

“நீங்கள் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், ஒரு இலக்குடன் வாழுங்கள்'' என்றார் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். எதிர்காலம் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் அமைய வேண்டுமென்றால் இலக்கு முக்கியம்.
எனவேதான் ஒவ்வொரு ஆசிரியரும், "உனது இலக்கு என்ன?" என்ற கேள்வியை அடிக்கடி மாணவர்களிடத்தில் கேட்கிறார்கள். இந்த கேள்வியின் காரணமாக இலக்கே இல்லாத மாணவர்கள்கூட ‘கலெக்டர் ஆகப் போகிறேன்.
டாக்டர் ஆகப் போகிறேன்' என பதிலளிப்பார்கள். இந்த பதில் மாணவர்களின் மனதில் புதிய இலக்காக பதிந்து, அதை நோக்கி சிந்திக்க வைக்கும். தங்களது இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, அதனை நோக்கி செயல்பட தூண்டும்.
மாணவர்களிடத்தில் பணி சார்ந்த இலக்குகளை விதைப்பது போல, நிதி சார்ந்த இலக்கையும் விதைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நிதி நெருக்கடி இல்லாத நிம்மதியான எதிர்காலம் சாத்தியமாகும். இதில் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பெரும்பங்கு இருக்கிறது.
எதிர்காலத்தை வடிவமைத்தல்
நிதி இலக்கு என்பது நீங்கள் அடைய விரும்பும் பணம், பொருள், சொத்து, வாகனம், நகை, செல்வம் ஆகியவற்றைப் பற்றிய உங்களது ஆசைகள் மட்டுமல்ல. குறிப்பிட்ட காலத்துக்குள் நீங்கள் அடைய வேண்டிய ஊதியம், சேமிப்பு, முதலீடு, சொத்து மதிப்பு, கடனை அடைப்பது, செலவை குறைப்பது, பிறருக்கு உதவுவது ஆகியவற்றையும் உள்ளடக்கியது தான்.
நிதி இலக்கை சிறுவயதிலே மனதில் பதிய வைத்துக்கொண்டால் அது அன்றாட செயல்களில் கலந்து, அவர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க உதவும். வாழ்க்கையின் இலக்குகளை போலவே நிதி இலக்கையும் அடைய நிறைய வழிகள் இருக்கின்றன. தொலைநோக்கான வியூகங்களும், தொடர் திட்டமிடல்களும் அவசியம்.
‘நிதி மேப்’ முக்கியம்
நாம் குறிப்பிட்ட ஊருக்கு செல்வதற்கு ரோடு ‘மேப்’ உதவுவதைப் போல, நிதி இலக்கை அடைய ‘நிதி மேப்' உதவுகிறது. எந்த தெருவின் வழியாக சென்றால் எளிதாக அந்த ஊரை சென்றடையலாம் என்பதை ரோடு ‘மேப்’ காட்டுவதைப் போல, நமது நிதி இலக்கை அடைய ‘நிதி மேப்' வழிகாட்டும். இந்த ‘நிதி மேப்'ஐ உருவாக்குவதற்கு முன்பாக, நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலில் ஒரு டைரியில் உங்களது வருமானம் எவ்வளவு? செலவு எவ்வளவு? எதற்கெல்லாம் செலவு செய்கிறீர்கள்? கடன் எவ்வளவு? சேமிப்பு எவ்வளவு? என்பதை விரிவாக எழுதுங்கள். இதனை அடிப்படையாக வைத்து உங்களது நிதி இலக்கை தீர்மானியுங்கள். "ஒரே மாதத்தில் கோடீஸ்வரனாக வேண்டும், அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும்" என அடைய முடியாத இலக்கை எழுதக் கூடாது.
உங்களால் இதை அடைய முடியும் என நினைக்கும் எதார்த்தமான இலக்கை எழுதுங்கள். அந்த இலக்கு சரியானதாகவும், நியாயமானதாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் அடையக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நிதி இலக்கை தீர்மானித்த பிறகு அதை அடைய வேண்டிய காலத்தையும் நீங்களே முடிவு செய்யுங்கள்.
நிதி திட்டமிடல் அவசியம்
நிதி இலக்கை தீர்மானித்த பிறகு நிதி திட்டமிடலில் இறங்க வேண்டும். இந்த நிதி திட்டமிடல் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்க்கை முறைகளுக்கு இடையே சமநிலை உருவாக்குவதற்கு உதவும். திட்டமிட்டு வாழ்வதன் மூலம் கரோனா போன்ற பெருந்தொற்று, எதிர்பாராத அசம்பாவித சம்பவங்களையும் எதிர்கொள்ள முடியும்.
நிதி திட்டமிடலின் முதல் படி பட்ஜெட் போடுவது. மதாந்திர, வருடாந்திர பட்ஜெட்டை கட்டாயம் போட வேண்டும். ஏனென்றால் இந்த பட்ஜெட் போடும் பழக்கம்தான் உங்கள் நிதி நிலைமையின் மீதான கட்டுப்பாட்டையும், நிதி நெருக்கடியை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையையும் தரும். தேவையற்ற செலவுகளை குறைத்து பட்ஜெட் போட்டப்படியே வாழ்க்கையை நகர்த்தினால் நிதி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறலாம்.
ஒரு விளையாட்டு வீரர் தினந்தோறும் உடற்பயிற்சி, பயிற்சி ஆட்டம் ஆகியவற்றை மேற்கொண்டு தன்னை தானே மதிப்பீடு செய்துகொள்வது போல, நீங்களும் உங்களது நிதி திட்டமிடலை மதிப்பீடு செய்ய வேண்டும். அதில் பட்ஜெட்டை மீறிய அம்சங்களை தயக்கமின்றி உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
கடலில் வழிதெரியாமல் தவிக்கும் கப்பலுக்கு கலங்கரை விளக்கம் வழிகாட்டுவதைப் போல, கடனில் சிக்கித் தவிப்போருக்கு நிதி இலக்கு வழிகாட்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in