

"ஆறாம் வகுப்பு அனுஷா வயதுக்கு வந்துவிட்டாள். ஆனால், ஒன்பதாம் வகுப்பில் உள்ள நான் இன்னும் வயதுக்கு வரவில்லை இதில் ஏதாவது பிரச்சினை உள்ளதா?"
பதின்பருவ பெண்களின் பிரச்சினைகள் பற்றி, பள்ளி ஒன்றில் பேசப் போனபோது இந்தக் கேள்வியை என்னிடம் மாணவி ஒருவர் கேட்டார். நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று என் முகத்தையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் இந்தக் கேள்வி நியாயமான ஒன்றுதான். பொதுவாக மாதவிலக்கு ஏற்படுவதைத்தான் பருவமடைதலின் அறிகுறியாகநாம் பார்க்கிறோம்.
முன்பெல்லாம், பெண்கள் பருவமடைதல் என்பது பதின்பருவத்தின் தொடக்கமான பதிமூன்று அல்லது பதினான்கு வயது என்றுதான் இருந்தது. ஆனால், சமீப வருடங்களில் அது படிப்படியாகக் குறைந்து, உலகெங்கும் தற்சமயம் பத்து அல்லது அதற்கும்முன்பேகூட பருவமடைதல் நிகழ்ந்துவிடுகிறது.
அனுஷாவுக்கும் அப்படித்தான் முந்தி நிகழ்ந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணங்களாக இருப்பது இன்றைய நாளில் கிடைக்கும் சத்தான உணவு வகைகள் என்பதுடன், உடல் உழைப்பு குறைந்து, உறக்கமும் குறைந்திருப்பதுதான். அத்துடன் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாக மாறிவிட்ட மேற்கத்திய உணவு வகைகள், செயற்கை உணவு ஊட்டங்கள் மற்றும் கலப்பட உணவு வகைகள்.
இதனால் ஏற்படும் உடல்பருமன். இவற்றுக்கு துணை நிற்கும் உடற்பயிற்சியின்மை மற்றும் உறக்கமின்மை. இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து பெண்களின் உடலில் பெண்களின் பிரத்தியேக ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் ப்ரொஜெஸ்டிரான்களை அதிகம் சுரக்கச் செய்வதால் பருவமடைதலை இயல்பான வயதுக்கு முன்னரே துரிதப்படுத்தி விடுகிறது.
ஆக, ஆறாம் வகுப்பிலேயே, அதாவது தனது பத்து வயதிலேயே அனுஷா பருவமடைந்தது என்பது இதுபோன்ற சூழல்களால் துரிதமாக்கப்பட்ட பருவமடைதல்தான் என்றாலும் இதனால் பாதிப்பு ஒன்றுமில்லை.
அப்படியென்றால் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி இன்னும் பருவமடையவில்லை என்பது எதுவும் பிரச்சினையா என்றால், பருவமடைதலில் முந்திப் பருவமடைதல் போலவே, மற்றுமொரு சிக்கல்தான் பருவமடைதலில் தாமதம் ஏற்படுவது.
விளையாட்டு வீராங்கனைக்கு தாமதமாகலாம்
இங்கு, பதினைந்து பதினாறு வயதுக்குப் பிறகு பெண்களின் பருவகால உடல் மாறுதல்களான மார்பக வளர்ச்சி, ரோம வளர்ச்சி ஆகியன தோன்றிய பின்பும் மாதவிலக்கு ஏற்படாமல் இருப்பது என்பதே தாமதமான பருவமடைதல் என்று அழைக்கப்படுகிறது.
சில குடும்பங்களில் பாரம்பரியமாக இந்தத் தாமதம் ஏற்படலாம். விளையாட்டு வீராங்கனைகளாக இருப்பதால் சிலருக்கு சற்று தாமதம் ஆகலாம். ஆக, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி தனது பதினான்கு வயதில் பருவமடையவில்லை என்று கவலை கொள்ளத் தேவையில்லை.
அதேநேரம் மார்பக மற்றும் ரோம வளர்ச்சி போன்றவை இயல்பாக நிகழ்ந்து ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்குப் பின்பும் மாதவிலக்கு ஏற்படுவது தாமதமாகும் போது, அவர்கள் மகளிர் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நிச்சயம் நல்லது.
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com