

வணிக மேலாண்மை, ஹோட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட மேலாண் படிப்புகளில் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர விரும்புவோருக்கு நுழைவு வாயிலாகிறது, UGAT நுழைவுத் தேர்வு.
எந்தவொரு படிப்பானாலும் அதனை எங்கே படிக்கிறோம் என்பதை பொறுத்தும் அந்த படிப்பின் வெற்றி அமைந்திருக்கும். அந்த வகையில் கலை அறிவியல் கல்லூரிகளில் பரவலாக கிடைக்கும் பல்வேறு மேலாண் படிப்புகளை, முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயில UGAT (Under Graduate Aptitude Test) நுழைவுத் தேர்வு உதவுகிறது.
பி.பி.ஏ., பி.ஹெச்.எம். (ஹோட்டல் மேனேஜ்மெண்ட்), உள்ளிட்ட படிப்புகளில் சேர இந்த தேசிய அளவிலான இளநிலை தகுதித் தேர்வு உதவுகிறது. இதன் மூலமாக ஒருங்கிணைந்த எம்.பி.ஏ., மற்றும் பி.சி.ஏ., பி.காம்., படிப்புகளில் சேரவும் உயர்கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. நுழைவுத் தேர்வை நடத்தும் அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்புடன் இணைவு பெற்ற பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர இயலும். தகுதித் தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை தீர்மானிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
UGAT நுழைவுத் தேர்வு எழுத பிளஸ் 2தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதி அதன் முடிவுகளுக்காக காத்திருப்போரும் இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதித் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் நடைபெறும். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்புவோர்,
அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்போர், அதற்கான இணையதளத்தில் தங்களது சுய விபரங்களைப் பதிவு செய்த பின்னர் விண்ணப்ப நடைமுறைகளைத் தொடங்கலாம்.
விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைப்பதுடன், தேர்வு கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம். வரைவோலை(டிடி) மூலம் கட்டணம் செலுத்தவும் அனுமதி உண்டு. நிறைவாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அச்செடுத்து வைத்துக்கொள்வது, கலந்தாய்வு நடைமுறைகளின்போது உதவும்.
தேர்வு நடைமுறைகள் என்ன?
பிபிஏ, ஹோட்டல் மேனேஜ்மென்ட், பி.காம், பிசிஏ என பயில விரும்பும் இளநிலை படிப்பு எதுவாயினும் நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அடிப்படையில் பொதுவானதே. ஆங்கில மொழித்திறன், பொது அறிவு ஆகியவற்றோடு Numerical and data analysis, Reasoning and intelligence, Scientific aptitude போன்றவற்றிலும் தயாரிப்புகள் மேற்கொள்வது அவசியம். சரியான விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் கொள்குறிவகையிலான வினா (objective type questions) அடிப்படையிலான 2 மணி நேர (ஹோட்டல் மேனேஜ்மென்ட்-க்கு மட்டும் 3 மணி நேரம்) தேர்வு அமைந்திருக்கும். தவறான விடைகளுக்கு மதிப்பெண் கழிக்கும் நடைமுறையும் உண்டு.
எங்கே, எப்போது?
வருடம் ஒருமுறை தேசிய அளவில் இடம்பெறும் இந்த நுழைவுத் தேர்வுக்கான நடைமுறைகள் வழக்கமாக ஜூன் மாதத்துக்குள் விண்ணப்பிக்கும் வகையில் அமைந்திருக்கும். நடப்பாண்டு இந்த நுழைவுத் தேர்வு ஜூன் 25 அன்று நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூலை 4 அன்று வெளியானது.
தமிழகத்தின் சென்னை, கோவை உட்பட தேசத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் செயல்படும். நுழைவுத் தேர்வினை நடத்தும் அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் அங்கீகார இணையதளத்தில் தேர்வுக்கான அறிவிப்புகள் தொடங்கி தேர்வு முடிவு வரை வெளியாகும்.
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
விண்ணப்ப நடைமுறை உள்ளிட்ட விபரங்களுக்கு: https://bit.ly/3R8pKc5
தேர்வுக் கட்டணம் ரூ.750.
தேர்வு நடைபெறும் மாதம்: ஜூன்