உலகை மாற்றும் குழந்தைகள் 8: புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடியுங்களேன்!

உலகை மாற்றும் குழந்தைகள் 8: புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடியுங்களேன்!
Updated on
2 min read

“என்ன! குறள் நல்லாருக்கியா?” அத்தையின் குரல் கேட்டதும் மகிழ்ச்சியில் திரும்பினாள் குறளரசி. ஓடிச்சென்று, தலை குனிந்து கைகூப்பினாள். தலையில் கை வைத்து ஆசிர்வாதம் கொடுத் தார் அத்தை. அத்தை வந்தாலே, குறளை கையில் பிடிக்க முடியாது.

வாசலில் நாற்காலி போட்டு மணிக்கணக்காக பேசுவார்கள். “அத்தையும் மருமகளும் அப்படி என்னதான் பேசுவீர்களோ, தெரியல” என்று அம்மா அடிக்கடி குறைபட்டுக் கொள்வார். அத்தைக்கு நிறைய கதைகள் தெரியும். அதிலேயும், சின்ன வயதிலேயே சாதித்தவர்களோட கதையென்றால் குறளுக்கு ரொம்ப பிடிக்கும். போன மாதம்கூட, அலெக் சாண்ட்ரா பற்றி சொன்னார்கள்.

துணிவுடைய நெஞ்சத்தினள்

1996-ம் ஆண்டு அமெரிக்காவில் அலெக்சாண்ட்ரா ஸ்காட் பிறந்தாள். அலெக்ஸ் என்று செல்லமாக கூப்பிட்டார்கள். பால் நிலா முகமும், பால் ஒட்டிய உதடுகளும், நீண்ட சுருள் முடியும், நீல விழிகளும் அலெக்ஸை அழகாக்கின. மூடிய விரல்களுக்குள் பாசத்தைச் சேமித்து உறங்கினாள். அண்ணனின் கைகளில் ஆனந்தமாகினாள்.

மாதங்கள் கடந்தன. அலெக்ஸின் உடல் வளர்ச்சியில் முன்னேற்றம் குறைந்தது. முகத்தில் சோர்வு தெரிந் தது. முதல் பிறந்த நாளுக்கு இன்னும் சில நாட்கள் இருக்கையில், பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மருத்து வர்கள் பரிசோதித்தார்கள். அலெக்ஸை, நியூரோபிளாஸ்டோமா (Neuroblastoma) புற்றுநோய் பாதித் துள்ளதைக் கண்டுபிடித்தார்கள். “புற்றுநோயில் இருந்து குணமானால் கூட, காலூன்றி நடக்க முடியுமா என்பது சந்தேகமே” என்றார்கள்.

இரண்டு வாரங்கள் சென்றன. குழந்தையின் முகத்தருகே குனிந்தபெற்றோர், “காலை உதைங்க செல்லம்” என்று கொஞ்சினார்கள். குழந்தை காலை மெல்ல அசைத்தாள். அவள் மன உறுதிமிக்கவள். இரண்டாவது பிறந்தநாள் வருவதற்குள், தவழவும், காலில் கட்டப்பட்ட மூட்டுத்தாங்கி கருவியுடன் நிற்கவும் ஆரம்பித்தாள். வலியுடன் போராடி பெரும் முயற்சியெடுத்து விரைவில் நடக்கத் தொடங்கினாள். “உன்னால் முடியாது” என்று சொல்லப்பட்டதை முறியடித்தாள். மறுபடியும் கட்டி வளரத் தொடங்கியது. புற்றுநோய் சிகிச்சையினால், தலைமுடிகள் உதிர்ந்தன. துணிவைத் துணை கொண்டாள்.

2000-ம் ஆண்டு, ஸ்டெம் செல்மாற்று அறுவை சிகிச்சை செய்தார்கள். ஏனென்றால், சிகிச்சையின் போதுஉடலில் உள்ள ஸ்டெம் செல்கள்பாதிப்புக்குள்ளாகும். அதனால், அலெக்ஸின் உடலில் ஆரோக்கியமான செல்கள் அதிகளவில் வளர்வதற்காக, வெளியில் இருந்து, புதிய ஆரோக்கியமான செல்களைச் செலுத்தினார்கள்.

எலுமிச்சை பழரசம்

“என் நோயைக் குணப்படுத்துவதற்கு நிச்சயம் ஏதாவது இருக்கத்தான் செய்யும். அது என்னவாக இருக்கும்? அதைக் கண்டுபிடிக்க நான் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எந்த வகையில் உதவலாம்?” என்று அம்மாவிடம் கேட்டாள். “வீட்டுக்கு வெளியே எலுமிச்சை பழரச கடை வைத்துத் தாருங்களேன்” என்றாள். அமெரிக்காவில், சிறுவர் சிறுமியர் கோடைகாலத்தில் வீட்டுக்கு வெளியேஎலுமிச்சை பழசர கடை வைப்பதுகொண்டாட்டமான ஒரு வழக்கமாகும்.

எலுமிச்சை சாரு எடுத்து, சீனி கலந்து, தண்ணீர் சேர்த்து, ஐஸ் போட்டு, மேசைக்கு கொண்டு வருவார்கள். மேசையை அழகாக ஜோடிப்பார்கள். பொன்மொழிகள் எழுதி வைப்பார்கள். அருகிலேயே விலைப்பட்டியல் இருக்கும். அவ்வழியே பயணம்போகிறவர்கள் நின்று, பழரசம் அருந்தி குழந்தைகளை மகிழ்வித்துச் செல்வார்கள்.

அண்ணனின் உதவியுடன், அலெக்ஸின் கடை உருவானது. “இன்றைய நாள் கிடைக்கும் பணம் முழுவதும், புற்றுநோய் ஆராய்ச்சிக்காக, பிலடெல்பியாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு வழங்கப்படும்”எனும் பதாகையுடன் அலெக்ஸ் அமர்ந்தார். 2000 அமெரிக்க டாலர்கள் கிடைத்தது. இச்செய்தி அறிந்த,மாணவர்கள், தங்கள் கடைகளில் கிடைத்த டாலர்களை நன்கொடையா கக் கொடுக்கத் தொடங்கினார்கள். பல நாடுகளில் தங்கள் வீட்டுக்கு முன்பாக எலுமிச்சை பழரச கடை வைத்து, அதன் வருவாயை பலர் அனுப்பினார்கள். 10 லட்சம் அமெரிக்க டாலருக்கு மேலாக சேகரித்துக் கொடுத்த அலெக்ஸ், 8 வய தில் 2004-ம் ஆண்டு உயிரிழந்தார்.

அலெக்ஸின் குடும்பத்தினர், நண்பர்கள், உலகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் சிறுமியின் கனவைமுன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்தார்கள். Alex’s Lemonade StandFoundation உருவானது. தற்போதுவரை, 250 மில்லியன் டாலருக்கு மேல் சேகரித்து, குழந்தைகள் புற்றுநோய் தொடர்பான 1000க்கும் மேற்பட்ட ஆய்வுகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்தொடர்பு: sumajeyaseelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in