கதை கேளு கதை கேளு 6: ஜாலியன் வாலாபாக் படுகொலை

கதை கேளு கதை கேளு 6: ஜாலியன் வாலாபாக் படுகொலை
Updated on
2 min read

முன்ன ஒரு காலத்துலன்னு பாட்டி கதை சொல்ல ஆரம்பிக்க, கூட்டமா உட்கார்ந்து கதையின் வழியாக நிலா வரைக்கும் பயணம் செய்த தலைமுறைங்க நாமெல்லாம். இப்போது இருக்கும் தலைமுறை, தெருவில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.

நம் காலத்து திண்ணை வைத்த வீட்டையும், தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்க போடும் சண்டைகளையும் அனுபவமாக அறியும் வாய்ப்பு இழந்தவர்கள். விழியன் குழந்தைகளுக்காக பென்சில்களின் அட்டகாசம், டாலும் போன்ற புத்தகங்கள் எழுதிய குழந்தைகள் மனம் புரிந்த சிறார் எழுத்தாளர்.

"1650 முன்ன ஒரு காலத்துல", அவரது எழுத்தில் ஓர் அட்டகாசமான புத்தகம். புத்தகத்தின் நோக்கம் 1919 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய உண்மை செய்திகளை சொல்வது.

பத்தாம் வகுப்பு புத்தகங்களில் ஒருவரியாகவே ஜாலியன் வாலாபாக் படு கொலை பற்றிய செய்திகளை இதுவரை அறிந்திருப்போம். சரீனா கௌர் என்ற பத்து வயது பெண் கதை கூறுவதாக புத்தகம் தொடங்குகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய செய்திக்கு நேரிடையாகச் செல்லாமல், கதை மிகவும் ஆர்வமாக செல்கிறது, நீச்சல் போட்டியில் பாட்டியின் பேச்சு கேளாமல் நீந்தச் செல்லும் சரீனா, போட்டி யில் வெற்றி பெற்றதும், சரீனாவின் தந்தை தோளில் தூக்கிக் கொண்டாடுவதும், சரீனா விடாதே நீந்து. என்று சொல்வதுமாக அப்பா மகளிடம் பேசும் தருணங்கள் எல்லாம் பெண் குழந்தைகளை எத்தனை அக்கறையும் கனிவும் கொண்டு நடத்த வேண்டும் என்றும் தன்னம்பிக்கையை தரவேண்டும் என்றும் உணர்த்துகிறது.

அறுவடை திருநாள்

பாட்டியாக வரும் கதாபாத்திரம் அருமை. பஞ்சாப்பில் விமரிசையாகக் கொண்டாடப்படும் அறுவடை திருநாள் விழாவைக் கொண்டாட ஊர்மக்கள் ஒன்று கூடி மாட்டுவண்டியில் பயணிக்க தயாராகின்றனர். சரீனாவின் அப்பா, பயணத்தின் போது அதிக சுமை நல்லதல்ல என்கிறார்.

பாட்டி பொருட்படுத்தாமல் தின்பண்ட மூட்டையை எடுத்து வருகிறார். பஞ்சாபில் நடந்த விடுதலைப் போராட்ட கலவரத்தினால், அறுவடைத் திருவிழா காண வெகுதூரம் பயணித்து வந்த மாட்டு வண்டிகள் பஞ்சாப்பின் நுழைவுவாயிலில் காத்திருக்க வேண்டிய நிலையாகிறது. அருகில் தங்கவும், உண்ணவும் ஏதும் சத்திரம் இல்லாதநிலையில், பாட்டி அனைவருக்கும் தின்பண்டங்களை எடுத்துத் தருகிறார்.

எதிலும் கணக்கு

சரீனாவின் கதாபாத்திரம் செதுக்கப்பட்டி ருக்கிறது. இப்புத்தகத்தில். பள்ளி சென்று படிக்க வேண்டும் என்று சரீனாவுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் இல்லை. கணிதம் மீது ஆர்வம் கொண்ட பெண்ணாக இருக்கிறாள். வந்திருக்கும் விருந்தாளிகள் எத்தனை பேர், அவர்களுக்கு தேவைப்படும் சப்பாத்தியின் எண்ணிக்கை எவ்வளவு என்று கணக்கு போடும் சுட்டிப்பெண்... எங்கும் கணக்கு எதிலும் கணக்காக இருக்கிறாள்.

ஆங்கிலேயர் காலத்திலேயே ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் இறந்தவர் எண்ணிக்கை ஐம்பது, நூறு என்றார்கள். இப்புத்தகத்தில் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ஜெனரல் ஓ. டயரின் ஆணையினால் படைவீரர்களின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட குண்டுகளின் எண்ணிக்கை 1650 என்கிறது புத்தகம்.

இப்புத்தகத்தின் முக்கியக் கதாபாத்திரம் உதம்சிங் என்பவர்தான். உதம்சிங் உண்மையில் வாழ்ந்தவர். மைதானப் படுகொலையின் போது, கண்ணால் பார்த்த சாட்சியாக இருந்தவர். படுகொலைக்கு பின்பு, இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தும், நீதிமன்றம் ஜெனரல் டயரின் மீது குற்றமில்லை என்று சொன்னபோது அதிர்ச்சிக்குள்ளாகியவர்.

ஆனால் டயரை மன்னிக்காதவர். இந்தப் படுகொலைக்கு காரணமான டயரை கொலை செய்ய திட்டம் தீட்டிக் கொண்டிருந்தவர். திட்டத்தை நிறைவேற்ற ஜெர்மனி, இங்கிலாந்து என பயணித்து, இறுதியில் படுகொலை நடந்து 21 வருடங்களுக்குப் பின்பு, ஜெனரல் ஓ டயரை இங்கிலாந்து நாட்டிலேயே, கேக்ஸ்டன் ஹாலில், உதம்சிங் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்.

"1650 முன்ன ஒரு காலத்துல" இந்த உண்மை நிகழ்வை புனைக்கதையாக்கி அழகாக, சரீனா கௌர் என்ற சின்னப்பெண் மூலம் உணர்வும், ஆழமும் கொண்ட சிறுகதையாக்கி நமக்கு பரிசளித்திருக்கிறார் விழியன். 1921 ல் காந்தியடிகளின் முயற்சியால் கிராமம் தோறும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட வரலாற்றுத் தகவல் இப்புத்தகம் வாயிலாக அறிய முடிந்தது. புத்தகம் வாசித்து முடித்த பின்னரும் ‘சரீனா.. அப்பா ஆசைப்பட்ட மாதிரி இப்போ நான் படிக்க பள்ளிக்கூடம் போகிறேன்!’ என்று சொல்வது கேட்கிறது.

கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், பள்ளி ஆசிரியை,
அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் மாவட்டம்.
தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in