

நிதி இலக்கில் மூன்று முக்கிய நிலைகள் இருக்கின்றன. வயதுக்கு ஏற்றவாறு நிதி இலக்கின் நிலைகளில் கால வரையறை மாறும். அத்தகைய இலக்குகளையும் அவற்றை அடைவதற்கான வழிகளையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
1. குறுகிய கால நிதி இலக்குகள் (3 மாதம் முதல் 1 ஆண்டு வரை)
3 மாதத்துக்குள் / 1 வருடத்திற்குள் அடையக்கூடிய சிறிய நிதி இலக்குகளை உருவாக்க வேண்டும். “ஒரே மாதத்தில் கோடீஸ்வரன் ஆவேன்” போன்ற சாத்தியம் அற்ற இலக்குகளை நிர்ணயிக்கக்கூடாது. கொஞ்சம் கஷ்டப்பட்டால் அடையக்கூடிய இலக்காக இருந்தால் சிறந்தது.
வாட்ச், சைக்கிள், பிடித்த புத்தகம், கணினி உள்ளிட்டவற்றை வாங்குவது, ஆண்டின் இறுதிக்குள் உண்டியல் முழுக்க பணத்தை சேமிப்பது, வங்கி கணக்கு தொடங்குவது, ஒரு நூலை முழுமையாக வாசிப்பது, இசை கற்பது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வாசிப்பு, புதியவற்றை கற்கும் பழக்கம் உங்களுக்குள் புதிய திறமைகளை தோற்றுவிக்கும். அந்த திறமையின் மூலம் பின்னாளில் நிதி ஆதாரங்களை பெருக்க முடியும்.
2. இடைக்கால நிதி இலக்குகள் (1 ஆண்டு முதல் 6 ஆண்டு வரை)
பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை இடைக்கால இலக்கு அவரவர் படிக்கும் வகுப்புக்கு ஏற்றவாறு மாறும். இருப்பினும் குறுகிய கால இலக்கை விட சற்று பெரிய இலக்கை இந்த இடைக்கால நிதி இலக்கில் மைல் கல்லாக நிர்ணயிக்க வேண்டும்.
உதாரணமாக, சேமிப்பை உண்டியலுடன் நிறுத்தாமல் அஞ்சலகம், வங்கி என்ற நிலைகளுக்கு மாற்ற வேண்டும். 10 மற்றும் 12 வகுப்புகளில் அதிகபட்ச மதிப்பெண் பெறுதல், உயர் கல்விக்கான கட்டணத்தை சேமிக்க வேண்டும், வருமானம் தரும் வகையில் முதலீடு செய்ய வேண்டும், பைக் வாங்க வேண்டும், மடிக்கணினி வாங்க வேண்டும் போன்றவை கூட இலக்காக இருக்கலாம்.
3. நீண்ட கால நிதி இலக்குகள் (3 வருடம் முதல் 10 வருடம் வரை)
இது பொதுவாக 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். பள்ளி மாணவர்கள் வளர்ந்து வேலைக்குச் செல்லும் பருவத்தை கணக்கில் கொண்டு, இதன் கால அளவை 10 ஆண்டுகள் வரை கூட நீட்டித்துக் கொள்ளலாம். இதில் கார் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அரசு வேலைக்குச் செல்ல வேண்டும், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது போன்ற இலக்குகள் இருக்கலாம்.
அதே போல நிதி இலக்கை அடைய பணத்தைச் சேமிக்கவும், அதனை நல்ல வழியில் முதலீடு செய்ய வேண்டும். நிரந்தர வைப்புத்தொகை, பி.பி.எஃப்., தங்கம், பங்குச்சந்தை ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இலக்கை அடைய என்ன வழி?
இந்த 3 நிலைகளைத் தவிர 15 வருடம், 20 வருடம், 25 வருடம் என அவரவர் வயதுக்கு ஏற்றவாறு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானால் இலக்கை தீர்மானித்துக் கொள்ளலாம். இந்த இலக்குகளை நாட்குறிப்பில் எழுதி வைத்து அடிக்கடி எடுத்து பார்த்து, காலத்துக்கு ஏற்றவாறு அதை அடைவதற்கான நிதி திட்டமிடல்களை வகுக்க வேண்டும்.
மதாந்திர, வருடாந்திர பட்ஜெட் போட்டு, அதனை கறாராக பின்பற்றி வாழ வேண்டும். தொலைநோக்கான திட்டங்களும், தொடர் கண்காணிப்பும் இருந்தால் இலக்கை எளிதாக அடைய முடியும்.
நிதி இலக்கின் 3 நிலைகள் என்பது எளிதில் அடையக்கூடிய மைல் கற்கள் ஆகும். அதனை அடையும் போது கிடைக்கும் உற்சாகமே அடுத்த இறுதி இலக்கை நோக்கிய பயணத்துக்கு எரிபொருளாக அமைந்துவிடும்!
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in