டிங்குவிடம் கேளுங்கள்-3: பேய் இருக்கா, இல்லையா?

டிங்குவிடம் கேளுங்கள்-3: பேய் இருக்கா, இல்லையா?
Updated on
1 min read

மரப்பாச்சி பொம்மைகள் எப்போது அறிமுகமானது, இப் போது எங்கு அந்தப் பொம்மைகளைச் செய்கிறார்கள் டிங்கு?

- கெளசிக், 7-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சற்குணேஸ்வரபுரம்.

மரப்பாச்சி பொம்மைகள் ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. எந்த ஆண்டு உருவானது என்று தெரியவில்லை. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் மரப்பாச்சி பொம்மைகள் மிகவும் பிரபலமாக இருந்தன. அதன் பிறகு கர்நாடகா, குஜராத், ஒடிசா என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் மரப்பாச்சிகள் சென்றன.

தற்போது மரப்பாச்சி பொம்மைகள் செல்வாக்கை இழந்துவிட்டன. ஆந்திராவில் உள்ள கொண்டபள்ளியில் ராஜா, ராணி பொம்மைகளாக மரப்பாச்சி பொம்மைகள் அவதாரம் எடுத்துள்ளன. தமிழ்நாட்டில் கோயில்கடைகள், காதிகிராஃப்ட் கடைகள் போன்றவற்றில் மரப்பாச்சி பொம்மைகள் கிடைக்கின்றன கெளசிக்.

‘பேய்' எப்படி இருக்கும், டிங்கு?

- வி. ஜான்சி ராணி, 6-ம் வகுப்பு, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி.

‘பேய்' என்ற ஒன்று இருந்தால் தானே அது எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும் ஜான்சி ராணி? பேய் உண்மையாக இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் என்று ஓர் உருவத்தைக் குறிப்பிடுவார்கள். அது இல்லாததால்தான் அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு, பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

புவி தன் ஈர்ப்பு விசையால் அனைத்துப் பொருள்களையும் கீழ்நோக்கி ஈர்த்துக்கொள்கிறது. ஆனால், புகை மட்டும் எப்படி மேல் நோக்கிச் செல்கிறது டிங்கு?

– வி. ஸ்டெல்லா மேரி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.

நல்ல கேள்வி. எங்கும் பரவியிருக்கும் காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியைவிட அதிகமாக இருக்கும். இத னால் புகையைவிட காற்றின் மீது புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அதனால் காற்று கீழ் நோக்கி இறங்கும். அடர்த்தி குறைந்த புகை மேல் நோக்கிச் செல்லும். இந்தப் புகையைப் போலதான் மென்மையான நீராவியும் மேல் நோக்கிச் செல்கிறது. அது மேகமாக மாறி, பின்னர் மழையாகப் பொழிகிறது.

புவி ஈர்ப்பு விசை இல்லாவிட்டால் புகையோ நீராவியோ மேல் நோக்கிச் செல்லாது, ஸ்டெல்லா மேரி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in