

தன் நாடு மட்டுமல்ல எந்த நாடும் அடிமையாக இருப்பதை உண்மையான ராணுவ வீரர் விரும்பமாட்டார். அதேபோன்று தன் மக்கள் மட்டுமல்ல எந்த மக்கள் துயருற்றாலும் மருத்துவ சேவை செய்ய உண்மையான மருத்துவர் மறுக்கமாட்டார். இந்த இரண்டு பண்புகளுமே ஒரே மனிதரிடம் இருந்துவிட்டால்!
அப்படியொரு மனிதர் தமிழகத்தில் பிறந்து மருத்துவம் படித்து, இந்திய ராணுவத்துக்கு மட்டுமல்லாமல் மியான்மர், ஜப்பான், கொரியா ராணுவத்துக்கும் மருத்துவ உதவி செய்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்தார். அவர்தான் லெஃப்டினன்ட் கர்னல் டாக்டர் ஆற்காடு. ஜி. ரங்கராஜ்.
1917-ம் ஆண்டு மார்ச் 12-ல் ஆற்காட்டில் பிறந்தார் ரங்கராஜ். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தனக்குப் பிடித்தமான மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். 1930களில் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் பயின்றார். மருத்துவரானவுடன் டாக்டர். ரங்கராஜ் தேர்ந்தெடுத்தது என்னவோ தனது இளமைக்கால கனவான ராணுவத்தை.
முதல் இந்தியர்
ஆம்! தனது தந்தையைப் போல தானும் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற கனவுடன் இருந்த டாக்டர் ரங்கராஜ், 1941-ல் ஐ.எம்.எஸ். எனும் இந்திய மருத்துவப் பணிக் கழகத்தின் வழியாக ராணுவத்தில் சேர்ந்தார். மீரட்டில் இயங்கிவந்த இந்திய ராணுவ மருத்துவமனையில் உதவி மருத்துவரானார்.
மக்களுக்கான மருத்துவராக மட்டுமல்லாமல் நாட்டுக்காகவும் பணியாற்ற விரும்பிய அவரது விருப்பத்தைக் கண்ட அன்றைய பிரிட்டிஷ் அரசு, தாங்கள் புதிதாக அமைத்த பாராசூட் படைப்பிரிவில் டாக்டர் ரங்கராஜை இணைத்துக் கொண்டது. அப்படி, 1942 ஆம் ஆண்டில் மேஜர் மதுரா சிங்குடன் சேர்ந்து, பாராசூட்டில் இருந்து குதித்து ‘பாராசூட் ஜம்பிங்' செய்த முதல் இந்தியர் இவரே.
இரண்டாம் உலகப்போர் இறுதிக்கட்டத்தை அடைந்த நேரத்தில் இந்தியாவில் அல்லாமல் பர்மா (இன்றைய மியான்மர்) எல்லையில் சில காலம், தொடர்ந்து ஷங்ஷாக் போரில் ஜப்பானில் சில நாட்கள் பணிபுரிந்தார். போர்ச் சூழலில் அவசர அதிரடி மருத்துவம் புரியும் கலையில் தன்னைக் கூர்மையாக்கிக் கொண்டு பின்னர் தாயகம் திரும்பினார். அடுத்த இரண்டொரு ஆண்டுகளிலேயே இந்தியா சுதந்திரம் அடைந்தது.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை போலவே இந்திய ராணுவம் பாராசூட் படையும் இரண்டாகப் பிரிந்து, சில இழப்புகளையும் சில முன்னேற்றங்களையும் சந்தித்தது. நம்மிடம் மிஞ்சி இருந்த 50-வது மற்றும் 77-வது பாராசூட் பிரிகேட்களை வைத்து இந்தியா போர்க்களத்தில் வீரர்களுக்கு மருத்துவம் செய்யும், பிஎஃப்ஏ எனும் பாராசூட் ஃபீல்ட் ஆம்புலென்ஸ் பிரிவை வலுப்படுத்திக் கொண்டதில் ரங்கராஜின் பங்கும் இருந்தது.
உயிர் காத்த தேவதைகள்
இந்த சமயத்தில் மூண்டது கொரியப் போர். 1950-ல், தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல் நடத்த ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு நடுநிலையுடன் மருத்துவ உதவியை தென்கொரியாவுக்கு வழங்க முன்வந்தது.
1951-ல், ரங்கராஜ் தலைமையில் புறப்பட்டது ‘60 PFA' வின் MASH (Mobile Army Surgical Hospital) எனும் சிறப்பு வான் படை ஆம்புலென்ஸ். கிட்டத்தட்ட 346 பணியாளர்கள், நான்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள், இரண்டு மயக்கவியல் நிபுணர்கள், ஒரு பல் மருத்துவர் மற்றும் ஆறு மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் மருத்துவ உபகரணங்களுடன் தென்கொரியா சென்றடைந்தது இந்த இந்தியப் படை.
மலையும் கடலும் சூழ்ந்த தீபகற்பமான கொரியாவில், வாகன வசதியோ சாலை வசதிகளோ இல்லாத பல இடங்களுக்கு நீராவி புகைவண்டிகளில் தங்களது உபகரணங்களை ஏற்றியும், வெறும் கால்களால் ஓடியும் பெரும் சிரமத்துடன் போர் நடக்கும் இடங்களை அடைந்து மகத்தான மருத்துவ சேவை புரிந்தது ரங்கராஜ் தலைமையிலான இந்திய மருத்துவ ராணுவப் படை.
பல சமயங்களில் விண்ணிலிருந்து பாராசூட் மூலமாக குதித்து மருத்துவ உதவி செய்த டாக்டர் ரங்கராஜ் தலைமையிலான இந்திய ராணுவக் குழு ஏறத்தாழ 2,22,000 பேருக்கு வைத்தியம், 20,000 போர்க்காயங்களுக்கு சிகிச்சை அளித்ததுடன், பெரும் வசதிகள் இல்லாத அந்தச் சூழ்நிலையில் உலகநாடுகளின் மற்ற ராணுவ மருத்துவர்கள் தயங்கியபோதும் சிறிதும் அசராமல், திறந்தவெளியில் 2300 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட இந்திய ராணுவப் படையிடம் நாங்கள் கற்றுக்கொண்டது ஏராளம் என்று இன்றும் நினைவுகூரும் கொரிய மருத்துவர்களும் செவிலியர்களும், இவர்களை "பிரவுன் தொப்பி அணிந்த காவல் தேவதைகள்" என்றுதான் குறிப்பிடுகின்றனர்.
மூன்று வருடங்களுக்கும் மேல் கொரிய மக்களுக்காக பணிபுரிந்து, 1954-ல் நாடு திரும்பிய 60 பிஎஃப்ஏ குழுவுக்கும், இந்திய ராணுவத்துக்கும் மிகுந்த நன்றி தெரிவித்த தென் கொரிய அரசு, "இந்தியா எனும் நண்பன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இந்தியாவின் அன்றைய தியாகங்களும் சேவைகளும் இல்லையெனில் இன்றைய கொரியா இல்லை" என்றே இப்போதும் கூறி வருகிறது.
நாடு திரும்பிய டாக்டர் ரங்கராஜுக்கு மகாவீர் சக்ரா விருதினையும் உடன் பணிபுரிந்தவர்களுக்கு வீர் சக்ரா விருதுகளையும் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் வழங்கினார். கொரிய அரசு சுங்மூ சிறப்பு ராணுவ விருது அளித்து தனது நன்றியைத் தெரிவித்தது.
டாக்டர் ரங்கராஜின் சேவையை தனது மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக கொரியாவில் போர் நினைவிடங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் அவருடைய புகைப்படத்தை வைத்ததுடன், இந்தியாவிலும் நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்க விரும்பியது கொரியா.
போர்கள் ஓய்ந்து நாடு திரும்பிய டாக்டர் ரங்கராஜ் ஒருபோதும் ஓய்ந்திருக்கவில்லை. தொற்றுநோய்களை ஒழிக்க 1961-ல் ஆஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்தில் சிறப்பு பட்டமும், பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நோய்த்தொற்றுக்கான சிறப்புப் பட்டமும் பெற்றார். 1967-ல், ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் முழு நேர மருத்துவராக மக்கள் பணிகளை மேற்கொண்டார்.
சின்னம்மை நோய் எதிர்ப்புத் திட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்க வழிவகுத்தார். அத்துடன் யுனிசெப், உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் நல்வாழ்வு ஆகியவற்றில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
தனது வாழ்நாள் முழுவதும் மருத்துவத்தையும் ராணுவத்தையும் உயிர்மூச்சாக சுவாசித்த டாக்டர் ரங்கராஜ், 2009 மார்ச் 23 அன்று இயற்கை எய்தினார்.
(மகத்துவம் தொடரும்)
கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com