

இந்த தொடரை படித்துவரும் என் நண்பர், “நம் பிள்ளைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமா? அப்போதுதான் பாதுகாப்பாக இருப்பார்கள் அல்லவா!” என கேட்டார்.
குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம்தான். ஆனால், சமூக வலை தளங்களை புறக்கணிப்பதோ, செல்போன்களை பிள்ளைகளிடமிருந்து பிடுங்கி விட வேண்டும் என்பதோ இந்த தொடரின் நோக்கம் அல்ல. அப்படி செய்யவும் முடியாது. எதிர்காலம் என்பது இன்னும் பல புதிய விஷயங்களை கொண்டுவர போகிறது. அத்தகைய எதிர்கால தொழில்நுட்ப உலகத்திலும் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த தொடரின் நோக்கம்.
அப்படி என்றால் சமூக வலைதலங்களினால் விளையும் ஆபத்துகளில் இருந்து தப்பித்துப் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இந்த கேள்வியைத்தான் நாள்தோறும் சமுக வலைதள நிறுவனங்கள் தம் கோடிக்கணக்கான பயனாளர்கள், நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர்கள் என பல பேரிடமும் திரும்ப திரும்ப கேட்டு பதிலளித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரம் தம் பாதுகாப்பு விஷயங்களையும் மேம்படுத்திக்கொண்டே தான் இருக்கின்றன.
அவசரப்பட்டு பகிர வேண்டாம்!
முதலில் நீங்கள் ஒரு சமூகவலைதளத்தை பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் அதன் பாதுகாப்பு அம்சங்களை தெரிந்துகொள்வது நல்லது. ஒருவேளை தெரியவில்லை என்றால், குறிப்பிட்ட அளவேனும் அந்த சமூக வலைத்தளம் குறித்து ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் வரை அதில் உங்களை பற்றிய தனிப்பட்ட தகவல்களை பகிராமல் இருப்பது மிகவும் நல்லது.
சரி, ஒரு சமூகவலைத்தளம் பாதுகாப்பானதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? ஒரு சமுகவலைதளம் அல்லது ஒரு குறிப்பிட்ட செயலியை இணையத்தில் தேடினாலே அது தொடர்பான வழிகாட்டி கையேடு மற்றும், வீடியோக்களை உங்களுக்கு அனுப்புவார்கள். மேலும் இதுபோன்ற தொடர்கள், இது தொடர்பான புத்தகங்கள், விடியோக்களை பார்த்து அடிப்படை புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அடுத்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான தகவல் பாதுகாப்பு அம்சங்கள் என்பதும் மாறிக்கொண்டே இருக்கும். டிஜிட்டல் உலகை பொருத்தவரை நீங்கள்வாழ் நாள் முழுவதும் கற்றுக்கொண்டும், தகவல்களை மேம்படுத்திக் கொண்டேதான் இருக்க வேண்டும்.
டிஜிட்டல் யுகத்தில் மனிதன் வெற்றிகரமாக வாழ தொடர் கற்றல் என்பது மிகவும் அடிப்படையானஒன்று.
அடுத்து மற்றவர்களை பார்த்து உங்களுடைய பாதுகாப்பை கோட்டை விடாதீர்கள். என் நண்பர் மட்டும் சமூகவலைத்தளத்தில் அனைத்து தகவல்களையும் பகிர்கிறார் அவருக்கு ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை, எனக்கு மட்டும் ஆபத்து வருமா என தவறான எண்ணத்துடன் இதில் சிக்கிக் கொள்கிறவர்கள் பலர்.
உங்கள் நண்பர் என்ன சிக்கலில் மாட்டிக்கொண்டார் என்பது உங்களுக்கு அவர் சொல்லாமலேயே போகலாம். பல சைபர் குற்றங்களின் அடிப்படையே இப்படி ஏமாறும் நபர் அவமானப்பட்டு தன் குடும்பத்தாருக்குக் கூட விஷயத்தை சொல்லாமலே, அதே பாணியில் அவர் குடும்பத்தாரும் சைபர் கிரிமினல்களால் ஏமாற்றப்பட்ட கதைகளை நான் பார்த்திருக்கிறேன்.
(தொடர்ந்து பேசுவோம்)
கட்டுரையாளர்: டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com