

ஊடக படிப்புகளில் முதன்மையானதாக இதழியல் மற்றும் தொடர்பியல் படிப்பினைக் கூறலாம். இதில் தொடர்பியலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தொடர்பியல் தொடர்பான அறிமுகமே இல்லாமல் இன்று நிறைய மாணவர்கள் களத்திற்கு வந்துவிடுகின்றனர். தொடர்பியலில் பல வகைகள் உள்ளன.
எந்த ஒரு ஊடகத்திற்கு சென்றாலும், முதலில் அந்த ஊடகத்தின் வாசகர்கள் யார்? என்பதை அறிந்துகொள்வது மிக முக்கியம். அதைவிட அந்த ஊடகத்தினை குறைந்தது ஒரு மாதமாவது பார்க்கவோ, படிக்கவே செய்தல் அவசியம். நேர்முகத் தேர்வுக்குச் செல்வதற்கு முன், அந்த ஊடகத்தினை முழுவதுமாக தெரிந்துகொள்வது மிக அவசியம்.
சித்திரமும் கை பழக்கம்
அச்சு ஊடகங்களில் பணியாற்ற விரும்புபவர்கள், பத்திரிகைகளை தொடர்ந்து வாசிப்பது அவசியம். ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்பதால், அச்சு ஊடகங்களுக்குத்தான் வரவேண்டும் என முடிவு செய்துவிட்டால், நிறையப் படிக்கவும் வேண்டும். இதைத்தான் என்று இல்லாமல், அனைத்து துறைசார்ந்த புத்தகங்களையும் படித்தே ஆகவேண்டியது அவசியம்.
சென்னை போன்ற நகர்ப்புறங்களில் மட்டுமே கிடைத்த வசதி, இன்று கிராமப் புற மாணவர்களுக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாகப் புதிதாக வெளியான புத்தகங்களை முதலில் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் மட்டுமே வாங்க முடிந்தது. இன்று நாட்டின் எந்த மூலையிலிருந்தாலும், பணம் மட்டும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் வாங்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது.
சொற்களின் வரலாறும் அரசியலும்
அச்சு ஊடகத் துறையில் செம்மையாக பணியாற்ற விரும்புபவர்களுக்கு நல்ல அகராதி மிக முக்கியம். வழக்கமாக எங்கள் முதுகலை ஊடக வகுப்புகளில் நான்கு வகையானஅகராதிகளைப் பரிந்துரை செய்வதுண்டு.
நல்ல அகராதிகள் ஊடக மாணவர்களுக்கு ஒரு வழித்துணை. தற்காலத் தமிழ் மொழியைப் பிழையின்றி எழுத ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யை பயன்படுத்தலாம். தமிழ் ஊடகங்களில் தமிழுக்கு இணையாக ஆங்கிலமும் முக்கியம். அதற்குச் சரியான அகராதியாக ‘ஆக்ஸ்போர்டு அட்வான்ஸ் லேனர்ஸ் டிக்சனரி’யை கூறலாம்.
ஒரு சொல்லின் வேர்ச்சொல் மிக முக்கியம். ஊடகத்தில் எழுதுபவர்களுக்கு ஒரு வார்த்தை எங்கிருந்து உருவாகியது, அந்த வார்த்தையின் வரலாறு, அரசியல் என எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். இதற்காக வேர்ச்சொல் (எட்டிமாலஜி) அகராதி ஒன்றும் இன்று அவசியம்.
ஆனால், இன்று அகராதி ஒன்றினை வாங்க வேண்டும் என்று கூறியவுடன் வரும் பதில், என் ஸ்மார்ட் போனிலேயே அது இருக்கிறது, தனியாக எதற்கு வாங்க வேண்டும் எனக் கேட்பவர்கள்தான் அதிகம். கைப்பேசி என்பது பேசுவதற்கு, படிப்பதற்கு அல்ல. நம்மில் எத்தனை பேர் ஒரு முழுமையான புத்தகத்தினை கைப்பேசியில் படித்திருப்போம்.
எனவே, அச்சு ஊடகம் என்பது ஒரு தனித்துவமான ஒன்று. அச்சு ஊடகத்திற்கான செய்திகளை எழுதுவது ஒரு கலை. தொடர்ந்த எழுத்துப் பயிற்சியின் துணை கொண்டே வெற்றியடைய முடியும். எழுத்துப் பயிற்சியை எளிதாகப் பெற சமூக ஊடகங்களிலும், வலைப்பூக்கள் வழியாகவும் எழுதிக் கொண்டே இருக்கலாம்.
அதே சமயத்தில் பகுதி நேரமாக ஊடகங்களில் எழுதக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதும் மிகவும் அவசியம்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com
| போலிச் செய்தி எது? “இதழியல், போலிச் செய்தி & போலித்தகவல்: இதழியல் கல்வி மற்றும் பயிற்சிக் கையேட்டு நூல்” ஒன்றினை யுனெஸ்கோ தமிழில் வெளியிட்டுள்ளது. போலிச் செய்தி எது? போலித் தகவல் எது? அதனை எப்படிக் கண்டுபிடிப்பது பற்றிய இந்த கையேடு இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புத்தகத்தினை தமிழில் மொழிபெயர்த்தவர் பேரா.சு.நாகரத்தினம். பதிவிறக்கம் செய்ய இணைய முகவரி: https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000380423 அதே போன்று பிபிசியும் ஊடகக் கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஒரு ஆங்கில கையேட்டினை வெளியிட்டுள்ளது. அதனை இந்த தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். https://www.bbc.co.uk/newsstyleguide/all |