உலகை மாற்றும் குழந்தைகள் 9: மாற்றுப் பாலின தேவதை!

உலகை மாற்றும் குழந்தைகள் 9: மாற்றுப் பாலின தேவதை!
Updated on
2 min read

மாற்றுப் பாலின தேவதை!

“அம்மா இங்க பாருங்கம்மா” மகிழன் கத்தினான். “ஆரம் பிச்சிட்டீங்களா! ஏன்டி, ஏழாங்கிளாஸ் வந்துட்டாய். இன்னும் ஏன் தம்பியோட சண்டை போடுறாய்” என்று தேர்வுத்தாள் திருத்திக் கொண்டிருந்த அம்மா கேட்டார். “நான் இல்லம்மா, அப்பாதான்! எனக்கும் தம்பிக்கும் அப்பா கேர்ல்ஸ் சாக்லெட் வாங்கிட்டு வந்திருக்காங்க.

பாய்ஸ் சாக்லெட்தான் வேணும் என்று கத்துறான்” என்றாள் மகிழினி. அறைக்குள் வந்த அம்மா, அப்பாவுடைய முகத்தையே பார்த்தார்.

“இங்கேதான் இப்படின்னா, அமெரிக்காவிலும் இதே பிரச்சினைதான்போல. உங்க தம்பி சொன்னார், சிறுமிகளுக்கு பிங்க் நிறமாம், சிறுவர்களுக்கு நீல நிறமாம்.

ஏன்தான்குழந்தைகள் மனதில் பிரிவினையை விதைத்து வியாபாரம் செய்யுறாங்களோ! ஆணுக்கும் பொண்ணுக்குமே இப்படினா, மாற்றுப் பாலினத்தவரின் நிலை இன்னும் கொடுமை இல்லையா?” என்று ஆதங்கப்பட்ட அம்மா, ஜாஸ் ஜென்னிங்ஸ் பற்றி சொன்னார்கள்.

காதுகளுக்கு இடையில்: அமெரிக்காவில் 2000-ம்ஆண்டு ஜரெட் பிறந்தான். குடும்பமே குதூகலமானது. நீல நிற ஆடைகளை அணிவித்து பெற்றோர் மகிழ்ந்தார்கள். ஒன்றரை வயதில், அக்காவின் ஆடைகளை ஜரெட் விரும்பி அணிந்தான். பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடினான்.

“செல்ல பையா இங்கே வாங்க!” என்று அம்மா அழைத்தபோது, “நான் பையன் இல்லை, பொண்ணு” என்றான். நிலைமையின் தீவிரம் உணர்ந்த பெற்றோர் மருத்துவரிடம் சென்றார்கள். உடலியல் மற்றும் மனவியல் மருத்துவர்கள் ஜரெட்டைப் பரிசோதித்தார்கள். “ஆண் உடலமைப்பைக் கொண்டிருந்தாலும், ஜரெட் ஒரு பெண் குழந்தை” என்றஅறிவித்தார்கள்.

அதைத் தொடர்ந்து ஜரெட்டை பெண் குழந்தையாக ஏற்றுக் கொண்டார்கள். மாற்றுப்பாலின தேவதை என்று அழைத்தார்கள். ஜரெட் வீட்டில் பெண் குழந்தையாக வாழ்ந்தாள். தன் பெயரை, ஜாஸ் ஜென்னிங்ஸ் என மாற்றினாள்.

வெளியுலகத்துக்கு எப்படிச் சொல்வது? பெற்றோர் குழம்பினார்கள். பள்ளிக்கூடத்தில், “ஆண் குழந்தை” என்று சொல்லி சேர்த்தார்கள். ஆணாக நடிக்க முடியாமலும், பெண்ணாக வாழ முடியாமலும் ஜாஸ்துன்புறுவதைப் பார்த்து துயருற்றார்கள். மகளின் நலன் கருதி, ஐந்து வயதில் வீட்டுக்கு வெளியிலும் பெண் உடையுடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார்கள்.

ஆனாலும், தொடக்கப்பள்ளி காலம் முழுவதும், சிறுவர்களின் கழிப்பறையைப் பயன்படுத்த இயலாமலும், சிறுமிகளின் கழிப்பறைக்குள் செல்ல அனுமதி இல்லாமலும் ஜாஸ் துயருற்றாள். விளையாட்டு அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டாள்.

கீழ்வானம் சிவந்தது: 2006-ல், ஜாஸ் குறித்த ஆவணப் படம் (20/20 With Barbara Walters) தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மாற்றுப்பாலினத்துடன் வாழ்கிறவர்கள் அனுபவிக்கும் இன்னல்களை மக்கள் அறிந்தார்கள். எண்ணற்ற நிகழ்ச்சிகளில் உரையாற்ற ஜாஸைஅழைத்தார்கள். ஜாஸ் உரையாற் றினார்.

பெற்றோருடன் இணைந்து, Transkids Purple Rainbow அமைப்பை ஏழு வயதில் தொடங்கினார். எந்த பாலினம் என உறுதிப்படுத்த முடியாமல் தவிக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு உதவுவது, நிபந்தனையற்ற அன்பு, விழிப்புணர்வு மற்றும் சகிப்புத்தன்மை வழியாக மாற்றுப்பாலின விருப்பம் உள்ளவர்களை ஏற்றுக்கொள்ள வழிகாட்டுவது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக் கங்களாகும்.

பாலினத்தவர்களின் தூதுவர்: 2013-ல் Purple Rainbow Tails அமைப்பை ஜாஸ் உருவாக்கினார். “கடற்கன்னிகளுக்கு பிறப்புறுப்புகள் இல்லை. அழகான வால் மட்டுமே உள்ளது” என்று சொல்லி, கடற்கன்னிகளின் வாலினைச் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். வருமானத்தின் ஒரு பகுதியை மாற்றுப்பாலின உணர்வுடனும், தேர்வுடனும் வாழ்கிறவர்களின் நலனுக்காகச் செலவிடுகிறார்.

ஒரு குழந்தை தன் பாலினத்தைப் புரிந்துகொள்ளவும் தேர்வு செய்யவும் வழிகாட்டுவதற்காக தம் பெற்றோருடன் இணைந்து புத்தகம் எழுதியுள்ளார்.

15 வயதில், “இப்படிக்கு ஜாஸ்” எனும் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் நடத்த ஆரம்பித்தார். இதுவரை 7 பருவங்கள் நடத்தியிருக்கிறார். மாற்றுப்பாலினத்தவராக அவர் சந்தித்த இடையூறுகள், சவால்கள், குழப்பங்கள், முன்னெடுப்புகள், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அனைத்தும்இந்நிகழ்ச்சியின் மையமாகும். LGBTQஎனப்படும் பல்வேறு வகையான மாற்றுப் பாலினத்தவர்களின் தூதுவராக தொடர்ந்து செயல்படுகிறார் ஜாஸ்.

கட்டுரையாளர்:எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர். தொடர்புக்கு:sumajeyaseelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in