வாழ்ந்து பார்! - 6: பலவீனத்தையே பலமாக மாற்ற முடியுமா?

வாழ்ந்து பார்! - 6: பலவீனத்தையே பலமாக மாற்ற முடியுமா?
Updated on
2 min read

“ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மணியனை தவிர மற்ற அனைவரும் சரியாக பதில் எழுதி இருந்தபோதும், எதனால் மணியனை ஆசிரியர் பாராட்டினார்?” என்ற கேள்வியுடன் கடந்த வாரம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் ஆசிரியர் எழில். அவனது நேர்மைக்காக என்றாள் இளவேனில். மற்றவர்கள் நேர்மையாக இல்லையா என எதிர்க்கேள்வி தொடுத்தான் அழகன்.

மணியன், தானாக எழுதினான்; மற்றவர்கள் கலந்துரையாடினர் என்று மறுவிடை தந்தாள் இளவேனில். கலந்துரையாடக் கூடாது என்று ஆசிரியர் சொல்லவே இல்லையே என்று மடக்கினாள் பாத்திமா.

அருளினியன் இடையில் புகுந்து, அவனது விடாமுயற்சிக்காக என்றான். சரி என்று அவனைப் பாராட்டிய எழில், “விடாமுயற்சி மணியனின் பலமா? பலவீனமா?” என்று வினவினார். பலம் என்றாள் மணிமேகலை. சரி என்ற ஆசிரியர், அவனது பலவீனம் என்ன என்று கேட்டார். சில மணித்துளிகள் அமைதியாகக் கடந்தன. எல்லாரும் கதையை நினைவுகூர்ந்தனர்.

யாரையும் கேட்கவில்லை!

தனது தாடையைத் தட்டித்தட்டிச் சிந்தித்துக்கொண்டிருந்த சுடர், “தனக்கு விளங்காததைப் பக்கத்தில் இருந்தவர்களிடமோ, ஆசிரியரிடமோ மணியன் கேட்காததுதான் காரணம்” என்றான். எல்லாரும் அவனையும் எழிலையும் மாறி, மாறிப் பார்த்தனர்.

எப்படி சொல்கிறாய் என்பதுபோல பாரத்தார் எழில். மீண்டும் தனது விளக்கத்தை சுடர் தொடர்ந்தான். “கேட்டிருந்தால், யாரேனும் ஒருவர் அவனுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுத்திருப்பார்கள்” என்று விளக்கினான் சுடர்.

சரி என்ற ஆசிரியர், நம் ஒவ்வொருவருக்கும் பலமும் பலவீனமும் இருக்கின்றன. எனவே, ஒவ்வொருவரும் தனது பலம், பலவீனத்தை அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் நமது பலத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் பலவீனங்களைக் கவனமாகக் களையவும் முடியும் என்றார்.

பலவீனங்களை எப்படிக் களைவது என்று வினவினான் கண்மணி. அந்தப் பலவீனத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பதன் மூலமாக என்றார் ஆசிரியர் எழில். மேற்கொண்டு அவர் விளக்குவதற்கு முன்னதாக, “நான் சொல்கிறேன்” என்றான் முகில். அனுமதிப்பதுபோல எழில் கையசைத்தார்.

நேரம் தவறாமை

“முன்பெல்லாம் நான் பள்ளிக்கு நேரங்கடந்துதான் வருவேன். இனிமேல் இப்படி வரக்கூடாது என்று தலைமையாசிரியர் ஒருநாள் கூறிவிட்டார். எப்படிச் சரியான நேரத்துக்கு வருவது என்று சிந்தித்தபோது, நான் பெரும்பாலான வேலைகளைக் காலையில்தான் செய்கிறேன் என்பது புரிந்தது.

அவற்றுள் உடைகளுக்கு இஸ்திரி போடுவது, பள்ளிக்குக் கொண்டுவர வேண்டிய பொருள்களைச் சரிபார்த்துப் பையில் எடுத்துவைப்பது, வீட்டுக்கு உதவியாகப் பாத்திரங்களைக் கழுவிவைப்பது போன்றவற்றை முந்தைய நாள் இரவே செய்யத் தொடங்கினேன். அதனால் காலையில் சீக்கிரமே பள்ளிக்குக் கிளம்ப முடிந்தது.

இவ்வாறு ‘நேரம் தவறுதல்’ என்ற பலவீனத்தைக் களைந்தேன். ‘நேரம் தவறாமை’ எனது பலமாக மாறிவிட்டது” என்றான் முகில். அனைவரும் கைதட்டி அவனைப் பாராட்டினர்.

“இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பலத்தையும் பலவீனத்தையும் உங்களது குறிப்பேட்டில் எழுதுங்கள். அவற்றை மற்றவர்களுக்குக் காட்டவோ, அவை பற்றி மற்றவர்களிடம் பேசவோ கூடாது” என்றார் எழில். மாணவர்கள் அப்பணியை அமைதியாகச் செய்தனர்.

அனைவரும் எழுதி முடித்ததும், ஒவ்வொருவரையும் அவரவர் பலங்களை வாசிக்குபடி ஆசிரியர் கூற, அனைவரும் வாசித்தனர். அவற்றைக் கரும்பலகையில் தொகுத்து எழுதிய எழில், “உங்களது உடன்பாட்டுப் பண்புகள், திறமைகள், நன்னடத்தைகள், நல்லியல்புகள் ஆகியன உங்களது பலங்களாக இருக்கின்றன.

நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது பலவீனங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அதனை எவ்வாறு களையப் போகிறீர்கள் என்பதை எழுதிக்கொண்டு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள்” என்று வகுப்பை நிறைவு செய்தார்.

கட்டுரையாளர்:
வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in