன்று.
இங்கு குறிப்பிட்டுள்ள வானொலிகள் அனைத்தும் வானொலிப் பெட்டியில் மட்டு மல்லாமல், கைப்பேசியிலேயே கேட்கக் கூடிய வசதியை தற்போது அறிமுகப் படுத்தியுள்ளன.
இதழியல் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு நாட்டின் ஊடக அமைப்புகளை அறிந்து கொள்வது தவிர்க்க இயலாத ஒன்று. அதற்காகவே, ‘ஒப்பீட்டுத் தொடர்பு அமைப்பு’ (Comparative Communication Systems) தாளானது முதலாண்டு மாணவர்களுக்கு பல் வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போதே சிற்றிதழ்கள் அல்லது கையெழுத்து இதழ்களை நடத்துவது பிரபலமாக இருந்து வந்தது.
அது போன்ற சிற்றிதழ்கள்தான் இன்று டிஜிட்டல் வடிவம் பெற்றுள்ளன. சமூக ஊடகங் களிலும், வலைப்பூக்களிலும் எழுதுவதன் ஊடாக எழுத்துப் பயிற்சியை மேம்படுத்திக் கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.
வலைப்பூ எழுத பழகு
வலைப்பூ ஒரு வகையில் மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. படிக்கும் போதே எழுதும் அனைத்துக் கட்டுரைகளையும் ஒரு சேர இதில் சேமித்து வைத்துக்கொள்ள முடிவதால், படிப்பு முடிந்துநேரடியாக ஊடகங்களுக்குப் போய் சேர்பவர் களுக்கு இது ஒரு நல்ல ‘போர்ட்போலியோ’.
எழுதுவது ஒரு கலை. தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எழுத்துப் பயிற்சிக்கு இன்று நிறைய செயலிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு பிழைகளைத் திருத்திக் கொள்ள முடியும். எழுதும் முன் நிறைய படிப்பது அவசியம். புதிய புத்தகங்கள் என்ன வெளியாகின்றன என்பதை அறிந்துகொள்வதும் அவசியம்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com