

இந்தியாவில் 2002-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவர், விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெண்மணியின் பெயர் நினைவிருக்கிறதா?
டாக்டர் லக்ஷ்மி சேகல். அவரும் தென்னகத்தைச் சேர்ந்தவரே. ஒரு மருத்துவர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர். அதுவும் சுபாஷ் சந்திரபோஸின் ராணுவப் படையில் பணியாற்றிய முதல் பெண் கமாண்டர். டாக்டர் லக்ஷ்மி சேகல் என்பதை விட கேப்டன் லக்ஷ்மி என்றால்தான் எல்லோருக்கும் அவரைத் தெரியும்.
நோயாளிகளின் கரம் பிடித்து, நாடி பார்த்து சிகிச்சையளித்த இரு இளம் கைகள், நாடி நரம்புகள் புடைக்க துப்பாக்கி ஏந்தியும், குறிபார்த்து கைக்குண்டுகளை வீசியும் விடுதலைக்காகப் பாடுபட்டது எப்படி என்பது தெரியவேண்டாமா?
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்த பிரபல வழக்கறிஞரான டாக்டர் எஸ் சுவாமிநாதனுக்கும் சமூக செயற்பாட்டாளரான அம்மு சுவாமிநாதனுக்கும் 1914 அக்டோபர் 24 -ம் தேதியன்று சென்னையில் பிறந்தார் லக்ஷ்மி. தனது மூத்த மகள் லக்ஷ்மிக்கும் இளைய மகள் மிருணாளினிக்கும் இறக்குமதி செய்த அழகிய கவுன்களையும், கண்கவர் வெளிநாட்டு பொம்மைகளையும் தந்தை சுவாமிநாதன் வாங்கி நிறைத்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய் அம்மு சுவாமிநாதனோ சுதேசி இயக்கத்தில் பங்களிக்க தனது ஷிஃபான் புடவைகளையும், தனது குழந்தைகளின் கவுன்களையும் விலை உயர்ந்த பொம்மைகளையும் வீட்டின் முன்பாக எரித்தார். இதை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி லக்ஷ்மி, "அன்றைய இரவு கலக்கமாகவும் அதேசமயம் உணர்ச்சிகரமாகவும் இருந்தது.
எனக்கு பிடித்த பொம்மைகளும் ஆடைகளும் எரிந்துபோனது வலித்தது. அதைவிட என் அம்மாவை அனைவரும் கொண்டாடியதை பெருமிதமாக உணர்ந்தேன்" என்று அந்த வயதிலேயே தனக்கு தாய் மூலமாக தாய்நாட்டின் மீது பற்று அதிகமானதைக் குறித்துக் கூறியுள்ளார்.
பகத்சிங்கும் போஸூம் ஏற்படுத்திய தாக்கம்
இளம் வயதிலேயே தந்தையை இழந்த லக்ஷ்மி, தன் சகோதரர்கள் வெளிநாடு சென்று கல்வி பயின்றபோது தனது தாய்க்குத் துணையாக சென்னையிலேயே கல்வி பயின்றார். குயின் மேரீஸ் கல்லூரியில் 1932-ல் அறிவியலில் இளநிலைப் பட்டம் பயிலும்போதே பகத்சிங்கின் வழக்கை நடத்த பணம் திரட்டி அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் மருத்துவராகும் முனைப்புடன் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சேர்ந்தபோது சுதந்திரப் போராட்டம் உச்சத்தை அடைந்தது. அச்சமயத்தில் சரோஜினி நாயுடுவின் சகோதரி சுபாஷினி சட்டோபாத்தியாயாவை நேரில் லக்ஷ்மி சந்திக்க நேர்ந்தது.
சுபாஷினியின் கம்யூனிசக் கொள்கைகளும், அதேசமயம் காங்கிரஸ் தலைவரான சுபாஷ் சந்திரபோஸின் அணுகுமுறையும் ஈர்த்தது. அரசியல் விடுதலைக்கு ஆயுதப் புரட்சியே உகந்தது என நம்பினார். அதுவரை தாயைப் பின்பற்றி காந்தியின் அகிம்சை கொள்கைகளில் ஈடுபட்டிருந்தவர், நேதாஜியின் பாதைக்கு திரும்பினார்.
இறுதியாண்டு மருத்துவம் பயிலும்போது பைலட் பிகேஎன். ராவ் என்பவரைத் திருமணம் செய்த லக்ஷ்மி, குறுகிய காலத்திலேயே மன வேறுபாடுகளால் கணவரைப் பிரிந்தார்.
இந்தியர்களுக்கு இலவச மருத்துவம்
கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தி மகப்பேறு மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்து, சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். 1939-ல்இரண்டாம் உலகப் போர் மூண்டபோது நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டனுக்காக இராணுவ சேவை செய்ய விரும்பாமல், தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் சிங்கப்பூருக்குச் சென்று, அங்கேதனது மருத்துவப் பணியைத் தொடங்கினார். சிங்கப்பூரில் இரவும் பகலும் அயராதுஉழைத்ததோடு, புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு இலவச மருத்துவமனை நடத்தினார்.
மேலும் ஜப்பானியரிடம் சரணடைந்த பிரிட்டன் படையிலிருந்த இந்திய வீரர்களுக்கும் சிகிச்சை அளித்ததால் டாக்டர் லக்ஷ்மி அங்கே வெகு விரைவில் பிரபலமானார். என்றாலும் இந்திய சுதந்திரம் பற்றிய தாகம் அவர் மனதில் எரிந்துகொண்டேயிருக்க, அதே எண்ணம் கொண்ட பிரேம் சேகல் போன்றவர்களின் நட்பையும் பெற்றார். கூடவே பத்திரிக்கைகளில் விடுதலைக் கட்டுரைகள் எழுதுவது, இந்தியாவுக்கு வானொலிச் செய்திகளை அனுப்புவது என்று பல பகுதிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1943-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய சுபாஷ் சந்திரபோஸ் உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு ஐஎன்ஏ எனும் இந்திய தேசியப் படையை கட்டியெழுப்பினார். அந்த படையின் வலிமையைக் கூட்டும் முயற்சிகளில் ஒன்றாக, ‘பெண்கள் தனிப்படை' பற்றிய ஒரு திட்ட அறிக்கையை சிங்கப்பூரில் வெளியிட்டார்.
அதில் முதலாவது ஆளாக முன்மொழியப்பட்டார் டாக்டர் லக்ஷ்மி. அப்படி அவர் தலைமையில் ‘ஜான்சி ராணி ரெஜிமண்ட்' என்ற பெயரில் ஆசியாவின் முதல் பெண்கள் காலாட்படை உருவானபோதுதான் டாக்டர் லக்ஷ்மி, கேப்டன் லக்ஷ்மி ஆனார். முதல் நாளன்றே நூற்றுக்கணக்கான பெண்கள் இயக்கத்தில் இணைய, முழு முனைப்புடன் போர்த் தந்திரங்களைக் கற்க ஆரம்பித்தார் லக்ஷ்மி.
(மகிமை தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com