Published : 11 Aug 2022 06:12 AM
Last Updated : 11 Aug 2022 06:12 AM

தயங்காமல் கேளுங்கள்-6: பாட்டு ஞாபகம் இருக்கு ஆனா படிப்பு மறந்துடுதே!

டாக்டர் சசித்ரா தாமோதரன்

“பத்து வருஷம் முன்னாடி கேட்ட சினிமாப் பாட்டு அப்படியே ஞாபகம் இருக்கு. நேத்து படிச்ச பாடம் மட்டும் எக்ஸாம் ஹால் போறதுக்குள்ள மறந்துடுது... இந்த மறதிக்கு மாத்திரை மருந்து எதுவும் இருந்தா சொல்லுங்க டாக்டர்"

பிளஸ் 2 பயிலும் மாணவன் நவீன் சிரிப்பு எமோஜியுடன் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். நவீனுக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்கும் தோன்றும் கேள்வி தானே இது.

மனிதனின் சுவையான ஆனாலும் விந்தையான சிறப்பம்சங்களில் ஒன்று நீண்டகால ஞாபகத் திறன். ஒரு பாடல், ஒரு சுவை, ஒரு மணம் இப்படி ஏதாவது ஒன்றை நாம் உணரும்போதே, பொக்கிஷமாகப் புதைந்திருக்கும் பல நினைவுகள் மீண்டும் நம் ஞாபகத்தில் வருவதை நாம் பலமுறை உணர்ந்திருப்போம்.

இப்படி ஒவ்வொருவருக்கும் நீண்டகால ஞாபகசக்தி இருக்கையில் மறதி என்பது எப்படி ஏற்படுகிறது? அதுவும் பாடங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் அவசியமிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கே மறதி என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? இதைப் போக்க உண்மையிலேயே மாத்திரை மருந்துகள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன் ஞாபக மறதி என்றால் என்ன, அது ஏன்‌ ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.

ரசாயன நடனம்!

உலகிலேயே மிக நுட்பமானதும், அதிசயமானதும் எது என்றால் அது மனித மூளை அமைப்பும் அதன் செயல்பாடும்தான் எனலாம். பொதுவாக ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கும், கேட்கும், முகரும், சுவைக்கும், தொடுதலின் வழியாக உணரும் உணர்வுகள் ஒவ்வொன்றும் தத்தம் நரம்புப்பாதை வழியாக மூளையைச் சென்றடைகிறது. அவை ஒவ்வொன்றும், மூளைக்குள்ளிருக்கும் பல்லாயிரம் கோடி நுட்பமான நியூரான்களுக்குள் நடத்தும் ஒரு மின்-ரசாயன நடனத்தின் விளைவைத்தான் சிந்தனை மற்றும் செயலாக்கம் என்று சொல்கிறோம்.

இப்படி, ஒரு நாளில் மட்டும் 50,000 முறைக்கும் மேல் சிந்திக்கிறது நமது மூளை. ஒவ்வொரு சிந்தனையின் போதும் நமது மூளை நரம்புகளில் புதியதொரு இணைப்பை உண்டாக்கி அவற்றை ஞாபகத்திலும் வைத்துக் கொள்கிறது.

இப்படி பதிவதிலும் வெவ்வேறு அணுகுமுறை உள்ளது. ஃபோன் நம்பர், ஓடிபி, ஃப்ளாஷ் நியூஸ் போன்ற வெறும் 20 அல்லது 30 விநாடிகள் மட்டுமே ஞாபகம் வைத்துக்கொள்ள தேவையான தகவல்களை short term memory எனும் குறுகிய கால ஞாபகங்களை, Frontal and prefrontal cortex-ல் பதிந்து உடனே அழித்தும் விடுகிறது மூளை.

அதுவே, உணவு, உறைவிடம், உறவினர் உள்ளிட்ட Long term memory எனும் நீண்ட கால நினைவுகளை, நமது நடுமூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதியில் ஒரு ஹார்ட் டிஸ்க் போல மூளைபதிந்து கொள்கிறது. கூடவே நியோ கார்ட்டெக்ஸ் எனும் நரம்புகளின் உதவியுடன் தேவைப்படும்போது அவற்றை வெளிப்படுத்தவும் செய்கிறது.

மறப்பது மனித இயல்பு!

உண்மையில், நமது ஞாபகங்கள் ஒவ்வொன்றும் அட்டைப்புதிர்கள் போன்றவை. துண்டுதுண்டாய் நமக்கு நிகழும் நிகழ்வுகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நரம்புகள், இணைக்கப்பட்டவுடன் அவற்றை ஞாபகங்களாகவும் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் ஒரு பாடல், ஒரு காட்சி, ஒரு மணம் அல்லது ஒரு சுவை காலம் கடந்தும் நமது பழைய நினைவுகளை மீட்டெடுக்கின்றன. பத்து வருடங்களுக்குப் பின்பு கூட நவீனுக்கு பாடல் வரிகள் நினைவில் வரவும் செய்கின்றன.

ஆனாலும், ஒருவர் என்னதான் ஞாபக சக்தியில் ‘புலி’ என்றாலும், ஞாபக மறதி இல்லாத மனிதரே உலகில் இல்லையென்பதுதான் உண்மை. மறப்பது என்பது மனித இயல்பு. தற்காலிக நினைவுகளாக நாம் நினைக்கும் அனைத்தையும் நவீன் போன்ற இளைஞராக இருந்தாலும், நவீனின் தாத்தா போல வயது முதியவராக இருந்தாலும் உடனே மறக்கத்தான் செய்யும்.

ஆனால், இங்கு நவீன் செய்யும் தவறு யாதெனில் படிப்பு என்பதை வாழ்க்கைக்கான நீண்ட கால நினைவாக கருதாமல், பரீட்சையில் தேர்ச்சி அடைய அவசியமான தற்காலிக நினைவாக நினைப்பதுதான் காரணம். அதனால்தான் நவீனுக்கு முன்பு படித்தது பரீட்சை ஹாலுக்குள் செல்வதற்குள் மறந்துவிடுகிறது.

சரி மறக்காமல் இருப்பது எப்படி என்று கேட்கிறீர்களா? அதை அடுத்த வாரம் பார்த்துவிடுவோம்.

(ஆலோசனைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.

தொடர்புக்கு: savidhasasi@gmail.com

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x