

பள்ளிக்கூடத்தில் நடத்தும் அன்றாடப் பாடங்களை தினந்தோறும் முழுமையாக படித்ததன் பலனாக அதிகாரியானவர் சி.அரியசக்தி. பல் மருத்துவரான இவர், ஐஓஎப்எஸ் அதிகாரியாக மத்தியப் பாதுகாப்புத் துறையின் துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவின் கே.வேப்பங்குளத்தை சேர்ந்த விவசாயியான செல்லசாமி, லட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் சி.அரியசக்தி. அருகில் உள்ள குண்டுகுளத்தின் கமுதி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை அரியசக்தி படித்துள்ளார். ஏழாம் வகுப்பில் சைக்கிள் வாங்கும் வரை பள்ளிக்கு அன்றாடம் நடந்தே சென்றுள்ளார்.
கல்லூரணியில் எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வரை பயின்றார். பள்ளிப் படிப்பை முழுக்க தமிழ்வழியில் மேற்கொண்டவர் எல்லா வகுப்புகளிலும் முதல் மாணவராக வந்துள்ளார். சக மாணவர்களை போல பொறியியலுக்குக் குறிவைத்தவரை அவரது தந்தை மருத்துவராக்க விரும்பியுள்ளார்.
அப்பாவின் சொல் தட்டாத அரியசக்தி எம்பிபிஎஸ் படிப்பில் சேர முயன்றார். அன்றைய தமிழக அரசால் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. ஒரே ஒரு மதிப்பெண் குறைவால் அரியசக்திக்கு பொது மருத்துவம் தவறியது. பிறகு பல் மருத்துவக் கல்வி கிடைத்தது.
நம்பர் 1 மாணவர்!
இது குறித்து அதிகாரி அரியசக்தி கூறுகையில், “முதல் வகுப்பில் இருந்தே முதல் ரேங்க் மாணவனாக இருந்ததால், தொடர்ந்து நான் வகுப்பு தலைவனாக இருந்தேன். தலைவனாக இருந்தால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாது என கணித ஆசிரியர் சி.டி.சுப்பரமணியன் ஒருமுறை அறிவுறுத்தினார். இதைஏற்று பிளஸ் 1-லிருந்து அதை தவிர்த்தாலும், அன்று கற்ற தலைமைப்பண்பு இப்போது நிர்வாகத் திறனில் உதவுகிறது” என்றார்.
மருத்துவமா, யூபிஎஸ்சியா?
பல் மருத்துவம் முடித்த பின்மதுரையில் ஒரு கிளினிக் தொடங்கினார் அரியசக்தி. அப்போது அவருக்கு யூபிஎஸ்சியின் குடிமைப்பணி தேர்வு அறிமுகமானது. இதைவெல்ல 2009-ல் சென்னையில் உள்ள கிரசண்ட் பல்கலைக்கழகத்திலும் பிறகு அண்ணாநகர் அரசு பயிற்சி நிலையத்திலும் குடிமைப் பயிற்சிக்கான இலவசப் பயிற்சி பெற்றார். விருப்பப் பாடங்களாக சமூகவியல், புவியியல் ஆகியவற்றை தேர்வு செய்தார்.
சனி, ஞாயிறுகளில் மதுரை வந்து கிளினிக்கையும் பார்த்தபடி முதன்முறை பிரிலிம்ஸ் தேர்வு எழுதி தவறவிடவே கிளினிக்கை முழுவதுமாக மூடிவிட்டார். தொடர்ந்து யூபிஎஸ்சி தேர்வில் தீவிர கவனம் செலுத்தியுள்ளார். இதன் பலனாக 2010-ல் நேர்முகத்தேர்வு வரை சென்றுள்ளார். 2011-ல் மூன்றாவது முயற்சியில் ஐஓஎப்எஸ் எனும் இந்திய தளவாட தொழிற்சாலை பணி கிடைத்தது.
இது பற்றி அரியசக்தி கூறுகையில், “குடிமைப்பணி தேர்வுக்கான பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றாலும், நேர்முகத்தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டது. ஆங்கிலம் சரளமாக பேச தெரியாததே இதற்கு முக்கிய காரணம்” என நினைவுகூர்ந்தார்.
முதன்முறையாக ஏற்றுமதி!
யூபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வில் ராணுவப் பிரிவில் ஐடிஏஎஸ், ஐடிஈஎஸ், ஐஓஎப்எஸ், ஏஎப்எச்க்யுஎஸ் ஆகிய நான்கு வகைப் பணிகள் உள்ளன. இவற்றில் ஐஓஎப்எஸ் பெறுபவர்களுக்கு இரண்டு வகையாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒன்று பொறியியல் பட்டதாரிகளுக்காக அக்கல்வியின் பாடத்தில் நடத்தப்படுகிறது.
இவர்கள் மத்திய பாதுகாப்புத் துறையின் தளவாடத் தொழிற்சாலைகளின் தொழிற்பிரிவில் அமர்த்தப்படுகிறார்கள். இதே பணிக்கு மற்றொரு வகையில் அனைத்து பிரிவுகளின் பட்டதாரிகளுக்கு பொதுப் பாடங்களில் நடத்தப்படுகிறது. அதிகாரி அரியசக்தியை போல் இதைவென்றவர்கள் தளவாடத் தொழிற்சாலைகளின் நிர்வாகங்களில் அமர்த்தப்படுகிறார்கள்.
இது குறித்து அரியசக்தி சொல்லும்போது, “பள்ளி காலத்தில் எல்லா விதமான விளையாட்டுக்களையும் நான் விளையாடுவேன். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி முடித்தவுடன் அதன் மீது கேட்கும் கேள்விகளுக்கு முதல் ஆளாக பதில் அளிப்பதும் நானே.
அன்றாடம் நடத்தப்பட்ட பாடங்களை வீடு திரும்பிய பின் தவறாமல் ஒருமுறை படித்து மனதில் பதியவைத்து விடுவேன். இதுவே எனது இறுதி தேர்வுக்கு போதுமானதாக இருந்தது. பள்ளியில் கிடைத்த இந்த பயிற்சி பிற்காலத்தில் யூபிஎஸ்சியை வெல்ல உதவியது” எனப் பெருமிதம் கொள்கிறார்.
திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் 2015-ல் உதவி பணிமேலாளராக அரியசக்தி அமர்த்தப்பட்டார். 5 வருடங்கள் பணியாற்றிய பின் பணி மேலாளராக உயர்த்தப்பட்டார். இவர் பணியாற்றும் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று திருச்சி அஸால்ட் ரைபிள்.
இது, ரஷ்ய நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்ட ஏகே-47 துப்பாக்கியின் புதிய வகை. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திருச்சிஅஸால்ட் ரைபிள் தயாரிக்கப்படுகிறது. ஏகே-47 போல், திருச்சி அஸாட் ரைபிளை இயக்குபவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் இல்லை.
இந்த தானியங்கி துப்பாக்கிகளை இந்தியா முதன்முறையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும் தொழிற்சாலையின் அதிகாரியாக தற்போது உயர்ந்து நிற்கும் அரியசக்தி, பல் மருத்துவம் பயிலுகையில் 2004-ல் வாணி எனும் பட்டதாரியை மணமுடித்தார்.
2005-ல் இவர்களுக்கு மகன் பிரஜன், 2010-ல் மகள் விஜயலட்சுமி பிறந்தனர். அதன் பிறகே யூபிஎஸ்சி-க்கு அரியசக்தி குறிவைத்தார். இதன்மூலம், யூபிஎஸ்சி தேர்வு எழுத குடும்ப வாழ்க்கை ஒரு தடை இல்லை என அதிகாரி அரியசக்தி நிரூபித்துள்ளார்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in