

வழக்கமான பொறியியல் படிப்புகளுக்கு மாற்றாக பயில விரும்புவோர் கட்டிடக்கலை வடிவமைப்பு பொறியாளர் படிப்பான பி.ஆர்க்., படிப்பில் சேரலாம். நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க் கட்டிடக்கலை வடிவமைப்பு பொறியாளர் படிப்பில் சேர ‘நாட்டா’ என்ற நுழைவுத் தேர்வு உதவுகிறது.
கட்டுமான பொறியியலில் பி.இ., சிவில் படிப்பை விட பி.ஆர்க்., படிப்பு நுட்பமானது. கட்டுமானங்களுக்கான திட்டமிடல், வடிவமைப்பு, அலங்காரம், வரைகலை உள்ளிட்டவை பி.ஆர்க்., படிப்பில் முக்கிய இடம் பிடித்திருக்கும். மேலும் பி.இ. சிவில் படித்தவர்கள் அளவுக்கு பி.ஆர்க்., படித்தவர்கள் களத்தில் அலையத் தேவையில்லை. இதனால் மகளிர் மத்தியிலும் பி.ஆர்க்., படிப்பில் சேர ஆர்வம் கொண்டோர் அதிகம். இந்த ஐந்தாண்டு பி.ஆர்க்., படிப்பில் சேர நாட்டா (NATA - National Aptitude Test in Architecture) நுழைவுத் தேர்வு உதவுகிறது.
பலமுறை எழுதலாம்
ஆங்கிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாக நாட்டா விளங்குகிறது. ஒரே ஆண்டில் பலமுறை நாட்டா நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. 17 வயது நிரம்பிய, பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதில் உச்ச வரம்பு இல்லை. கணிதத்தை முக்கிய பாடமாக உள்ளடக்கிய டிப்ளமோ படித்தவர்களும் எழுதலாம். ஆண்டின் பல்வேறு தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது அதற்கு மேலும் பங்கேற்கலாம்.
இந்த விபரங்களை முன்கூட்டியே விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடுவது அவசியம். கூடுதல் எண்ணிக்கையில் தேர்வுகளை எழுதுவோருக்கு, அதிக மதிப்பெண் பெறும் தேர்வு முடிவு பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நடப்பாண்டு நாட்டா தேர்வு ஜூன் 12, ஜூலை 7, ஆகஸ்ட் 7 ஆகிய தினங்களில் நடைபெற்றது. நாட்டா நுழைவுத் தேர்வு 2 பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு ஆன்லைனில் நடைபெறும். இது கொள்குறிவகை (objective type) வினாக்களின் அடிப்படையிலான தேர்வாகும். இரண்டாவது பிரிவு, தாளில் எழுதும் வரைகலை தொடர்பான தேர்வாகும். தேர்வு கால அவகாசம் 3 மணி நேரம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, நாகர்கோவில், வேலூர் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் செயல்படும்.
விண்ணப்ப நடைமுறை
தேர்வு மற்றும் விண்ணப்ப நடைமுறைகளை http://www.nata.in/ என்ற நாட்டாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இந்த தளம் வாயிலாக பதிவு மற்றும் விண்ணப்ப நடைமுறைகளையும் மேற்கொள்ளலாம்.
இங்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் விண்ணப்ப பக்கத்தை பூர்த்தி செய்வதுடன், ஆவண நகல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமான மாதிரி தேர்வு எழுதவும் இந்த தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
நாட்டா நுழைவுத் தேர்வு குறித்த தயக்கங்களை அகற்றுவதுடன் அதிக மதிப்பெண்கள் பெறவும் இந்த மாதிரி தேர்வு வழிசெய்யும். நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதற்கான பாடங்கள், தலைப்புகள், மதிப்பெண் விபரங்களையும் இந்த தளத்திலேயே அறிந்துகொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் தேர்வுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிகரிக்கும். ஒருமுறை மட்டும் எழுதுவோரில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மகளிருக்கு ரூ.1500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, ஏனையோருக்கு ரூ.2000 ஆகும்.
கட் ஆஃப் மற்றும் கலந்தாய்வு
நுழைவுத் தேர்வு முடிவு விபரங்களை இணையதளம் வாயிலாகவே அறிந்துகொள்ளலாம். ‘கட் ஆஃப்’ மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வும், கல்லூரி சேர்க்கைக்கான முன்னுரிமையும் கிடைக்கும். சுமார் 400க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் நாட்டா நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தங்கள் சேர்க்கையைத் தீர்மானிக்கின்றன.
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com