

“எனக்கு முகத்தில் மட்டுமில்லாமல் முதுகிலும் நிறைய பருக்கள் உள்ளன. இதற்கு என்ன செய்வது டாக்டர்?"
- சுதர்ஷன், பிளஸ் 1, சேலம்
சுதர்ஷன், நீங்க பிளஸ் 1 வகுப்பில் படிப்பதால் உங்களுக்கு முன்பே பரிச்சயமான சருமம் குறித்த அறிவியல் பாடத்தை ஒருமுறை நினைவுபடுத்திப் பார்ப்போமா? அதிலிருந்தே உங்கள் கேள்விக்கான விடை எளிதில் கிடைக்கும்.
மனிதர்களின் சருமம் மூன்று அடுக்குகளால் ஆனது என்பதும், அதன் வெளிப்புற அடுக்கான ‘எபிடெர்மிஸ்’ உள் உறுப்புகளைப் பாதுகாப்பதுடன் நமது நிறத்தையும் அது நிர்ணயிக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அடுத்து, இரண்டாம் அடுக்கான டெர்மிஸ் வியர்வை நாளங்கள், எண்ணெய் சுரப்பிகள், முடியின் வேர்க்கால்கள், தொடு உணர்வு நரம்புகள், ரத்தநாளங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, உடலின் தட்பவெப்பத்தை சமன்படுத்துகிறது.
கூடவே தனது எண்ணெய் சுரப்பிகளில் சுரக்கும் சீபம் (sebum) மூலமாக நமது சருமத்தை மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் வைக்கிறது. ‘ஆண்ட்ரோஜன்’ எனும் பிரத்தியேக ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படும் இந்த எண்ணெய் சுரப்பிகளில் எப்போதாவது அடைப்பு ஏற்பட்டு, சுரக்கும் எண்ணெயை அது வெளியே தள்ளமுடியாதபோது, உள்தங்கும் சீபம் மற்றும் அதன் சுரப்பிகள் சேர்ந்து பருவாக வெளிப்படுகிறது.
டென்ஷன் ஆனாலும் வரும்!
கருப்பு அல்லது வெள்ளைக் குறுணைகளாகப் புலப்படும் இந்த பருக்களில் பாக்டீரியா தொற்றும் உடன் சேரும்போது, அழற்சியின் காரணமாக இவை பெரிதாகி, தோல் சிவப்பாவதுடன், எண்ணெய் சுரப்பிகள் அதிகம் காணப்படும் நெற்றி, மூக்கு, தாடை மற்றும் கன்னங்களிலும், முதுகுப் பகுதியிலும் சிலருக்கு நீங்காதவடுக்களாகவும் பருக்கள் நிலைத்துவிடுகிறது. ஆகையால் பரு என்பது நமது சருமத்தில் இயல்பாக உருவாகும் சிறியதொரு பாதிப்புதான். என்றாலும், பருவகாலத்தில் மட்டும் ஏன் பருக்கள் அதிகம் காணப்படுகிறது?
பருவமடையும்போது ஆண்களுக்கு அதிகம் சுரக்கும் ஆண்ட்ரோஜன்களால்தான் பரு உருவாகிறது என்றாலும், அளவில்குறைவாக இருந்தாலும் இது பெண்களையும் பாதிக்கிறது. அதிலும் பெண்களில் மாதவிடாய் ஏற்படுவதற்கு முன், ‘ஈஸ்ட்ரோஜன்கள்’ மற்றும் ‘ப்ரொஜெஸ்டிரான்கள்’ குறைந்து ஆண்ட்ரோஜன்கள் சற்று கூடுவதால், மாதவிடாயை அறிவிப்பதுபோல, பெண்களில் பருக்கள் வெளிப்படுவதும் நிகழ்கிறது. அதேபோல பிசிஓடி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ள பெண்களுக்கும் ஆண்ட்ரோஜன்கள் அதிகம் சுரப்பதால், இவர்களுக்கும் பருக்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது.
மேலும் அதிகப்படியான டென்ஷன், கோபம் போன்ற மனநிலைகளில் அதிகம் சுரக்கும் அட்ரினலின் மற்றும் கார்டிசால் ஹார்மோன்களும் ஆண்ட்ரோஜன்களை அதிகப்படுத்தி பருக்களையும் கூட்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நகங்களால் கிள்ளக் கூடாது!
பருவகாலத்தில் பருக்கள் வருவது இயல்புதான் என்றாலும், சுதர்ஷன் கேட்பதுபோல, முகத்தில் மட்டுமன்றி முதுகுப் பகுதியிலும் பருக்கள் வராமல் குறைக்கமிக எளிமையான தீர்வுகளே பரிந்துரைக்கப்படுகின்றன.
# முகத்தை வெதுவெதுப்பான நீரில் சாதாரண சோப் அல்லது க்ளீன்சர் கொண்டு குறைந்தது மூன்று முறையாவது ஒருநாளில் கழுவுதல். கற்றாழை, மஞ்சள், சந்தனம் ஆகியவற்றை உபயோகித்தல் முகத்தின் எண்ணெய் பிசுபிசுப்பைக் குறைக்க உதவும்.
# சருமத்தில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க, குறைந்தது மூன்று லிட்டர் நீர் பருகுவது அவசியம். இளநீர் மற்றும் பழச்சாறுகள் பருகுதலும் பருக்களை குறைக்க உதவுகின்றன.
# கேரட், பீட்ரூட், வெள்ளரி, மாம்பழம் என வைட்டமின் ஏ, சி மற்றும் ஜின்க் நிறைந்த உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதுடன் கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பதும் உதவும்.
# இறுக்கமில்லாத தளர்வான பருத்தி ஆடைகள் உடுத்துவது வியர்வை மற்றும் எண்ணெய் அதிகம் தங்காமல் உதவும்.
# பருக்களை விரல்களால், நகங்களால்கிள்ளுவதும், ஊசி கொண்டு குத்துவதும் பருக்களை குணப்படுத்தாமல், முகத்தில் நிரந்தரத் தழும்புகளை உண்டாக்கும் என்பதால் கவனம் தேவை.
# விளம்பரங்களிலும் கடைகளிலும் கிடைக்கும் க்ரீம் அல்லது ஆய்ன்ட்மெண்டுகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சுதர்ஷன், பருவத்தில் வருவது தான் பரு. அது வராமல் தவிர்க்க ஒருநாள் தீர்வு போல எதுவும் இல்லை. என்றாலும், சில எளிய வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே, ஆண் பெண் இருவருமே சிறு பருக்களால் ஏற்படும் விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதே உண்மை.
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com