

பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகள், முக்கியமாக வளரிளம் பருவ குழந்தைகள் யூடியூபராக ஆசைப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். சில குழந்தைகள் நேரிடையாகவும் என்னிடம் சொல்லி வருகின்றார்கள்.
தான் என்னவாக வேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாருமே நுழைய அனுமதி இல்லை, அவர்களின் பெற்றவர்களுக்கும் அந்த அனுமதி இல்லைதான்.
ஆனால், அந்த கனவுகள் வலுவானதா என்பதைப் பற்றியும் குழந்தைகள் தாங்களே அசைபோட வேண்டும். சுய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த சுய பரிசோதனை திறனும் தானாக உருவாகாது. அதற்கு சில பயிற்சிகள் தேவை.
சின்னதாக ஒரு தேடல் தேவை. சுய பரிசோதனை என்றாலே உடனே அது எதிர்மறை எண்ணமல்ல. சுய பரிசோதனையே நேர்மறை எண்ணத்தின் முக்கிய வெளிப்பாடு.
சரி யூடியூப் கனவுக்கு வருவோம். சுமார், ஐந்து ஆண்டுகள்கூட வேண்டாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்கூட யூடியூபராக வேண்டும் என்ற ஆசை பெருவாரியாக இருக்கவில்லை.
கரோனா பெருமுடக்கம் எல்லோரையும் இணையம் பக்கம் திருப்பிவிட்டது. வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழல் நிலவியது. சக மனிதனோடு பேசுவதற்கு வாய்ப்பு குறைந்தது. மேலும் எல்லோரும் அலைபேசி கையுமாகச் சுற்றினார்கள்.
நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் செலவழித்தனர். மொபைலைத் தொடாதேஎன்றவர்களே அதை வைத்து படி என்று சொல்ல வைத்தது கரோனா காலம்.
இதன் நீட்சியாக பற்பல யூடியூப் சேனல்கள் செழித்தன. பலரும் இதனை முழு நேர தொழிலாகவே மாற்றிக்கொண்டார்கள். தொழில்என்று வந்துவிட்டால் அதுவியாபாரம்.
நுணுக்கங்களை தெரிந்து வைத்துக்கொள்ளல், எப்படி நிறையப் பார்வையாளர்களை வரவழைத்தல், நிறைய லைக்ஸ், நிறைய சப்ஸ்கிரைபர்கள் என மனம் அதிலேயே இருக்கும்.
யூடியூபராக சாதித்துக்காட்டக் கண்டிப்பாகத் தனித்திறமைகள் வேண்டும். நிறைய பொறுமை அவசியம். திட்டமிடல் அவசியம். தகவல்களை சரி பார்க்க வேண்டும், அழகாகப் பேச வேண்டும், காட்சி வடிவில் சிறப்பாக படைக்க வேண்டும், கண்டிப்பாகத் தொழில் நுட்பமும் புரிந்திருக்க வேண்டும்.
எந்த துறையானாலும் அதில் நாம் எவ்வளவு கவனமும் ஈடுபாடும் செலுத்துகின்றோமோ அவ்வளவு பலன் கிடைக்கும்.
எப்படி பயன்படுத்தலாம்?
# நாம் ஒரு துறையில் சாதித்து அதனை யூடியூப் மூலம் உலகிற்கு வெளிச்சமிடுவதா அல்லது மற்றவர்கள் நம்முடைய சாதனைகளை, முயற்சிகளை அவர்களின் தளத்தில் வெளியிட வைப்பதா இதில் எதை நாம் தேர்வு செய்யப்போகிறோம் என்பதை முதலில் நிர்ணயிக்க வேண்டும்.
# யூடியூப் என்பது ஒரு வலைத்தளம். இன்று இது இவ்வளவு பிரபலமாக இருக்கிறது. 5 ஆண்டுகளில் இது காணாமல் கூட போகலாம்.
# யூடியூபின் விதிகள் மாறுதலுக்கு உட்பட்டது. நாம் வளர்க்கும் திறன்கள், அறிவு, ஆற்றல் நம்மோடுஎன்றும் தொடரும். நம்மோடு தொடரக் கூடியவற்றை வலுப்படுத்திக்கொள்வோம்.
# இப்படி உங்கள் கனவை திட்டமாக மாற்றிப் பாருங்கள், உங்களுக்கே அதன் பிளஸ், மைனஸ் புரிந்துவிடும்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்
தொடர்புக்கு: umanaths@gmail.com