

நமது ஊரில் அடிக்கடி ஒரு பழமொழியை கல்யாண விருந்துகளில் கேட்கலாம். "படைக்கு பிந்து பந்திக்கு முந்து" என்று சொல்லி சிரிப்பார்கள். உண்மையில் அதன் அர்த்தமே வேறு.
படைக்கு பிந்து என்றால் போர் என்று அறிவித்துவிட்டால் உடனடியாக உங்களுடைய முதுகில் மாட்டியிருக்கும் பையில் இருந்து அம்புகளை உங்களது கை எடுக்க வேண்டும். அதுதான் படைக்கு பிந்து. பந்திக்கு முந்து என்றால் குடுகுடுன்னு ஓடிப்போய் இடம் பிடிப்பதல்ல. தமிழர்களின் குணமே விருந்தோம்பல், எல்லோருக்கும் விருந்து படைத்து மனதார சந்தோஷப்படுவது.
பந்தி திறந்துவிட்டால் உடனடியாக ஓடிப்போய் உணவுப் பாத்திரங்களை எடுத்து பரிமாற கிளம்பிடவேண்டும் என்பதுதான். இதன் நீட்சியாக குழந்தைகளுக்கு சொல்வது மேடைக்கு முந்து.
மேடை என்பது வகுப்பில் இருக்கும் மேடையாகவும் இருக்கலாம். பள்ளியில் இருக்கும் மேடையாகவும் இருக்கலாம். ஏதேனும் நிகழ்வாகவும் இருக்கலாம்.
"குழந்தைகளே யாரேனும் மேடைக்கு வாங்க" என்றதும் இப்போதெல்லாம் யாருமே நகர்வதில்லை. நகரப்புற மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் என்று எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது. சக நண்பர்களின் முன்னால் தோன்றுவதற்கு ஏன் இந்த தயக்கம் என்றே புரியவில்லை.
ஆனால், உண்மையில் மேடை ஏறுதல் என்பது மற்றவர்களைவிட அதிகமாக கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். ஒரு தலைவராக மாறுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும். ஆசிரியர் அழைத்து ஒரு உரையாடலை மேடையிலே நிகழ்த்தச் சொல்லலாம், அல்லது ஒரு செயல்பாட்டினை உங்கள் மூலம் நடத்தலாம்.
எதுவாக இருந்தாலும் அது மற்றவர்களைவிட உங்களுக்கு கூடுதலான அனுபவத்தை கொடுக்கும். சின்னச் சின்ன மேடைகளில் ஏறி நின்று கீழே கூடி இருப்பவர்களை பார்த்து பேச தொடங்கினால் மேடை பயம் விலகும். பலருக்கும் திடீரென மேடையில் ஏறி திரளாக இருக்கும் மக்களைப் பார்த்ததும் பயம் அப்பிக்கொள்ளும். அந்த பயம் மக்களைப் பார்த்து அல்ல.
பின்ன? தன் மீது உள்ள அவநம்பிக்கையே. எங்கே தவறாக பேசிடுவோமோ, தவறாக ஏதேனும் செய்திடுவோமோ என்ற பயம். அட தப்பா செய்தால்தான் என்ன தப்பாக பேசினால்தான் என்ன? நான் கற்றுக் கொள்கின்றேன். என் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்கின்றேன்.
நான் முன்னேறுகிறேன். நான் உள்வாங்கியது சரியா தவறா என்பதற்கு ஒரு மேடை தேவை. தவறாக இருக்கும்பட்சத்தில் அதிலிருந்தே மீண்டும் கற்பேன். மீண்டும் மீண்டும் மேடைகள் காண்பேன். அதன்மூலம் முன்னேறுவேன். இதோ இந்த மனப்பாங்கை வளர்த்தவர்கள்தான் வெற்றியாளர்கள்.
இன்று நாம் மேடையில் பார்க்கும் எல்லோருமே இந்த பாதையை கடந்து வந்திருப்பார்கள். எங்க தனியா படிச்ச இந்த கட்டுரையை வகுப்பு முன்னாடி போய் சத்தமா படிங்க பார்ப்போம்!
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர். ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்
தொடர்புக்கு: umanaths@gmail.com