

மைல்கற்கள் பல வண்ணங்களில் இருப்பது ஏன், டிங்கு?
- சி. நகுலன், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு.
ஒரு சாலை தேசிய நெடுஞ்சாலையா, மாநில நெடுஞ் சாலையா, மாவட்ட சாலையா என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் மைல்கற்களில் வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
மஞ்சளும் வெள்ளையும் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை. இந்தச் சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன.
பச்சையும் வெள்ளையுமாக இருந்தால் அது மாநில நெடுஞ்சாலை. இதை மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிக்கிறது. நீலமும் வெள்ளையுமாக இருந்தால் அது மாவட்டச் சாலை.
இதையும் மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிக்கிறது. இளஞ்சிவப்பு அல்லது கறுப்புடன் வெள்ளை இருந்தால் அது ஊரகச் சாலை. இதை ஊராட்சி ஒன்றியங்கள் பராமரிக்கின்றன, நகுலன்.
புலிகளுக்கும் வரிக்குதிரைகளுக்கும் உடலில் உள்ள வரிகளால் ஏதாவது பயன் உண்டா, டிங்கு?
- ஜெ. மாரிச் செல்வம், 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
பெரும்பாலான விலங்குகளுக்குக் கறுப்பு வெள்ளையாகத்தான் காட்சிப் புலப்படும். நம்மைப் போல் நிறங்கள் புலப்படாது. புலிகளின் கோடுகள் மூலம் அவற்றின் உருவம் முழுமையாகத் தென்படாது. அதனால் புலியைச் சட்டென்று கவனித்துவிட முடியாது.
புலிகள்புல்வெளியில் நடந்து செல்லும்போது, நிலா வெளிச்சத்தில் இரை விலங்குகளுக்கோ எதிரி விலங்குகளுக்கோபுற்களின் நிழல் போன்ற தோற்றத்தைத் தந்துவிடும்.
இதனால் புலி எதிரியிடமிருந்து தப்பி விடுகிறது. இரையைப் பிடித்துவிடுகிறது.வரிக்குதிரை புல்வெளியில் மேயும்போது எதிரிகளின் கண்களுக்கு புலப்படாது. கூட்டமாக வரிக்குதிரை கள் இருக்கும்போது எதிரிகளின் கண்களுக்கு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் இந்தக் கோடுகள்.
இதனால் எதிரிகளிடமிருந்து தப்பிவிட முடிகிறது. சமீப ஆய்வுகளின்படி வரிகள் மூலம் ஒட்டுண்ணி ஈக்களின் தொல்லைகளில் இருந்தும் வரிக் குதிரைகள் தப்பிவிடுவதாகச் சொல்கிறார்கள், மாரிச் செல்வம்.