

சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது. இதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே 'ஓங்கில் கூட்டம்' இயங்கி வருகிறது.
வாசிப்புப் பழக்கத்தை நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம், கவிதை என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் கொண்டு வருகிறது. இப்படி தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில், எளிமையான மொழிநடையில், அழகிய ஓவியங்களுடன் புத்தகங்களை வெளியிட்டு வருவது வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘பஞ்சு மிட்டாய்' பிரபு ஒருங்கிணைக்க எழுத்தாளர் கமலாலயனின் மேற்பார்வையில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், வடிவமைப் பாளர்கள் என பலரது துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கி வருகிறது. ஓங்கில் கூட்டம் வாயிலாக இதுவரை 10 நூல்கள் வெளிவந்துள்ளன.
சார்லஸ் டார்வின்
பருவ வயது குழந்தைகள் நண்பர்களின் அரவணைப்பில் இருப்பவர்கள். தவறானபாதைக்கு பயணம் செய்வதை அறியாதவர்கள். கயிறு புத்தகம், சமூகத்தில் உள்ளோர் சாதி எனும் கொடுந்தீயை குழந்தைகள் மனதில் பதியவைக்க செய்யும் முயற்சியை பெற்றோர் எவ்வாறு கையாளலாம் என்பதை சொல்லித்தருகிறது.
சார்லஸ் டார்வின், தண்ணீர், ஹம் போல்ட், சாலிம் அலி, ஜானகி அம்மாள் இந்த ஐந்து புத்தகங்களும் அறிவியல் அறிஞர்கள் பற்றியது. ஹம்போல்ட் 250 வருடத்துக்கு முந்தைய காலத்தவர். ஆனால் அவருடைய ஆராய்ச்சிகளே தற்காலத்தின் தேடுதலை விதைத்துள்ளன.
டார்வின் பற்றி எண்ணும்போதே பரிணாமம் என்பது நமக்கு நினைவில் வரும். ஓங்கில் கூட்டத்தின் வெளியீடான சார்லஸ் டார்வின் படித்த பிறகு பயணம் என்பதுதான் நினைவுக்கு வருகிறது. அறிவியல் அறிஞர் ஹம்போல்டின் Views of nature perdonal narrative புத்தகம் தன் ஆராய்ச்சிகளுக்கு அடிகோலியதாக டார்வின் கூறுகிறார்.
குழந்தைகளே.. ஜானகி அம்மாள் பற்றிநாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். நாம் விரும்பி சாப்பிடும் இனிப்பு நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது. கரும்பிலிருந்து தானே? அந்த இனிப்பான கரும்பை கண்டுபிடித்து தந்தது ஜானகி அம்மாள்தானாம். முற்காலத்தில் கரும்பு உற்பத்தி இருந்தாலும் அவற்றிலிருந்து நமக்கு அதிகளவு சர்க்கரை கிடைக்காது.
ஜானகி அம்மாள்தான் இத்தனை இனிப்பான கரும்பை உருவாக்கியிருக்கிறார். சர்க்கரைகிடைப்பதால் நமக்கு ஏராளமான அந்நியசெலாவணி கிடைக்கிறது. ஆனால் ஜானகி அம்மாள்தான் இதற்கு காரணம் என இதுவரை தெரியாதிருந்தோம். ஏன்? நமக்கு தெரிவிக்கப்படவில்லை.
கரோனா காலம்
கடைசி பெஞ்ச் ஒரு கவிதை புத்தகம். கரோனா காலத்தில் குழந்தைகள் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றியிருக்கும்? அதை கவிதையாக்கித் தந்திருக்கிறது ஓங்கில் கூட்டம். கரோனா காலத்திற்கு முன்பு மொபைல் போனை குழந்தைகள் தொடவே கூடாது என்போம்.
ஆனால் ஊரடங்கு காலத்தில் விளையாட விடாமல், கைகளில் மொபைல் போனை திணித்தோம். குழந்தை புரியாமல் விழிக்கிறது. வேடிக்கை ருசி, கேள்விப்புழு என்ற அற்புதமான கவிதைகள் உள்ளன. கல்விக்காக ஒருவருடத்திற்கே லட்சக்கணக்கில் செலவு செய்கிற பெற்றோரைப் பார்த்து ஏன் என்கிறது குழந்தை.
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கத்தான் என்கின்றனர். குழந்தை மனதில் கேள்விப்புழு. "வேடிக்கை ருசி" கவிதையில் ஏசி இல்லாததால் குழந்தை கார் சன்னல் கண்ணாடியை திறக்கச் சொல்கிறது. இத்தனை நாளாய் அழகான அனுபவத்தை இழந்துவிட்டதை நினைத்து மனம் வருந்துகிறது.
ஓரிகாமி கலை
சோசோ ஒரு மாணவன். சோசோ நாம் ஒவ்வொருவரும்தான். சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புத்தகம். ஓரிகாமி யின் முழு வரலாற்றை அறிந்துகொள்ள வாசிக்க வேண்டிய புத்தகம். வெறும் பொழுதுபோக்க மட்டுமல்ல ஓரிகாமி கலை. அதன் மூலம் குழந்தைகள் மனதில் தொழில்நுட்ப சிந்தனையையும் வளர்க்க முடியும் என்கிறது புத்தகம்.
வாசிக்காத புத்தகத்தின் வாசனை என்கிற புத்தகம் வாசிப்பின் மேன்மையை சொல்லும் உணர்வுபூர்வமான கடத்தல். ஓங்கில் கூட்டத்தின் இவ்வெளியீடுகள் அறிவியல் பார்வையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த முயற்சி செய்பவை.
கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம்.தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com