

தெருவில் குப்பைகளைச் சேகரிப்பது கன்னிகா அக்காவின் வேலை. அக்காவைப் பார்த்ததும், சிறுமி யாழ்நிலா வணக்கம் சொல்லுவாள், தண்ணீர் கொடுப்பாள், குப்பை டப்பாவை கையில் கொடுத்து வாங்கு வாள், ஒருநாள், கன்னிகா அக்கா, யாழ்நிலாவுக்கு கேக் கொடுத்தார். “என்னக்கா, பிறந்த நாளா?. ஆமா பாப்பா. அதுதான், உனக்கு மட்டும் ஒரு கேக் வாங்கிட்டு வந்தேன்”.
வீட்டுக்குள் சென்ற யாழ்நிலா தான் சேமித்திருந்த 75 ரூபாயை எடுத்தாள். அப்பாவிடம், “கன்னிகா அக்காவுக்கு பிறந்தநாளாம். பரிசு வாங்கலாம்” என்றாள். “சரி, என்ன பரிசு வாங்கலாம்?”. “அக்காகிட்ட செருப்பே இல்லை. செருப்பு வாங்கி்க் கொடுக்கலாம்” என்றாள். சுவரில் ஒட்டியிருந்த கெஸ் வால்டஸின் படத்தைப் பார்த்துப் புன்னகைத்தார் அப்பா.
வாழ்வில் துயரம்
கெஸ் வால்டஸ், 1998-ல் பிலிப் பைன்ஸ் நாட்டில் பிறந்தான். ஏழை குடும்பம். சமைப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாம் ஒரே இடத்தில்தான். குடிகார அப்பா எந்நேரமும் கெஸ்ஸை அடித்துத் துன்புறுத் தினார். போதைப் பொருள் வாங்க 2 வயது கெஸ்ஸை பிச்சை எடுக்கஅனுப்பினார். சிறுவன் தெருவில் அலைந்தான். நல்ல உணவும் இல்லை பாசமும் இல்லை. “எங்களின் எல்லா கவலைகளுக்கும் நீ தான் காரணம்” என்று அப்பா, அம்மா திட்டினர். தன்னால் ஒன்றும் செய்ய இயலாததால், 4 வயதில் வீட்டைவிட்டு ஓடினான் கெஸ்.
நகரில் மிகப்பெரிய குப்பை மேடுஇருக்கிறது. அதைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான ஏழைகள் வாழ்கிறார்கள். கெஸ் அச்சிறுவர்களுடன் சேர்ந்தான்.கையில் ஒரு பையை தூக்கிக் கொண்டு, குச்சியால் குப்பையைக் கிளறினான். தகரம், இரும்பு, பாட்டரிகள், நெகிழி டப்பாக்கள், போத்தல்கள், அட்டைப் பெட்டிகள் போன்றவற்றைச் சேகரித்தான். யாருடைய காலிலும் செருப்பு இல்லை. எல்லார் கால்களிலும் காயங்கள் இருந்தன. கால் கைகளில் புண்கள் புரையோடியிருந்தன.
ஒருநாள், குப்பை கொட்டுவதற் காக லாரி வந்தது. சிறுவர்கள் ஓடினார்கள். விரைந்து ஓடிய கெஸ், எரிந்துகொண்டிருந்த டயர் குப்பையில் தடுமாறி விழுந்தான். உடலில் தீ பற்றியது. அலறினான். அப்போது, சமூக செயற்பாட்டாளரான ஹர்னின் உதவிக்கு வந்தார். கெஸ்ஸுக்கு மருத்துவம் பார்த்து, வீட்டுக்கு அழைத்துச் சென்றார். உணவளித்தார். பாசம் காட்டினார். தத் தெடுத்தார். பள்ளிக்கு அனுப்பினார்.
மகிழ்ச்சியைப் பகிர்தல்
கெஸ்ஸின் 7வது பிறந்த நாளில், “என்ன வேண்டும்?” என்று கேட்டார் ஹர்னின். “குப்பை மேட்டில் இருக்கின்ற சிறுவர்களுக்கு செருப்பு வாங்கிக் கொடுப்போம்” என்றான். அவன் விரும்பியபடியே, 7 ஜோடி செருப்புகளும், தின்பண்டங்களும் கொண்டுபோய் கொடுத்தான். சிறுவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. இப்படியாக, ‘நம்பிக்கையின் பரிசு’ திட்டம் தொடங்கியது. இப்போது ஆண்டுக்கு 1000க்கும் மேற்பட்டோருக்கு செருப்பு, தின்பண்டம், விளையாட்டுப் பொருட்கள் கொடுக்கிறான்.
ஹர்னின் கொடுத்த உத்வேகத்தில், 7 வயதில் Championing Community Children (C3) எனும் அமைப்பை உருவாக்கினான் கெஸ்.குழந்தைகளின் உரிமை, சத்தான உணவு, சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து கிறான். காயங்களுக்கு மருந்திடு வது, சுகாதாரமாக வாழ்வது குறித்து கற்றுக் கொடுக்கிறான். தாங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கும் கற்பிக்க சிறுவர்களைப் பயிற்றுவிக்கிறான்.
“ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வது மற்றும் கவனித்துக் கொள்வதன் வழியாக, இந்த உலகை நம்மால் மாற்ற முடியும். ஒருவருக்கு நீங்கள் உதவி செய்யும்போது இந்த மாற்றம் தொடங்குகிறது” என்கிறான் கெஸ்.
சென்ற மாதம், கெஸ்ஸின் படத்தை வீட்டில் ஒட்டிய அப்பா, அவனது வாழ்க்கையை யாழ்நிலாவிடம் சொன்னார். இன்று, உலகை மாற்றத் தொடங்கியிருக்கிறாள் யாழ்நிலா.
கட்டுரையாளர்: எழுத்தாளர்,
மொழி பெயர்ப்பாளர். தொடர்புக்கு:
sumajeyaseelan@gmail.com