

“எந்த கைப்பேசி செயலி பாட்காஸ்டிங்கிற்கு சிறந்தது?” என்று எனது வகுப்பில் மாணவர்கள் அடிக்கடி கேட்பதுண்டு. கைப்பேசி செயலிகளைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய செயலிகள் சந்தையில் வந்தவண்ணம் உள்ளது. அனைத்து செயலிகளையும் நாம் பதிவிறக்கி, அதில் எது சிறந்தது என்று பார்ப்பது, இன்றைய அவசர உலகில் சாத்தியமில்லாத ஒன்று.
ஆனால், இதற்கு ஒரு மாற்று வழியுண்டு. பிபிசி போன்ற முதன்மையான ஊடகங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பாகவே தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர். பிபிசி வழங்கும் ‘கிளிக்’ எனும் நிகழ்ச்சி இது குறித்து கூடுதல் தகவலுக்கு உதவும்.
இந்த தகவலை மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் இன்றைய கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஊடகப் படிப்பை கற்றுத் தரும் ஆசிரியர்கள் எத்தனை பேர், தாங்கள் எடுக்கும் பாடத்தில் முதன்மையானவர்களாக உள்ளனர் என்பது பற்றியும் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.
மாணவர்களுக்கு இன்றைய சூழல் புரிந்து கற்றுத் தருவது அவசியம். ஊடகங்கள் எதை எதிர்பார்க்கின்றன, புதிதாக என்ன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன என்பதை முதலில் ஆசிரியர்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
பாடத்தில் இல்லாத பல ஊடக பணிச்சூழலில் தேவைப்படும். பாடத்திட்டம் (சிலபஸ்) மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்யப் பல்கலைக்கழகங்கள் அனுமதிப்பதால், ‘அவுட் ஆஃப் சிலபஸ்சில்’ ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
பொது நிகழ்ச்சி முக்கியம்
எனவே, ஆசிரியர்கள் கள நிலைமை புரிந்து பாடம் நடத்த வேண்டும். உதாரணமாக, வானொலி தொடர்பான பாடம் எடுக்கும் ஆசிரியர் எனில், முதலில் அவர் வானொலிகளைக் கேட்பவராக இருக்க வேண்டும். எத்தனை வகையான ஒலிபரப்புகள் உள்ளன. வெளிநாட்டு வானொலிகள் எத்தனை தமிழில் ஒலிபரப்புகின்றன? அந்த வானொலிகளில் மாணவர்களுக்கான வாய்ப்புகள் என்னென்ன உள்ளது? போன்றவற்றை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆனால், எனக்கு தெரிந்து இன்று பல ஆசிரியர்கள் நாளிதழ்கள், வார, மாத இதழ்களைக் கூட வாங்கிப் படிப்பதில்லை. இதில் எங்கு போய் இது போன்ற நிகழ்ச்சிகளை கேளுங்கள், பாருங்கள் என்று சொல்வது!
கைப்பேசியிலேயே எல்லாவற்றையும், பார்த்துக் கொள்ளலாம், படித்துக் கொள்ளலாம் என்ற போக்கு ஊடக ஆசிரியர்களுக்கு உதவாது. நகரில் நடக்கும் இலக்கியக் கூட்டம் மட்டுமல்லாது, பொதுவான கூட்டங்களுக்கும் சென்றுவந்தால் மட்டுமே, பல களத்தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
மாணவர்களும் வகுப்புகளுக்குள் மட்டுமேபாடங்களைப் படிக்காமல், களத்திலும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. மாணவர்கள் தினந்தோறும் மாலையில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு நேரடியாகச் சென்று பார்ப்பது, பார்ப்பதை ஏதேனும் ஒரு விதத்தில் பதிவு செய்வது அவசியமாகும்.
இதன் மூலம் எழுத்துப் பயிற்சியோடு, கள நிலவரங்களையும் நேரடியாகச் சென்று அவதானிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனக்குத் தெரிந்த ஒரு மாணவர் இப்படியாகப் பதிவு செய்ததன் ஊடாகவே, ஒரு வெளிநாட்டு ஊடகம் அவருக்குப் பகுதி நேர வேலைவாய்ப்பை படிக்கும் போதே கொடுத்தது. பணமும் கிடைத்தது.
ஜெர்மனியின் பொதுத் துறை வானொலி, ‘டிடபிள்யூ அகடமி’ துணை கொண்டு ஊடகம் தொடர்பான பல படிப்புகளை வளரும் நாடுகளில் உள்ள இதழியல் மாணவர்களுக்கும், ஊடகப் பணியில் உள்ளவர்களுக்கும் இலவசமாகவே நடத்துகின்றது. விபரங்களுக்கு https://www.dw.com/en/training/s-12125
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர்,
இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com