

ரகுவரன் வீட்டு அருகில் உள்ள குளத்தில் வாத்துக் கூட்டத்தைப் பார்த்து ரசிப்பான். ஒரு நாள் ‘‘நானும் உங்களோடு நீந்தவா?” என்று பப்ளி வாத்திடம் கேட்டான். ‘‘வா” என்றது. ஆனந்தமாக நீந்தி விளையாடினான். இதைக் கண்ட முகிலன் தானும் வாத்தோடு விளையாட வருகிறேன் என்றான். அதற்கு ரகுவரன், ‘‘உனக்கு நீந்த தெரியாதே” என்றான். இதனால் கோபம் கொண்ட முகிலன் வாத்துக்கு சொந்தக்காரர்களிடம் ரகுவரன் வாத்தை திருடியதாய் பொய் சொல்லி விட்டான். அவரும் கண்டித்ததால் வருந்தினான் ரகுவரன்.
மறுநாள் மாலை பப்ளி வாத்து ரகுவரனை விளையாட அழைத்தது. ரகுவரனும் சம்மதித்தான். இதைக் கண்டு பொறுக்காத முகிலன், “வாத்துக்கு சொந்தக்காரர் இன்று இரவு உன்னை இங்கேயே கட்டி போட்டு விடுவார்” என மிரட்டினான். ரகுவரன் அதைக் கண்டு கொள்ளவில்லை.
பிறகு அதிகாலையிலே யாருக்கும் தெரியாமல் முகிலன் குளத்துக்குச் சென்று வாத்து பொன் முட்டையிடும் என்ற ஆசையில் பிடித்துப் போய் வீட்டில் மறைத்து வைத்துவிட்டான். வாத்துக்கு சொந்தக்காரர் எப்படியோ கேள்விப்பட்டு முகிலன் வீடு தேடி வந்து பிடித்துவிட்டார். அவரிடம் தான் வாத்தைப் பிடிக்கவில்லை ரகுவரன்தான் பிடித்து மறைத்து வைத்திருக்கிறான் என்று பொய் சொன்னான்.
ஆனால், எல்லாவற்றையும் கவனித்த வாத்துக்குச் சொந்தக்காரர், “ ரகுவரன் மீது நீ கொண்ட பொறாமையும் உன்னுடைய பேராசையும் உன்னை திருடனாக்கிவிட்டது பார்த்தாயா?” என்று கண்டித்தார்.
படிக்கிற வயதில் கெட்ட பழக்கம் பழகாதே என்றார். அருகில் இருந்தவர்கள் முகிலனை பார்க்கவே அவனுக்கு தலைகுனிவாய் ஆகிவிட்டது. தன்னிடம் உள்ள பொறாமை, பேராசை, கோபம் கடுஞ்சொல் பேசும் பழக்கம் ஆகியவை தமக்கு தீமையாய் முடிந்தது என்று எண்ணி முகிலன் வருந்தினான். இந்த கெட்ட குணத்தை ஒழிப்பதுதான் சிறந்த அறம் என்பதை உணர்ந்தான்.
இதைத் தான் வள்ளுவர்,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் என்றார்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை