

மாற்றுத் திறனாளியான தயாளன் படித்து முன்னேறி வங்கி மேலாளராக வேலை செய்துவந்தான். மூன்று சக்கர வண்டியில் வங்கிக்கு வருவது அவனது வழக்கம். தன்னை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அவர்கள் எதிர்பார்க்கும் சேவையை செய்து கொடுப்பான்.
அக்கம் பக்கத்தினர் யார் எந்த உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வான். தயாளன் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். தம்மைப் போல் அன்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கற்பனையில் மிதந்தான். தாங்கி நிற்கும் ஆலம் விழுதாய் தேவதை வருவாள், தனியாக செய்த தர்மத்தை இணைந்தே செய்ய வாய்ப்பு வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்.
மஞ்சுளாவுடன் திருமணம் ஆன முதல் நாளன்றே இருவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மையத்திற்கு சென்று இனிப்பு பரிசுகள் வழங்கினர். மஞ்சுளா, ”திரைப்படத்திற்கு அழைத்து வருவீர்கள் என்று நினைத்தேன். இங்கு வந்து என்னை ஏமாற்றம் அடைய வைத்துவிட்டீர்கள்” என்றாள் கொஞ்சம் வருத்தமாக.
“வாழ்நாளில் இந்த நாளுக்காக ஏங்கி கொண்டு இருந்தேன். நாளை திரைப்படத்திற்கு அழைத்துச் செல்கிறேன். அந்த இன்பத்தைக் காட்டிலும் பிறரை மகிழ்விப்பதும், தர்மம் செய்வதும்தான் மெத்த மகிழ்ச்சி” என்று எடுத்துக்கூறினான் தயாளன். மஞ்சுளாவும் மனமொத்துப் போனாள்.
அன்றிலிருந்து இருவரும் அன்பாகவும் ஆதரவாகவும் குடும்பம் நடத்தி இதயத்தை மட்டும் பரிமாறிக் கொள்ளாமல் பிறர் இதயங்களிலும் வாழ்ந்தார்கள். தயாளனும் மஞ்சுளாவும் சேர்ந்து ஆதரவற்ற குழந்தை கலையரசியை படிக்க வைத்தார்கள். அடுத்தவர்களுக்கு பயன்படும் படியாக வாழ்வதால் மன நிறைவோடு வாழ்ந்தனர்.
இதை தான் வள்ளுவர்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள்:45) என்றார்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியை