

பத்தாம் வகுப்பில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற முகிலன் தற்போது பிளஸ் 1 படித்து வருகிறான். அன்றைய தினம் பேராசிரியர் ராகவனிடம் முகிலன் எழுப்பிய கேள்வி இதர மாணவர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
“ஆறாவது வகுப்புல இருந்து கணக்கு பாடத்தை ரொம்பவும் விரும்பி படிக்கிற என்னை என்ஜினீயரிங்க படீன்னு அம்மா-அப்பாவும் ஆசிரியர்களும் சொல்லிக்கிட்டே இருக்காங்க. ஏனோ எனக்கு அதில ஆர்வமில்ல.
கணக்கில் பெரும் விருப்பம் இருக்க என்னை மாதிரியான மாணவர்கள் பொறியியலுக்கு பதிலா என்ன படிக்கலாம் சார்?” என்பதே முகிலனின் கேள்வி. இதற்கு பதிலளிக்கத் தொடங்கிய பேராசிரியர், “தாராளமாகக் கணக்கையே எடுத்துப் படிக்கலாம்” என்றார்.
கணக்குப் பாடத்தில் ஈடுபாடு கொண்ட மாணவர்களை பொறியியல் படிக்குமாறு வழிகாட்டுவதும், வற்புறுத்துவதும் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. பொறியியல் படிக்க கணித அறிவு அவசியமானதே. கணிசமான கணித பாடங்களையும் பொறியியல் உள்ளடக்கி இருக்கும்.
ஆனால், உயர்கல்வியாக பொறியியல் பயில கணக்கு பாடத்தின் மீதான ஆர்வம் மட்டுமே போதாது. குறிப்பிட்ட துறை மீதான ஈர்ப்பும், அதனையொட்டி அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் சாதிக்கும் ஆர்வமும் அவசியம். பள்ளி பருவத்தில் கணக்கில் பெரும் ஈடுபாடு கொண்ட மாணவர்களில், இவ்வாறு பொறியியல் உயர்கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே அதில் சேரலாம்.
இதர பெரும்பாலான மாணவர்கள் கணிதத்தையே முழுமுதலாய் எடுத்தும் படிக்கலாம். இதற்கு முதலில், பொறியியலுக்கு அப்பாலும் பரந்த உயர்கல்வி வாய்ப்புகள் இருப்பதை இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆசிரிய துறைக்கு அப்பாலும்
கலை அறிவியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் அறிவியல் படிப்புகளில் தலையாயது கணிதம். அதிகரித்து வரும் பொறியியல் கல்வி மீதான மோகத்தால் பி.எஸ்சி.
கணிதத்தை விரும்பி படிக்கும் மாணவர்கள் குறைந்து வருகின்றனர். தங்கள் ஆர்வத்துக்கு தீனி போடும் கணிதத்தை முழுமுதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் துறையைவிட பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.
பி.எஸ்சி. கணிதத்தில் உயர்கல்வியை தொடங்கினால் பள்ளி ஆசிரியர் அல்லது கல்லூரி பேராசிரியர் பணிகள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று பலர் நினைக்கின்றனர்.
அதிகபட்சமாக வங்கி, ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம் என்றே நம்பப்படுகிறது. உண்மையில் இவற்றுக்கு அப்பாலும் ஏராளமான வேலைவாய்ப்பை கணிதத் துறை அள்ளித்தர வல்லது.
எங்கே படிப்பது என்பதும் முக்கியம்
என்ன படிக்கிறோம் என்பதற்கு இணையாக, எங்கே படிக்கப் போகிறோம் என்பதும் முக்கியமானது. அந்த வகையில் உயர்கல்வியாகக் கணிதத்தை பயில்வதற்கும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.
முகிலன் போன்று கணிதத்தில் உயர் மதிப்பெண் பெறுவோரும் அதற்காக மெனக்கெடும் மாணவர்களும் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களை குறிவைக்கலாம். நுழைவுத் தேர்வு வாயிலாகவே இந்த படிப்புகளில் சேர முடியும் என்பதால், கணிதத்தின் மீது கனவு கொண்ட மாணவர்கள் கீழ் வகுப்புகளில் இருந்தே அவற்றுக்கு தயாராக வேண்டும்.
ஐஐடி, ஐஐஎஸ்சி-யிலும் கணிதம்
சென்னையில் அமைந்துள்ள சென்னை கணிதவியல் நிறுவனம் பெங்களூருவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனம் போன்றவை கணிதத்தை கற்பிக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் தேசிய அளவில் முதன்மையானவை. இந்த வரிசையில் கான்பூர் ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி ஆகியவை 4 ஆண்டு இளம் அறிவியல் பட்டமாக கணிதம் படிக்க வழிசெய்கின்றன.
ஐதராபாத், பாண்டிச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. கணிதத்திலும் சேரலாம். வாய்ப்பு கிட்டாதவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை கணிதம் படிக்கலாம்.
அல்லது பி.எஸ்சி. கணிதம் முடித்துவிட்டு கணினி பயன்பாடுகள் சார்ந்த எம்சிஏ, ஏராளமான மேலாண்மை பிரிவுகளுக்கான எம்பிஏ மற்றும் பொறியியலின் எம்டெக் வரை தங்கள் உயர்கல்வி கனவுகளை செதுக்கிக் கொள்ளலாம்.
முனைவர் வரை முனையலாம்
கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி. கணிதம் சேருவோர் இளநிலையுடன் நின்றுவிடாது முழுமூச்சாய், பிஹெச்டிஎனப்படும் முனைவர் பட்டத்துக்கும் முயலலாம். பணிவாய்ப்புக்கு நிகரானகல்வி உதவி மற்றும் ஊக்கத்தொகைகளுக்கு வாய்ப்புள்ளதால் அவற்றை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
இளநிலை முடித்த கையோடு தமிழகத்தின் டிஎன்பிஎஸ்சி, மத்திய அரசின் யூபிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் வாயிலாகவும் உயர் அரசுப் பணிகளுக்குக் குறிவைக்கலாம். பொறியியல் பட்டதாரிகளுக்கு நிகராக கணிதம் பயின்ற தகுதியுடைய பட்டதாரிகளையும், மென்பொருள் நிறுவனங்கள் பணிக்கு எடுக்கின்றன.
எனவே கல்லூரி கல்வியோடு அவசியமான மென்பொருள் படிப்புகளையும் பகுதி நேரமாகப் பயில்வது இவற்றுக்கு உதவும். பட்டய கணக்காளர், காப்பீடு மற்றும் வங்கி சார்ந்த நிதி நிறுவனங்கள், பங்கு சந்தை சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள் என பரந்த துறைகளில் இளம் ராமானுஜர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என்று முடித்தார் பேராசிரியர் ராகவன்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com