யோகா பலம் - 8: தண்டுவடத்தைப் பலப்படுத்தும் சேதுபந்தாசனம்

யோகா பலம் - 8: தண்டுவடத்தைப் பலப்படுத்தும் சேதுபந்தாசனம்
Updated on
1 min read

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில், அனைவரும் அவதிப்படுவது முதுகு மற்றும் தண்டுவடப் பிரச்சனைகளினால்தான். நம்முடைய கவனக்குறைவினாலும் அலட்சியத்தாலும் உட்காரும் போதும், நடக்கும் போதும், தூங்கும் போதும் நம்முடைய தண்டுவடம் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவே தண்டுவடத்தை பலப்படுத்தும் ஒரு ஆசனத்தைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம்.

தண்டுவடத்தை வலிமையாக்க அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டியது சேதுபந்தாசனம். துவிபாதபீடம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தின் இறுதி நிலையில், கழுத்தில் இருந்து கால் வரை பீடம் போன்று காணப்படுவதால் இந்த பெயர்.

சேதுபந்தாசனம் செய்வது எப்படி ?

உடலின் பின் பகுதி தரையில் இருக்குமாறு படுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து முழங்கால்களை மடித்து வைக்க வேண்டும். பாதங்கள் தரையில் பதிந்து இருக்குமாறு வைக்க வேண்டும். இரண்டு கால்களையும் உடலுக்கு அருகே இருக்குமாறு சேர்த்து வைக்க வேண்டும். கனுக்கால்களை கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். தாடையை கீழே இறக்கி, கண்களை மூடிக் கொள்ள வேண்டும். இப்பொழுது மூச்சை இழுத்தவாறு இடுப்பை உயர்த்த வேண்டும்.

கழுத்து மற்றும் மார்பு பகுதியில் இருந்து நன்றாக இடுப்பை உயர்த்த வேண்டியது முக்கியம். இந்த நிலையில் சிறிது நேரம் இருந்து விட்டு மூச்சை விட்டவாறு மறுபடியும் இடுப்பை கீழே இறக்கி பழைய நிலைக்கு திருப்ப வேண்டும். ஆரம்பத்தில் சிலருக்கு கனுக்கால்களை பிடிப்பதில் சிரமம் இருக்கும். அவர்கள் சிறிது பழகும் வரை கைகளை கால்களுக்கு அருகே வைத்துக் கொள்ளலாம் அல்லது கைகளை தோல்பட்டை நிலையில் வைத்தும் செய்யலாம்.

தைராய்டு சிக்கல் குணமாகும்!

முதுகெலும்பிற்கு மிகவும் பயனுள்ள இந்த ஆசனம், செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் பலன்கள் அதிகம். இடுப்பை உயர்த்தும் போது நெஞ்சுப் பகுதியில் இருந்து உயர்த்துவதால் மார்பு விரிவடைந்து, மூச்சு விடுதல் சீராகும். மேலும் தொடை பகுதிகளும் நன்றாக வலுப்பெறும். தாடையை கீழிறக்கி ஒரு நிலையில் வைப்பதால், தைராய்டு சுரப்பிகள் தூண்டப்படுகிறது. இதனால் தைராய்டு பிரச்சினை இருப்பவர்கள் இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.

இடுப்பை உயர்த்தும் போது வயிற்றுப் பகுதி விரிவடைவதால், அந்தப் பகுதி தசைகள், மற்றும் உறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைக்கிறது. மொத்தத்தில், உடலின் அனைத்து உறுப்புகளும் பலன் பெறுவதால், ஏனைய கடினமான ஆசனங்கள் செய்வதற்கான ஆரம்பநிலை பயிற்சி ஆசனமாகவும் இதைக் கொள்ளலாம்.

பயிற்சி எங்களுடையது…முயற்சி உங்களுடையது…ஆரோக்கியம் நம்முடையது.

(யோகம் தொடரும்)

கட்டுரையாளர்: யோகா நிபுணர்

யோகா செய்பவர்: அம்ருத நாராயணன்

படங்கள்: எல்.சீனிவாசன்

தொகுப்பு: ப.கோமதி சுரேஷ்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in