சின்னச் சின்ன மாற்றங்கள் - 8: உங்க ஊரைத் தெரியுமா?

சின்னச் சின்ன மாற்றங்கள் - 8: உங்க ஊரைத் தெரியுமா?
Updated on
1 min read

இதென்ன கேள்வி எங்க ஊரைத் தெரியாமலா என்ற பதிலே வரும். ஒவ்வொருவரும் வாழுமிடத்தை நன்றாக புரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாழிடத்தினை செம்மைப்படுத்தினாலே உலகம் செழிக்கும். அப்ப முதல்ல நம்ம ஊரைப் பற்றி நல்லா தெரிஞ்சிகிட்டாத்தானே அதெல்லாம் முடியும்.

சரி ஊரைத் தெரியும் என்றால் என்ன? உங்க ஊர்ல என்னென்ன அத்தியாவசியம்னு தெரியுமா? நூலகம் எங்க இருக்கு தெரியுமா? அஞ்சல் நிலையம்? பால்வாடி? அரசுப்பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகம், ஊரின் கவுன்சிலர் எங்க இருப்பார்? அரசு மருத்துவமனை, எங்க கரோனா தடுப்பூசி செலுத்துறாங்க? இப்படி அடுக்கிட்டே போகலாம். இது எல்லாம் உங்க ஊர்ல/கிராமத்துல/வசிக்கும் பகுதியில இருக்கும், இல்லை மிக அருகில் எங்காச்சும் கண்டிப்பா இருக்கும்.

ஊரின் வரைபடத்தை வரைந்து ஒரு எல்லையை நிர்ணயிச்சிக்கோங்க. அந்த எல்லைக்குள்ள இருக்கிற வீதிகள், வீடுகள், விவசாய நிலங்கள், பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ நிறுத்தங்கள், ரயில் நிலையம் இருக்கா, பிரதான சாலை சந்திப்பு இதை எல்லாம் குறிப்பிடலாம். ஒரு வகுப்பே கூட இதை ஒரு செயல்பாடாக எடுத்து செய்யலாம்.

இந்த செயல்பாடு செய்யும்போது நம்ம உள்ளூர் நபர்களிடம் நிறைய உரையாடல் நிகழும். புதிய தகவல்கள் கிடைக்கும். சிலர் ஏன் இந்த வேலையை செய்றீங்கன்னு கேள்வி எழுப்புவாங்க. தொழில்நுட்பத்தின் மூலம் மிக எளிதாக கூகுள் மேப்பில் இதை பார்க்கலாம். ஆனால் தானாக தேடி கண்டுபிடிக்கும்போது அலாதி மகிழ்ச்சி உண்டாகும். கடைசியா கூகுள் மேப்பையும் பார்த்து நாம சேகரிச்ச தகவலையும் அதையும் ஒப்பிடலாம்.

இதனால் என்ன நன்மை? நம் ஊரைப் பற்றிய ஆழமான புரிதல் நமக்கு கிடைக்கும். ஒவ்வொன்றையும் தேடிப்போகும் போது எதெல்லாம் இல்லைன்னு புரியும். ஏன் இல்லைன்னு கேள்விகள் வரும். இருக்கின்றவை எல்லாம் இன்னும் எப்படி சிறப்பாக செயல்படணும்னு ஒரு கனவும் வரும்.

எந்த தெரு நல்லா இருக்கு, மழை பெய்தால் மழை நீர் நிற்காதுன்னும் வரைபடத்தில் குறிப்பிடலாம். வரைபடங்களை பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். ஒரு வரைபடத்தில் அந்த ஊரின் உயரம் பள்ளங்கள் உள்ளிட்ட நிலப்பரப்பை மட்டும் குறிக்கலாம். அந்த ஊரின் வளங்களையும் போதாமைகளையும் தெரிஞ்சிக்கலாம்.

நம்ம பகுதியின் வளங்களை தெரிந்து கொள்வதைப் போலவே நம்முடைய போதாமைகளையும் இல்லாமைகளையும் தெரிஞ்சிக்கணும். அதுக்கு நாம நம்ம ஊரை தெரிஞ்சிக்கணும். ஆரம்பிக்கலாமா?

(தொடரும்)

கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.

‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’

ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்

தொடர்புக்கு: umanaths@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in