

கணிதத்தில் தேர்ச்சியடைந்த ராமானுஜம் பிற பாடங்களில் தோற்றதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என்று வினவினார் ஆசிரியர் எழில்.
அவர் தனக்குப் பிடித்த கணிதத்தில் மட்டும் கவனம் செலுத்தினார். அதனால் அதில் தேர்ச்சி அடைந்தார். பிடிக்காத பிற பாடங்களில் கவனம் செலுத்தவில்லை. ஆகவே தோல்வி அடைந்தார் என்றாள் அருட்செல்வி. அருமை என்று பாராட்டினார் எழில்.
ராமானுஜம் பிற பாடங்களில் தோற்றாலும் கணிதத்தில் உலகப் புகழ்பெற்றாரே என்றான் காதர். ராமானுஜம் விதிவிலக்கு. விதிவிலக்குகள் எல்லாம் வழிகாட்டிகளாக எடுத்துக் கொண்டு பின்தொடரக் கூடாது. அவர் கணித அறிவை அறிந்து அவருக்கு உதவ, ஹார்டி என்பவர் இருந்தார்; அதனால் ராமானுஜம் புகழ்பெற்றார்.
ஹார்டியைப் போல ஒருவர் எப்பொழுதும் எல்லோருக்கும் கிடைப்பதில்லையே! அப்படி வாய்த்தால் அது அதிசயமே. எனவே, ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்தவற்றையும் பிடிக்காதவற்றையும் பற்றி அறிந்திருக்க வேண்டும். பிடித்தவற்றுள் மூழ்கிவிடக் கூடாது. பிடிக்காதவற்றால் தனக்குப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கினார் எழில்.
பொருத்தமான வாய்ப்பை தேடுதல்
ஒருவர் தனது அடையாளம், பலம், பலவீனம், பிடித்தவை, பிடிக்காதவை ஆகியவற்றை அறிந்துகொள்வதால் அவருக்கு என்ன பயன் என்று கேட்டாள் பாத்திமா. புன்னகைத்த எழில், அவர் தானே தன்னை மதிப்பிடுவார். தன்னைப் பிறர் எவ்வாறு மதிப்பிடுகின்றனர் என்பதைக் கவனிப்பார். தனது தடைகளை அறிவார். அவற்றைத் தாண்டுவார். தன்னூக்கம் பெறுவார். தன்னுயர் மதிப்பைப் பெருக்குவார்.
தன்னம்பிக்கை அடைவார். தனது நடத்தைகளைப் பண்படுத்துவார். தனதுஇலக்குகளை அமைப்பார். அவற்றை அடையும் வழிகளைச் சிந்திப்பார். தனக்குப் பொருத்தமான வாய்ப்பைத் தேர்ந்தெடுப்பார். அதில் தனக்குத்தானே வகுத்துக் கொண்டகட்டுப்பாட்டோடு பயணிப்பார். தனது கடமைகளை நிறைவேற்றுவார். தனதுஉரிமைகளைப் பெறுவார். தான் ‘தனித்துவமானவர்’ என்பதை நிலைநாட்டுவார். இந்தப் படிநிலை வளர்ச்சியையே தன்னையறிதல் என்கிறோம் என்று விளக்கினார்.
காந்தியின் தனித்துவம் எது?
எடுத்துக்காட்டாக, காந்தியடிகள் தனது அடையாளம் பொறுமை, பலம் பணியாமை, பலவீனம் கூச்சம், தனக்குப் பிடித்தது சோதித்தல், பிடிக்காதது வன்முறை என்பதை அறிந்தார். எனவே தனது நிறைகுறைகளை மதிப்பிட்டார். பிறர் தன்னைப் பற்றி என்ன கருதுகின்றனர் என்று கவனித்தார்.
தனது வழக்கறிஞர் பணிக்குத் தனது கூச்சமே தடை என்று அறிந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல வாய்ப்புக் கிடைத்தது. பயன்படுத்திக் கொண்டார். கூச்சம் என்ற தடையை முயன்று தாண்டினார். சிறுசிறு வெற்றிகளால் ஊக்கம் பெற்றார். அவரின் தன்னுயர் மதிப்புப் பெருகியது. அதனால் தன்னம்பிக்கை கிடைத்தது. அங்கு நிலவிய நிறவெறி அவருக்குள் கோபத்தைக் கிளறியது. மனத்தைப் பண்படுத்தினார்.
‘தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்குத் தேவை தன்மான வாழ்வு’ என்று இலக்கை தனதாக்கிக் கொண்டார். அதனை வன்முறையின்றி அடைவதற்கான வழியைச் சிந்தித்தார். அறப்போர் என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுத்தார். அதில், ‘இன்னா செய்வோருக்கும் நன்னயம் செய்க’ என்று தான் வகுத்துக்கொண்ட கட்டுப்பாட்டோடு பயணித்தார்.
தன்னோடு அப்போரில் ஈடுபட்டவர்களையும் அதனைப் பின்பற்றச் செய்யும் கடமையை நிறைவேற்றினார். அம்மக்கள் தன்மான வாழ்வுரிமையைப் பெற்றனர். காந்தி, ‘இன்னா செய்யாதவர்’ என்ற தனது தனித்துவத்தை நிலைநாட்டினார்” என்று எடுத்துரைத்தார் எழில்.
அப்படியானால், தன்னையறிதல் என்பது…என்று இழுத்தான் கண்மணி. அனைத்து வாழ்க்கைத் திறன்களுக்கும் அடிப்படை என்றாள் மதி. “ஆம்” என்ற எழில், நீங்கள் உங்களை அறிந்து உங்களது தனித்துவத்தை நிலைநாட்ட வாழ்த்துகள் என்று வாழ்த்தி அன்றைய வகுப்பை நிறைவு செய்தார்.
கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்.
தொடர்புக்கு: ariaravelan@gmail.com