

“உங்களிடம் உள்ளதில் தக்கவைக்க வேண்டிய பண்புகளையும் மாற்றிக்கொள்ள வேண்டிய பண்புகளையும் கண்டுபிடித்துவிட்டீர்களா?” என்ற கேள்வியோடு கடந்த வகுப்பில் விட்ட இடத்தில் இருந்து இன்றைய வகுப்பைத் தொடங்கினார் ஆசிரியர் எழில்.
அன்புகாட்டல், நேர்மையாக இருத்தல், நேரம் தவறாமை, பொறுமை, கலகலப்பாக இருத்தல் இவையெல்லாம் தக்கவைக்க வேண்டிய பண்புகள் என்றாள் அருட்செல்வி.
கோபம், சோம்பல், பிடிவாதம், அவசரம் இவையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டிய பண்புகள் என்றான் சுடர். சில நேரங்களில் அமைதியாக இருப்பது நல்லது, சில நேரங்களில் அது கெட்டது. அதனால் இது தக்க வைக்க வேண்டிய பண்பா மாற்றவேண்டிய பண்பா என்று குழப்பாக இருக்கிறது என்றான் அருளினியன்.
சரியான நேரத்தில் கோபம்
எப்படி எனக் கேட்டாள் கயல்விழி. நாம் செய்யாத தப்பிற்கு நமக்குத் தண்டனை கொடுக்கும் பொழுது அமைதியாக இருப்பது நல்லதா என அருளினியன் ஆதங்கத்தோடு கேட்டான்.
அவனது கேள்வி சரி என்று பாராட்டிய எழில், “அமைதி, பொறுமை ஆகியன போன்ற பண்புகளை நாம் அளவிற்கு மீறிக் கைக்கொண்டால் அவை நமக்கே கேடாக மாறிவிடும். அதேபோல, சரியான நேரத்தில் கோபத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் நமக்கு கேடுஏற்படும். ஆனால், அதனை வன்முறையாகவோ, வஞ்சகமாகவோ வெளிப்படுத்தக் கூடாது என்று விளக்கினார் எழில்.
கோபத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டாள் நன்மொழி.
பள்ளிக்கு நேரமாகிவிட்டதுஎன்று வீட்டில் சாப்பிடாமல்நாம் கிளம்பினால், “பள்ளிக்கூடத்துல வசவுவாங்கிக்க, இப்ப சாப்பிட்டுத்தொல, இதுக்குத்தான் எந்திருச்சதும் மொபைல நோண்டாதன்னு சொல்றது” என்று அம்மா கோவமாய்த் திட்டுவார். ஆனால், அக்கோபத்தின் நோக்கம் நம்மைக் காயப்படுத்துவது இல்லை. என்று விளக்கினான் காதர். நான் சொல்றது சரிதானேஎன்று காதர் கேட்க, “ஆம்” என்பதைப்போல தனது வலதுகைக் கட்டைவிரலை உயர்த்திக்காட்டினார் எழில். “ஓ! இதுதான் கடிதோச்சி மெல்ல எறிதலா?!” என்றாள் மதி. ஆமா... இப்பொழுதுதாவது அந்த குறளின் பொருள் உனக்குப் புரிந்ததே என்று அவளைச் சீண்டினாள் கண்மணி.
இந்த கதை தெரியுமா?
காலமும் சூழலும் மாறமாற, உங்களின் பண்புகள் சில காணாமல் போகலாம்; சில புதிதாய்ச் சேரலாம்; சில மென்மேலும் மெருகேறலாம். அவற்றை நீங்கள் கூர்ந்து கவனித்துப் பொருத்தமான பண்புகளை வெளிப்படுத்தப் பழக வேண்டும் என்ற எழில், இப்பொழுது ஒரு கதை என்றார்.
“ஐ…ஐ…ஐ…” என்றனர் சிலர்.
“ஒரு கணக்கைக் கொடுத்து அதற்கான விடையைக் கண்டுபிடித்து எல்லாரும் அவர்களது குறிப்பேட்டில் எழுதி தன்னிடம் ஐந்து நிமிடத்திற்குள் காட்ட வேண்டும் என்றார் ஆசிரியர்.
எல்லாரும் கண்டுபிடிக்கத் தொடங்கினர். சிலருக்குக் கடினமாக இருந்தது. மெல்ல பக்கத்தில் இருப்பவரிடம் விளக்கம் கேட்கத் தொடங்கினர். இரண்டு நிமிடத்தில் வகுப்பே ‘சலசல’வென்று சத்தத்தில் மூழ்கியது. மணியனுக்கும் கடினமாக இருந்தது.
ஆனால், அவனோ யாரிடமும் பேசவில்லை; தானே விடையைக் கண்டுபிடிக்க முயன்றான். நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரியர், ஐந்து நிமிடம் முடிந்ததும் அனைவரின் குறிப்பேடுகளையும் சரிபார்த்தார்.
மணியனைத் தவிர எல்லாரும் சரியான விடையை எழுதியிருந்தனர். மணியனை எழுந்து நிற்க வைத்த ஆசிரியர், அவனைப் பாராட்டி அனைவரையும் கைதட்டச் சொன்னார்” என்று கதையை நிறுத்தினார் எழில்.
“ஏன்?” என்று அழகன் குழப்பம் முகத்தில் தெரியக் கேட்டான்.
அதற்கான காரணத்தை அடுத்தவகுப்பிற்கு வரும்பொழுது சிந்தித்துக்கொண்டு வாருங்கள் என்றார் எழில்.
கட்டுரையாளர்:
வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com