கதை கேளு கதை கேளு 9: ஏன் விளையாட வேண்டும்?

கதை கேளு கதை கேளு 9: ஏன் விளையாட வேண்டும்?
Updated on
2 min read

உடல்பலத்தையும் உள்ளபலத்தையும் விளையாடும்போது தான் குழந்தை களால் பெற முடியும். குழுவின் உழைப்பும், கூட்டுச் சிந்தனையுமே வெற்றி யின் ஆதாரம் என்பதை விளையாட்டுகளே எல்லா காலங்களிலும் உணர்த்துகின்றன. குழந்தைகளின் விளையாட்டுகள் பொழுதைப் போக்குவதன்று. பொழுதை ஆக்குவதாகும்.

மனிதனை முழுமையாக்குவதில் விளையாட்டின் பங்கு அளப்பரியது. பண்டைய தமிழர்களின் பண்பாட்டு வெளி விளையாட்டும், பாடல்களும் நிரம்பியவை. மனித பண்புகளை சமூக அறங்களை உழைப்பிலிருந்தும், இயற்கையிலிருந்தும் மனிதர்கள் கற்றுக் கொண்டார்கள்.

விளையாட்டு குறைந்த தற்போதைய சமுதாயத்தில் எப்போதும் தொலைக்காட்சி முன்பும், லேப்டாப் முன்பும் அமர்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் குழந்தைகளுக்கு.

இதனால் குழந்தைகள் பெற்றுள்ள பரிசு ஒபிசிட்டி எனப்படும் உடற்பருமனும் எக்கச்சக்க மனச்சிக்கல்களும்.

பாரம்பரிய விளையாட்டுகள்: கணக்கு வரவில்லை என்று தனியாக டியூஷன் வைக்க வேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடம் போக வாய்ப்பில்லாத நம் முன்னோர், தெருவில் புழுதிப்பறக்க விளையாடியவர்கள்தான். எத்தனை எண்ணையும் கூட்டவோ, பெருக்கவோ, கழிக்கவோ செய்ய, வாய்க்கணக்கிலேயே நிமிடத்தில் போட்டுவிட்டு, கால்குலேட்டர் தேடும் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள்.

ஐம்பது வருடத்திற்கு முன்பு பிறந்தவர்கள் எல்லாம் மண்ணிலேயே புரண்டு விளையாடி, நண்பர்களுடன் பேசிப்பழகி, தகவல்களை பரிமாறிக் கொள்ளும் திறன், மொழித்திறன், உடல் திறன் முதலியவற்றை தினமும் எந்தச் செலவும் இல்லாமல், இயல்பாகவே பெற்றார்கள். இப்போது COMMUNICATION SKILL வளர்க்க தனிவகுப்பு செல்ல வேண்டியிருக்கிறது.

கரோனா ஊரடங்கு காலத்தில் சில கிராமப்புற விளையாட்டுகள் உயிர்பெற்றன. தாயக் கட்டைகளின் ஓசை தெருக்களில் இசையை நிரப்பின. குழந்தைகள் நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, பல்லாங்குழி, சங்கிலி புங்கிலி, ஒரு குடம் தண்ணி ஊத்தி, தட்டாங்கல், பட்டம், நிலாச்சோறு, கோலிகுண்டு, நுங்கு வண்டி, பச்சைக் குதிரை, பம்பரம் சில்லுக்கோடு, தாயம், கும்மாயம் கும்மாயம், மரப்பாச்சி என அனைத்து விளையாட்டுகளையும் விளையாடிக் களித்தனர்.

பம்பரமும் கோலி குண்டும்: ஒவ்வொரு விளையாட்டும் குழந்தை களிடம் ஏற்படுத்தும் திறமைகளை அறிந்தால் பெற்றோரும் சமுதாயத்தினரும் குழந்தைகளை விளையாடச் சொல்லியே அனுப்பி வைப்பார்கள்.

பல்லாங்குழியும், தாய ஆட்டமும் கணக்கு பாடத்திற்கு உதவி செய்யும். நொண்டியாட்டம், தட்டாங்கல், பச்சை குதிரை விளையாட்டுகள் கை கால் உடல் உறுப்புகளை பலப்படுத்தும். ஒரு குடம் தண்ணி ஊத்தி பாடிக்கொண்டே இருபக்கமும் இருவர் நின்றுகொண்டு கை கோர்த்திருக்கும் ,இருவரின் கைக்குள் சிக்காமல் புகுந்து வெளிவருவதில் கவனம் குவிப்பர்.

பம்பரமும், கோலி குண்டும் ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தரும். அடித்துக்கொண்டு புரளும் விரோதி களையும் பெற்றுத்தரும் விளையாட்டு. ரைட்டா ரைட்டா என்ற ஆங்கிலேயன் விட்டுச்சென்ற ஆங்கிலத்தை கிராமத்து குழந்தைகளும் பேசிப் பழக உதவிய விளையாட்டு சில்லுக்கோடு.

கில்லி ஆடி நெற்றித் தழும்பை பரிசாகப் பெற்றவர் நிறைய பேர் உண்டுதானே? கில்லியை கிட்டிப்புள் என்றும் அழைப்பர். புள் என்றால் தமிழில் பறவை என்று பொருள். கில்லி தாண்டால் எழுப்பப்பட்டு பறவையைப் போல் பறந்து வருவதால் கிட்டிப்புள் என்று பெயர் பெறக் காரணமாக இருக்கிறது. இச் செய்தி இந்த விளையாட்டின் மீதே நமக்கு ஈர்ப்பை தருகிறது அல்லவா?

ஓர் இனத்தின் பண்பட்ட வாழ்வை விளையாட்டுகள் வெளிப்படுத்துகின்றன. விளையாட்டில் ஈடுபட வயதோ பாலினமோ குறுக்கே நிற்பதில்லை. உடல் திறனும் மனமகிழ்ச்சியும் பெற்ற குழந்தைகளே வீரத்தின் விளை நிலங்களாக உள்ளார்கள். வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும், எதிர்கொள்ளும் மனவலி மையை போராடும் குழந்தைகள் பெறுகிறார்கள்.

‘சில்லுக்கோடு’ நூலின் ஆசிரியர் கோவை சதாசிவத்தின் புத்தகத்தை வாசித்தால், நம் மரபு விளையாட்டை விளையாடுவதால் கிடைக்கும் முழுப்பயனையும், விளையாடும் முறையையும் அறியலாம்.

அவ்வப்போது குடும்பமாக பெற்றோர் மற்றும் குழந்தைகளை காட்டுப்பயணம் அழைத்துச் சென்று குழந்தைகளுக்குகாட்டு உயிர்களை, பூச்சிகளை, பறவைகளை, இயற்கையை பற்றிய அறிமுகத்தை மேற்கொள்வார் கோவை சதாசிவம். அந்தப் பயணத்தில் இணைவது நம் மரபையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள சிறந்த பயிற்சியாகும்.

கட்டுரையாளர்:குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்.

தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in