தயங்காமல் கேளுங்கள் - 7: ஞாபகசக்தி மாத்திரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்குமா?

தயங்காமல் கேளுங்கள் - 7: ஞாபகசக்தி மாத்திரை சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்குமா?
Updated on
2 min read

நவீனின் சென்ற வாரம் எழுப்பிய ஞாபக மறதி கேள்வி ஒரு வாரத்திற்குள் மறந்திருக்காது என நம்புகிறேன். நாம் முக்கியமாக கருதும் விஷயங்கள் எப்படி நினைவில் நிற்கின்றன, மற்றவை மறந்துவிடும் நிலை ஏற்படுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக பார்த்தோம்.

சரி, மறக்காமல் இருப்பது எப்படி என்ற கேள்விக்கான விடையை தேடுவோம் வாருங்கள். உண்மையில் மறதியைப் போக்கும் முக்கிய வழி, நமது குறுகிய கால (short term memory) ஞாபகங்களை நீண்டகால ஞாபகங்களாக (long time memory) மாற்றுவதுதான்.

தாய்மொழியிலேயே படிப்பது, புரிந்து படிப்பது, கவனத்துடன் படிப்பது, படங்களுடன் பொருத்திப் படிப்பது, எழுதி எழுதிப் படிப்பது, உரக்கப் படிப்பது, தொடர்புபடுத்திப் படிப்பது, mnemonics என அழைக்கப்படும் எளிய முறையில் கற்பது.

இவற்றையெல்லாம் திரும்பத்திரும்பச் செய்வது, இவை, நமது தற்காலிக ஞாபகங்களை நீண்டகால ஞாபகங்களாக மாற்றி பரீட்சையில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் வெற்றிபெற உதவும்.

மந்தமாக்கும் உணவு வேண்டாம்!

இந்த நீண்டகால ஞாபகத் திறனுக்கு பெருமளவு ஊக்கமளிப்பது நல்ல உணவு,நல்ல உறக்கம், உடற்பயிற்சி ஆகியவை என்று கூறும் மருத்துவர்கள் அதற்கான அட்டவணையையும் அளிக்கின்றனர். உணவைப் பொருத்தமட்டில், இதயம், நுரையீரல்,சிறுநீரகங்கள் உட்பட்ட நம் உறுப்புகள் அனைத்துக்கும் நன்மை சேர்க்கும் சரிவிகித உணவுகள் தான் ஞாபகத்திற்கான ஊட்டச்சத்து.

வல்லாரை உள்ளிட்ட அனைத்து கீரைகளும், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பழங்கள், காய்கள், கொட்டைகள், மீன் மற்றும் முட்டைகள் ஆகியவை நன்மை பயக்கும். அதேசமயம் மந்த நிலையை ஏற்படுத்தும் இனிப்பு வகைகள், துரித உணவுகள், அதிக கொழுப்பு மற்றும் அதிக மாவுச்சத்தை முற்றிலும் தவிர்ப்பதும் முக்கியம்.

அதாவது மூளைக்கு எப்படி ஆக்சிஜன் தேவையோ, அதேபோல க்ளுக்கோஸும் தேவைதான். ஆனால், அதுவே தேவைக்கு அதிகமாக சேரும்போது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி, மந்தநிலையை ஏற்படுத்திவிடும் என்பதால்தான் சில உணவுகளைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

பரீட்சைக்கு முன் நல்ல உறக்கம்

அத்துடன் மூளையின் நீர் அளவு கிட்டத்தட்ட 73 சதவீதம் என்பதால் நீர்வறட்சி ஏற்படாத வண்ணம் அதிகளவில் தண்ணீரைப் பருகுவது ஞாபகத் திறனை அதிகரிக்கிறது. அதேசமயம் காஃபி, டீ போன்ற பானங்கள் தற்காலிகமாக மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க மட்டுமே உதவுமேயன்றி ஞாபகத் திறனை அதிகரிக்காது என்கின்றன. மேலும் கோகோவில் உள்ள ஃப்ளாவனாய்டுகள் நினைவாற்றலுக்கு நன்கு உதவுவதால், மிதமான அளவில் டார்க் சாக்லெட்டுகளை உட்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

உணவு ஒருபக்கம் ஞாபகத் திறனுக்கு உதவுகிறது என்றால் நல்ல உறக்கம் மறுபக்கம் ஞாபகத்திறனை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. நாம் உறங்கும்போது சுழற்சிமுறையில் உறங்குகிறோம் என்றும், அப்போது நம் மூளை நம் நினைவலைகள் ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்தி நமது ஞாபகத் திறனை அதிகரிக்கிறது என்கிறது அறிவியல். குழந்தைப்பருவத்தில் குறைந்தது 9 மணிநேர உறக்கம் அவசியம் என்றும், அதிலும் பரீட்சைக்கு முந்திய இரவு உறக்கம் மிக மிக அவசியம் என்றும் வலியுறுத்துகிறது.

உணவு மற்றும் உறக்கத்துடன் கைகோர்த்து நிற்கிறது உடற்பயிற்சி. மாலையில் மிதமான உடற்பயிற்சிக்குப் பின் ஆரோக்கிய உணவும் நல்ல உறக்கமும் நாள் முழுவதும் நிகழ்ந்தவற்றை நினைவில் கொள்ள பெருமளவு உதவுகிறது. இவை அனைத்துக்கும் மேலாக, மன அழுத்தமின்றி உற்சாகமாக இருப்பதுதான் மிகப்பெரிய மெமரி பிளஸ்.

அப்படியென்றால் கடைகளில் கிடைக்கும் மெமரிக்கான மாத்திரைகள் அல்லது ஹெர்பல் பொடிகள் பலனளிக்காதா என்றால், Nootropics என அழைக்கப்படும் பெரும்பாலான மருந்துகள் மேற்சொன்ன ஓமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஆனால், அவற்றின் தேவைகள் மற்றும் அளவுகள் தெரியாமல் உட்கொள்வது உடல்நலத்திற்கு பெருங்கேடாக மாறும் வாய்ப்புகளே அதிகம்.

மொத்தத்தில், ஞாபகத் திறன் என்பது உடற்பயிற்சி போன்றது. மீண்டும் மீண்டும், அதை செயல்படுத்தும்போது, அதன் திறன் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதேபோல ஞாபக மறதிக்கென எந்த மேஜிக் மாத்திரையும் இல்லை. மேற்சொன்ன வாழ்க்கை முறைகளே ஞாபகத்திறனைக் கூட்டும் மேஜிக் மாத்திரைகள் என்பதைப் புரிந்து கொள்வோம்.

(ஆலோசனைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in