

சில மாதங்களுக்கு முன்னர் மீம் ஒன்று சுற்றியது. “நகரங்களில்தான் சிசிடிவி கேமராக்கள் தேவை. கிராமங்களில தேவையில்ல. ஏன்னா, பாட்டிகளே போதும் யார் எங்க போறாங்க வராங்கன்னு சொல்லிடுவாங்க”.
உண்மைதான் கிராமங்கள் அப்படித்தான் இருந்தன. அன்று கிராமங்களில் செய்திகள் எளிமையாக பகிரப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவே பக்கத்து ஊர்களில், பக்கத்து மாநிலங்களில், பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை சொல்லவே தினசரிகள்.
வளரிளம் பருவத்தில் தினசரிகள் வாசிப்பது மிக அவசியமாகிறது. அது வெறும் செய்திகளை தெரிந்துகொள்வதில் மட்டுமல்ல. அந்த செய்திகளின் நடுவே கடத்தப்படும் உட்செய்திகளை உள்வாங்குவது அவசியம். மனித உறவுகளைப் பற்றி அது சொல்லித் தரும். மனித உறவுகளில் இருக்கும் சிக்கல்களை வெளிச்சமிட்டுக் காட்டும். நாட்டு நடப்பு செய்திகள் உலகின் போக்கினை நமக்கு காட்டும்.
உலகஅளவிலான செய்திகள் இன்னும் ஒருபிரம்மாண்ட உலகினை காட்டும். சிறு கட்டுரைகளை வாசிக்கும்போது அது நுட்பமான பல சன்னல்களை திறந்துவைக்கும். பல புரியாமலும் போகலாம். ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் அறிமுகமாகும். அது பாடங்களிலோ வாழ்விலோ உதவும்.
மிக முக்கியமாக தினசரி வாசிப்பு இந்த வயதில் நம் இலக்கினை நிர்ணயிக்கவும் உதவும். தினசரி செய்திகளில் ஏராளமான கதைகள் உண்டு. ஆங்கிலத்தில் ஒவ்வொரு செய்தியையும் story என்றே குறிப்பிடுகின்றார்கள். இந்த கதைகளில் உண்மையான மனிதர்கள் உலவுகின்றார்கள்.
உண்மையான நடைமுறை சிக்கல்களை காண்கின்றோம். அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பது செய்திகளின் வழியே கடத்தப்படுகின்றது. இது நமக்குள் ஒரு சித்திரத்தினை உருவாக்கும். நாம் போக வேண்டிய அல்லது செய்ய வேண்டிய உலகின் சித்திரம்.
செய்திகளில் வாசிக்கும்போது தான் “அட இப்படி ஒரு துறை இருக்கா?” என்றே ஆச்சரியப்பட வைக்கும். துறைகளும் சிக்கல் களும் தெரிந்துவிட்டால் நம் இலக்குகளும் மெல்ல மெல்ல உருவாகிடும் அல்லவா?
இன்னொன்று, உங்கள் பெயர்களும் விரைவில் உங்கள் சாதனைகளுடன் தினசரிகளில் வரவேண்டும். அதற்காக இன்றில் இருந்தே முயலுங்கள். தினசரிகளையும் தினமும் வாசிக்க நேரம் ஒதுக்குங்கள்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’
ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்
தொடர்புக்கு: umanaths@gmail.com