நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 8: தேவைக்கும் ஆசைக்கும் வித்தியாசம் தெரியுமா?

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 8: தேவைக்கும் ஆசைக்கும் வித்தியாசம் தெரியுமா?
Updated on
2 min read

‘ககீபோ' என்ற ஜப்பானிய நிதி மேலாண்மை முறையியல், மனிதர்கள் பணத்தை 2 விதத்தில் செலவிடுவதாக கூறுகிறது. ஒன்று தேவையான (Needs) பொருட்களை வாங்குவதற்கு, மற்றொன்று ஆசைப்படும் (Wants) விஷயங்களை அடைவதற்கு.

சிறுவயதிலே இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்து கொண்டால் பணத்தை வீணாக செலவிடுவதை தடுக்க முடியும் என்கிறார் ‘ககீபோ' முறையியலை அறிமுகப்படுத்திய ஹனி மொடாகோ.

தேவைக்கும் ஆசைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. அந்த கோடு கண்களுக்கு நன்றாக தெரிந்தாலும், ஆசை கண்ணை மறைத்துவிடும்.

உதாரணமாக, மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஒரு ஆன்ட்ராய்ட் செல்போன் தேவை. அதற்கு அடிப்படை வசதிகளைக் கொண்ட விலை குறைந்த செல்போனே போதுமானது. ஆனால் ம‌ற்றவர்களை பார்த்து தனக்கும் அதிநவீன வசதிகளை கொண்ட விலை உயர்ந்த செல்போன் வேண்டும் என்பது ஆசை ஆகும்.

எனவே செலவு கணக்கை எழுதும் போது தேவை, ஆசை என தனித்தனியாக பிரித்து எழுத வேண்டும். இதில் வீட்டுக்கு பால், மளிகைப் பொருட்கள், மருந்துகள், காய்கறி, உடை போன்றவை வாங்குவது தேவையில் வரும். குளிர்பானம் குடிப்பது, துரித உணவை சாப்பிடுவது, ஹோட்டலில் சாப்பிடுவது, சினிமாவுக்கு செல்வது, சுற்றுலாவுக்குச் செல்வது ஆகியவை எல்லாம் ஆசை என்ற வகைப்பாட்டில் வரும்.

இதே போல சைக்கிள், வாட்ச், விளையாட்டு பொம்மைகள், நோட்டு, பேனா போன்றவை தேவை என்றால் அதன் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருந்தால் போதுமானது. ஆனால் கியர் சைக்கிள், டிஜிட்டல் வாட்ச், ரிமோட் கார் என வாங்கினால் செலவு அதிகரித்துக்கொண்டே போகும்.

நுகர்வுக்கு முன் ஒரு நிமிடம்

தேவைக்காக வாங்கிய பேனா போன்ற பொருட்கள் நீண்ட காலம் உதவும். ஆனால், பெற்றோரிடம் அடம்பிடித்து ஆசைக்காக வாங்கிய கரடி பொம்மை அடுத்த நாளே கேட்பாரற்று கிடக்கும். ஒரு கட்டத்தில் இந்த பொருட்களை எல்லாம் எதற்காக வாங்கினோம் என்பது கூட மறந்து போய்விடும்.

இவ்வாறு ஆசைக்காக வாங்கிய பொருட்களால் வீட்டில் குப்பை சேர்ந்ததுதான் மிச்சம். இவற்றை வாங்கிய பணத்தை சேமித்து வைத்திருந்தால், நமக்கு தேவையான, முக்கியமான பொருளை கூட எளிதாக வாங்கிவிடலாம்.

எந்த பொருளையும் வாங்குவதற்கு முன் இது எனக்கு தேவையா? யாரை பார்த்து இந்த பொருளை வாங்க ஆசைப்படுகிறேன்? இதை வாங்கினால் எவ்வளவு காலம் பயன்படுத்துவேன்? இந்த பொருள் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கும்? போன்ற கேள்விகளை ஒரு நிமிடம் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இவற்றுக்கு நியாயமான பதில் கிடைத்தால், அந்த பொருளை வாங்குவதைப் பற்றி யோசியுங்கள்.

ஆசையை அடக்க 6 வழிகள்

ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்க ‘ககீபோ' முறை 6 அருமையான வழிகளை பரிந்துரைக்கிறது.

1. எந்த பொருளையும் வாங்க முடிவெடுத்த உடன் வாங்காதீர்கள். அதை 24 மணி நேரம் தள்ளிப்போடுங்கள். ஒருவேளை, மறுநாள் நீங்களே உங்கள் முடிவை மாற்றி கொள்ளலாம்.

2. பண்டிகை கால‌ தள்ளுபடிக்காகப் பொருட்களை வாங்காதீர்கள். எப்போதும் பொருளின் தேவையே பிரதானமாக இருக்க வேண்டும். விலை, தரம், தள்ளுபடி எல்லாம் முக்கியம் இல்லை.

3. பொருளின் விலையை பார்த்த உடன் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பாருங்கள். பணம் குறைவாக இருந்தாலோ, வேறு தேவைக்கு ஒதுக்கப்பட்ட பணமாக இருந்தாலோ அதை வாங்காதீர்கள்.

4. எந்த பொருளை வாங்கினாலும், ஒவ்வொரு ரூபாயையும் கையால் எண்ணிக் கொடுங்கள். ஏனென்றால் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை பிறருக்கு கொடுக்கும்போது ஒருவித வருத்தம் ஏற்படும். அதனால் பொருளை வாங்கும் முடிவை கூட கைவிட நேரிடலாம். ஜி பே, போன் பே, கார்டு மூலம் பணம் கொடுக்கும்போது அந்த உணர்வு ஏற்படாது.

5. இந்த பொருள் எனக்கு தேவையா? என்ற கேள்வியை இறுதியாக உங்கள் மனதிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

6. பிறரை பார்த்தோ, விளம்பரங்களினால் உந்தப்பட்டோ பொருட்களை வாங்காதீர்கள்.

தேவைகளை சிக்கனமாக பூர்த்தி செய்தால், வாழ்க்கை இன்பமாகும். ஆடம்பரமாக ஆசைகளை பூர்த்தி செய்தால் வாழ்க்கை துன்பமாகும்!

(தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in