நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 7: வெற்றிகரமான பட்ஜெட் ஃபார்முலா வேண்டுமா?

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 7: வெற்றிகரமான பட்ஜெட் ஃபார்முலா வேண்டுமா?
Updated on
2 min read

நாட்டுக்கு ஆண்டுதோறும் பட்ஜெட் போடப்படுவதைப்போல வீட்டுக்கும், தனிநபருக்கும் கூட பட்ஜெட் போட வேண்டும். வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, ஆண்டு வாரியாக‌ பட்ஜெட் போட்டு வாழ்ந்தால் நிதி நிலைமை மேம்படும். இதுவரை பட்ஜெட் போடாதவர்கள் குறைந்தபட்சம் மாதாந்திர‌ பட்ஜெட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்.

வீட்டின் வரவு செலவு கணக்கை (பட்ஜெட்) எப்போதும் மாத‌த்தின் முதல் நாளிலே ஆரம்பித்துவிட‌ வேண்டும். இதற்காக செல்போனிலே மை பட்ஜெட், டே டு டே எக்ஸ்பென்ஸ், ஃபேமிலி பட்ஜெட் போன்ற செயலிகள் வந்துவிட்டன. மின்னணு சாதனங்களை காட்டிலும், ஒரு நோட்டில் வரவு, செலவு கணக்கு எழுதும்போது, பட்ஜெட் நம் மனதில் ஆழமாக பதிவாகும்.

பட்ஜெட் போடுவது எப்படி?

முதலில் உங்களின் நேரடி வருமானம், மறைமுக வருமானம், உபரி வருமானம் அனைத்தையும் சேர்த்து எழுத‌ வேண்டும். இதனை அடிப்படையாக வைத்து உங்களின் மாதாந்திர செலவுகளை, அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும்.

முதலில் அத்தியாவசிய செலவுகளுக்கு தேவையான பணத்தை ஒதுக்க வேண்டும். அடுத்ததாக தேவையின் தரவரிசையின் அடிப்படையில் அநாவசிய செலவுகளை வரிசைப்படுத்தி அதற்கு பணம் ஒதுக்க வேண்டும். பின்னர் அநாவசிய, தவிர்க்கப்பட வேண்டிய செலவுகளை எப்படி குறைப்பது என ஆராய வேண்டும்.

வீட்டுக்கு பால், மளிகை, மருந்துகள், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை குறைக்க முடியாது. ஆனால், வாரத்திற்கொரு முறை சினிமாவுக்கும், ஹோட்டலில் சாப்பிடுவதற்கும் அநாவசியமாக செலவிடும் பணத்தை தவிர்க்க முடியும்தானே?

அடுத்த கட்டமாக உங்களின் கடன்களை அதன் வட்டி விகிதத்தின் அடிப்படையில் எழுதுங்கள். முதலில் அதிக வட்டி செலுத்தும் கடனை அடைக்கும் வழியை கண்டறிந்து, அதற்கான தவணை தொகையை ஒதுக்கிவிடுங்கள். பின்னர் சேமிப்பு, முதலீடு, அவசர கால நிதி ஆகியவற்றையும் தனித்தனியாக எழுத வேண்டும்.

வெற்றிகரமான பட்ஜெட் ஃபார்முலா = 30/50/20

ஜப்பானின் முதல் பெண் பத்திரிகையாளராக அறியப்படும் ஹனி மொடாகோ 1904-ல் வெற்றிகரமான பட்ஜெட் ஃபார்முலா ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதன் பெயர் ககீபோ (Kakebo). அதாவது உங்களுடைய மொத்த வருமானத்தை 30/50/20 என மூன்றாக பிரித்துக்கொள்ள வேண்டும்.

50 சதவீத நிதியை, தவிர்க்கவே முடியாத உணவு, உடை, வாடகை, பெட்ரோல் போன்ற அத்தியாவசிய செலவுக்கு (Needs) ஒதுக்க வேண்டும். 30 சதவீத நிதியை நாம் வாங்க ஆசைப்படும் விஷயங்களுக்காக (Wants) ஒதுக்க வேண்டும். அடுத்த 20 சதவீத நிதியை கட்டாயம் சேமிப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிறார்.

ஆனால், கரோனா பெருந்தொற்று நெருக்கடி, விலைவாசி உயர்வு, சீரற்ற பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வருமானத்தில் கட்டாயம் 30 சதவீதம் சேமிக்க வேண்டும். 20 சதவீதத்தை ஆசைப்படும் விஷயங்களுக்காக ஒதுக்கலாம். பட்ஜெட்டின் முதல் ஒதுக்கீடு எப்போதும் சேமிப்பாகவும், 2வது ஒதுக்கீடு அத்தியாவசிய தேவைக்காக இருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.

அதேவேளையில் அமெரிக்காவை சேர்ந்த நிதி மேலாண்மை நிபுணர் டேவ் ராம்சே பட்ஜெட்டில் முதலில் அவசரகால நிதிக்கு பணம் ஒதுக்க வேண்டும். அதன் பிறகு செலவினங்களுக்கும், மூன்றாவதாக நமது கடன்களுக்கு தவணை தொகையை ஒதுக்க வேண்டும் என்கிறார்.

அடிப்படை விதி

குடும்ப நிதி மேலாண்மையின் மிக அடிப்படையான விதி ஒன்றே ஒன்றுதான். வருமானம் எவ்வளவாக இருந்தாலும், செலவு அதில் 50 சதவீதத்தை தாண்டவே கூடாது.

செலவுகள் அதிகரித்துக்கொண்டே போனால் கடன் எனும் கடலில் விழ வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் உலக புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட், ``நீங்கள் ஆசைக்குப் பொருட்களை வாங்கினால், தேவையான பொருட்களை விற்க நேரிடும்” என எச்சரிக்கிறார்.

பட்ஜெட் போடுவது எவ்வளவு முக்கியமோ அதனை பின்பற்றுவதும் அவ்வப்போது ம‌றுஆய்வு செய்வதும் மிக முக்கியம். ஒவ்வொரு மாதம் பட்ஜெட் போடும் போதும் முந்தைய மாதத்தில் ஏற்பட்ட திடீர் செலவுகள், அதிகரித்த செலவுகள், பின்பற்ற முடியாத அம்சங்களை ஆராய வேண்டும்.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் குழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு பெற்றோர் விவாதித்தால், அடுத்த மாதத்தில் ஏற்படக்கூடிய அநாவசிய செலவினங்கள் கணிசமாகக் குறையும்.(தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in