நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 6: கிராமவாசியால் சாதிக்க முடியும் என நிரூபித்த ஐஆர்எஸ் பெண் அதிகாரி

நீங்களும் யூபிஎஸ்சி வெல்லலாம் - 6: கிராமவாசியால் சாதிக்க முடியும் என நிரூபித்த ஐஆர்எஸ் பெண் அதிகாரி
Updated on
2 min read

பள்ளி காலத்தில் கிடைத்த புரிதலால் கிராமப்புற பெண் எம்.அனிதா ஐஆர்எஸ் (ஐடி) பெற்று உயர் அதிகாரியாகி உள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவின் நஞ்சப்பக்கவுண்டன் வலசு கிராமத்தில் வாழும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மயில்சாமி-கமலம் தம்பதியின் மூத்த மகள் அனிதா.

இவரது தங்கை எம்.கனிமொழி, தமிழ்நாடு வேளாண்மை உதவி இயக்குநராக உள்ளார். அனிதா தனது சொந்த ஊருக்கு அருகில் உள்ள நத்தக்காடையூர் கிராமத்தின் ஆக்ஸ்போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்றுள்ளார். பிறகு பிளஸ் 2 வரை பள்ளியூத்து கிராமத்தின் நவரசம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார்.

பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை தாண்டுவதே பெரிது என்கிற கிராமப்புற சூழலில் வாழ்ந்த அனிதா யாருக்கும் சுமையில்லாமல் சொந்தக்கால்களில் நின்று வாழ வேண்டும் என்கிற குறிக்கோள் கொண்டார். இதற்காக தன் பள்ளிக் காலத்திலேயே கடுமையாக உழைத்தார்.

மருத்துவம், பொறியியல் துறைகளுக்கு இணையானது வேளாண் படிப்பு என கருதியுள்ளார். இதற்கான நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்சி நிலையத்தில் பிஎஸ்சி இளங்கலை பட்டம் பெற்றார்.

புதிய ஆசிரியை தந்த புரிதல்!

அப்போது அவருக்கு தனது கல்லூரியின் மூலம் யூபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வு அறிமுகமானது. இதில் ஐஎப்எஸ் எனும் இந்திய வெளியுறவு பணி பெற முடிவு செய்தார். புவியியல் மற்றும் வேளாண் பாடங்களை குடிமைப்பணி விருப்பமாக எடுத்து படித்தார். ஐந்தாவது முயற்சியில் அனிதாவிற்கு ஐஆர்எஸ்(ஐடி) எனும் இந்திய வருவாய்துறையின் வருமானவரிப் பிரிவு பணி 2007-ல் கிடைத்தது.

இது குறித்து அனிதா கூறும்போது, “ஏழாம் வகுப்பின்போது எனது வகுப்பு ஆசிரியை ஒருநாள் விடுமுறையில் இருந்ததால் பொறுப்பு ஆசிரியராக வந்த உமா மகேஷ்வரி அளித்த அறிவுரை, என் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அன்று எங்களிடம் பேசியவர், அனைவரது மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் ஒருவரை போல் மற்றொருவரால் ஏன் கல்வி கற்க முடியவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு நாம் புரிதல் திறனை வளர்த்து கொள்ளாதது தான் காரணம் எனவும், இதை செய்தால் அனைவராலும் உயர முடியும் என்றும் விளக்கினார். இந்த கருத்து என்னை ஆழமாக யோசிக்க வைத் தது. கடுமையாக உழைத்து அதே வருடம் ரேங்க் ஐந்திற்குள் ஒருவராகி, பிறகு உயர் அதிகாரியாகவும் உயர வைத்து விட்டது” என்றார்.

இளங்கலை பட்டத்துக்கு பிறகு யூபிஎஸ்சி-க்கு குறிவைத்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. புவியியல் சேர்ந்துள்ளார் அனிதா. ஆனால், யூபிஎஸ்சிக்கு தயாராகிக் கொண்டே எம்.ஏ.வை முடிக்க அவரால் முடியவில்லை. 2002-ல் பிரிலிம்ஸில் தேர்ச்சி அடைய முடியாததால் எம்.ஏ.விலிருந்து பாதியிலேயே விலகினார்.

யூபிஎஸ்சியில் தீவிர கவனம் செலுத்தினார். சென்னை பெரியார் திடலின் பெரியார் பயிற்சி நிலையம், தமிழக அரசின் அண்ணா குடிமைப்பணிக்கானப் பயிற்சி நிலையம் ஆகியவற்றிலும் யூபிஎஸ்சிக்கான பயிற்சி பெற்றார். ஐந்தாவது முயற்சியில் ஐஆர்எஸ்(ஐடி) 2007-ல் கிடைத்தது.

எங்கிருந்து வந்தும் சாதிக்கலாம்!

அனிதாவை போல், பல்வேறு வகை பாடப்பிரிவுகளில் படித்தாலும் ஐஆர்எஸ் பெற்றவர்களுக்கு மகராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள தேசிய நேரடி வரி விதிப்பு அகாடமியில் (என்ஏடிடி) சுமார் 16 மாதக் கட்டாயப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையும் வெற்றிகரமாக முடித்தவர் முதலாவதாக, உத்தர பிரதேசம் கான்பூரில் உள்ள மத்திய நிதித்துறையின் உதவி இயக்குநர் வருமானவரி அலுவலகத்தின் துணை ஆணையராக அமர்ந்தார்.

இப்பதவியில் ஒரு வருடத்திற்கு பின் அதே அலுவலகத்தின் புலனாய்வு பிரிவில் கான்பூரில் பணியாற்றினார். பிறகு லக்னோவில் வருமானவரி பிராந்திய அலுவலகத்தின் கூடுதல் ஆணையரானார். இதே அலுவலகத்தில் இணை ஆணையராகவும் பதவி உயர்வு பெற்றார்.

இதனிடையே, 2007-ல் உத்தர பிரதேசமாநில பிரிவின் ஐஏஎஸ் அதிகாரி முத்துகுமாரசாமியை 2008-ல் மணமுடித்ததால் அதே மாநிலத்தில் பணியாற்றினார். இதையடுத்து லண்டனின் எடின்பரோ பிஸ்னஸ் ஸ்கூலில் நிதித்துறை பாடத்தில் எம்பிஏ முடித்தார். தற்போது அயல்பணியாக மத்திய நிதித்துறையின் வேறு பிரிவான டிபார்ட்மண்ட் ஆப் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பப்ளிக் அசட் மேனேஜ்மெண்ட் அலுவலகத்தில் இயக்குநராகி விட்டார் அனிதா. இது பற்றி அவர் கூறுகையில், “அரசு அலுவலகங்களில் கிராமவாசிகள் மதிக்கப்படுவதில்லை.

இந்த நிலையை என்போல் கிராமத்துவாசிகள் அப்பதவியில் அமர்ந்து மாற்ற வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். இதையும் மனதில் வைத்து உழைத்த எனக்கு விரும்பிய ஐஎப்எஸ் கிடைக்காவிட்டாலும் கிடைத்த ஐஆர்எஸ் பணியை நேசிக்கிறேன். இதில் நேரடியாக பொதுமக்களுடன் தொடர்பில்லை என்றாலும், அவர்களது அரசின் பொது சொத்தையும், வரிப்பணத்தையும் காக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது” என்றார்.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை சரிபார்த்து பராமரிப்பதில் இயக்குநர் அனிதாவின் பங்கும் முக்கியமானது. இதற்காக கிராமத்துபெண்ணான அனிதா உயர் அதிகாரியானமைக்கு நாமும் பெருமிதம் கொள்வோம்!

கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in