வாழ்ந்து பார்! - 7: கணித மேதை ராமானுஜம் ஏன் தோற்றார்?

வாழ்ந்து பார்! - 7: கணித மேதை ராமானுஜம் ஏன் தோற்றார்?
Updated on
2 min read

எல்லோரும் அவரவரது பலவீனத்தை, அதற்கான காரணத்தை, அதனைக் களைவதற்கான வழியை எழுதிக்கொண்டு வந்திருக்கிறீர்களா? என்று வினவினார் ஆசிரியர் எழில். “ஆம்” என்றனர் மாணவர்கள்.

அவர்களது குறிப்பேடுகள் ஒவ்வொன்றையும் வாங்கிப் பார்த்த எழில், உங்களது எதிர்மறைப் பண்புகள், இயலாமைகள், தீயநடத்தைகள், விரும்பத்தகாத இயல்புகள் ஆகியவற்றைப் பலவீனங்கள் என்று அறிந்து, அவற்றுக்கான காரணங்களை உணர்ந்து, அவற்றைக் களைவதற்கான செயல்திட்டங்களை வகுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் என்றார். மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ஆசிரியர் எழில், “ஆனால் . . .” என்றதும் வகுப்பு அமைதியானது. சிலர் தங்களது நிறம், உயரம், உருவம் ஆகியவற்றைத் தமது பலவீனம் என்றும் அவற்றை மாற்ற முடியாது என்றும் எழுதியுள்ளனர். ஒருவர் தன்னுடைய நிறத்தை, உயரத்தை, உருவத்தை மாற்ற முடியாதுதான்.

ஆனால், அவற்றைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியும். கருத்த நிறத்தவரான ரோசா பார்க்ஸ் அமெரிக்க நாட்டில் நிறவெறிக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கினார்.

குள்ள உயரத்தினரான அண்ணாத்துரை நாவன்மை மிக்கவராகத் திகழ்ந்தார். பருத்த உருவத்தினரான ஹார்டியும் மெலிந்த உருவம் கொண்ட லாரலும் இணைந்து தங்களது நடிப்புத் திறமையால் உலகையே சிரிக்க வைத்தனர்.

இந்த கதை தெரியுமா?

எனவே, நமது உடலின் நிறம், உயரம், உருவம் ஆகியவற்றைப் பற்றி தாழ்வாகவோ, உயர்வாகவோ எண்ணக்கூடாது. அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் எழில் விளக்கினார்.

மேலும் அவர் கூறுகையில், இன்னும் சிலர், அவர்களது பொருளாதார நிலையைப் பலவீனம் என்று எழுதி இருந்தீர்கள். திட்டமிட்டு வாழ்ந்தால் இந்த நிலையை மாற்ற முடியும். தாழ்வாக எண்ணத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தினார். அவர் கூறுவதை கேட்ட மாணவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

அதற்குச் சில மணித்துளிகள் வழங்கிய எழில், ஸ்ரீநிவாச ராமானுஜம் யார் என்று தெரியுமா? என்று கேட்டார். கணிதமேதை என்றான் அருளினியன். அவனைப் பார்த்துப் புன்னகைத்த எழில், அவரின் வாழ்க்கைக் கதை தெரியுமா? என்று வினவினார். அனைவரும் அமைதியாக இருந்தனர்.

ராமானுஜம் ஈரோட்டில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தார். ஐந்தாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தார். அதனால் உயர்நிலைப் பள்ளியில் பாதிக் கட்டணம் செலுத்திப் படித்தார். அவருக்கு 12 வயது இருக்கும்போது, கும்பகோணம் கலைக் கல்லூரியில் பயின்ற இருவர் ராமானுஜம் வீட்டில் தங்கி இருந்தனர்.

அவர்களுக்கு முக்கோணவியல் பாடமாக இருந்தது. அதற்கான பாடநூலில் இருந்த கணக்குகளுக்கு ராமானுஜம் தானாகவே முயன்று விடைகண்டார். அதன் விளைவாய் கணிதத்தின் மீது அவருக்கு ஆர்வம் பிறந்தது.

பள்ளியிறுதி வகுப்பில் முதல்வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். சுப்பிரமணியம் கல்வி உதவித்தொகையைப் பெற்றார். அதனைக்கொண்டு, கும்பகோணம் கலைக்கல்லூரியில் எஃப்.ஏ. (Fellow of Arts) என்ற இரண்டாண்டு படிப்பில் சேர்ந்தார். கணிதத்தைப் பெருவிருப்பத்தோடு பயின்றார்.

முதலாமாண்டு இறுதித் தேர்வில் கணிதத்தைத் தவிர மற்ற பாடங்களில் தோல்வி அடைந்தார். எனவே, உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

படிப்பு பாதியிலேயே நின்றுவிட்டது. ஓராண்டு கழித்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். இரண்டுமுறை எஃப்.ஏ. தேர்வு எழுதினார். இருமுறையும் கணிதத்தைத் தவிர பிற பாடங்களில் தோல்வியடைந்தார் என்றார் எழில். இடைமறித்த தேவநேயன், “ஏன் மற்ற பாடங்களில் தோற்றார்?” என்ற கேள்வியை எழுப்பினான். “அதற்கான காரணத்தை நீங்கள்தான் கூற வேண்டும்” என்றார் எழில்.

(தொடரும்)

கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்

தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in