Published : 22 Aug 2022 07:28 AM
Last Updated : 22 Aug 2022 07:28 AM
கண்ணாடியை அதிக நேரம் பார்த்தால் முகத்தில் பரு வரும் என்பது உண்மையா, டிங்கு?
- பி. மேனகா, 9-ம் வகுப்பு, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி, திருச்சி.
கண்ணாடி பார்ப்பதற்கும் பருக்களுக்கும் தொடர்பில்லை. நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன. இவை ஹார்மோனின் தூண்டுதலால் ‘சீபம்’ என்கிற எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இதுதான் முடிக்கால்கள் வழியாக வெளியே வந்து நம் தோலையும் முடியையும் மினுமினுப்பாக வைத்திருக்கிறது.
காற்றில் உள்ள தூசும் அழுக்கும் தோலில் சுரக்கும் எண்ணெயில் ஒட்டிக்கொள்கின்றன. இதனால், தோலுக்கு அடியில் உள்ள சீபம்வெளியே வர முடியாமல், கட்டியாக மாறும். இதைத்தான் நாம் பரு என்கிறோம். முகத்தை அடிக்கடிசுத்தம் செய்வதாலும் ஆரோக்கிய மான உணவு, போதுமான தண்ணீர் குடிப்பதாலும் பருக்களைக் கட்டுப் படுத்தலாம், மேனகா.
ஜீரோ வாட் பல்புகளுக்கு மின்சக்தி தேவைப்படாதா, டிங்கு?
- கே. அரவிந்த், 8-ம் வகுப்பு, மாநகராட்சி ஆண்கள் பள்ளி, மதுரை.
எந்த பல்பும் ஜீரோ வாட் கிடையாது. மிகக் குறைந்த அளவு மின்சக்தியைக் கொண்டு ஒளியை வெளியிடுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. உண்மையில் இந்த பல்புகளுக்கு 15 வாட்கள் மின்சக்தி தேவைப்படுகிறது.
ஆரம்பத்தில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை மீட்டர்கள் பதிவு செய்யாத காரணத்தாலும் இவை ஜீரோ வாட் பல்புகள் என்று அழைக்கப்பட்டன. தற்போது ஜீரோ வாட் பல்புகளுக்கும் மின் கட்டணம் உண்டு. 15 வாட்களுக்குக் குறைவான பல்புகளும் இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன, அரவிந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT