

இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பு குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தவர்கள் பற்றி பார்ப்போம்.
டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1950-62):
1950-ல் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950 முதல் 1962 வரை இருமுறை தொடர்ந்து இப்பதவி வகித்தார். அரசியலமைப்பை உருவாக்கும் குழுவுக்கு தலைவராக இருந்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் (1962-67):
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளி, கல்லூரி படிப்பை உதவித் தொகையில் முடித்தார். 1949-52-ம் ஆண்டுகளில் சோவியத் யூனியனின் இந்திய தூதராக இருந்தார். இவரது பிறந்த தினமான செப்.5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ஜாகீர் உசேன் (1967-69):
கல்வியில் பல சீர்திருத்தங்களை செய்ய முயற்சித்தார். ஆனால்பதவியில் இருக்கும்போதே இறந்து விட்டார். குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்த முதல் இஸ்லாமியர்.
வி.வி.கிரி (1969-74) :
ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்து இந்திராகாந்தி யால் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றவர். இவர் எழுதிய "மை லைப் அண்ட் டைம்ஸ்" என்ற புத்தகம் மிகவும் பிரபலமானது.
பக்ருதின் அலி அகமது (1974-77):
எம்.எல்.ஏ., எம்.பி., மத்திய அமைச்சர் என பல பதவிகள் வகித்தவர். கால்பந்து, கிரிக்கெட் சார்ந்த நிர்வாகப் பணிகளை கவனித்து வந்தார். இவரும் பதவி யில் இருந்தபோதே காலமானார்.
நீலம் சஞ்சீவரெட்டி (1977-82):
ஆந்திரா தனி மாநிலம் ஆனபோது முதல்வராக பொறுப்பேற் றார். இவர் காலத்தில் மொரார்ஜி தேசாய், சரண்சிங், இந்திராகாந்தி ஆகியோர் பிரதமர்களாக பதவி வகித்தனர்.
கியானி ஜெயில் சிங் (1982-87):
குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் சீக்கியர் இவர். இவரது காலத்தில்தான் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் புகுந்தது.
ஆர்.வெங்கட்ராமன் (1987-92):
தமிழக அமைச்சர், மத்திய அமைச்சராக இருந்த இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ராஜீவ்காந்தி, வி.பி.சிங்., சந்திர சேகர், நரசிம்மராவ் என நான்கு பிரதமர்கள் இருந்தனர்.
சங்கர் தயாள் சர்மா (1992-97):
இவர் ஓமன் நாட்டுக்கு சென்ற போது, அந்த நாட்டு மன்னர் விமான நிலையத்துக்கே நேரில் வந்து வரவேற்றார். ஏன் என்று கேட்டபோது, “நான் சங்கர் தயாள் சர்மாவின் மாணவன்" என்றார்.
கே.ஆர்.நாராயணன் (1997-2002):
கேரள மாநி்ல பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், தாய்லாந்து, சீனா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இந்திய தூதராகப் பதவிவகித்தார். ராஜீவ்காந்தி அமைச்சர வையில் இடம்பெற்றிருந்தார்.
டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்: (2002-07):
எளிமையான குடியரசுத் தலைவர்என்ற பெயர் பெற்றார். மக்கள்குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பள்ளிக் குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர்.
பிரதிபா பாட்டீல் (2007-12):
குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்இவர். 252 முறை வெளி நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டார் என்று அப்போது கூறப்பட்டது.
பிரணாப் முகர்ஜி (2012-17):
நிதித்துறை, வெளிவிவகாரத் துறை, பாதுகாப்புத் துறை என பல முக்கியத் துறைகளின் அமைச்சராகப் பணியாற்றியவர். திட்டக்குழுத் துணைத் தலைவராக இருந்தார்.
ராம்நாத் கோவிந்த் (2017-2022):
குடியரசுத் தலைவர் பதவிக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு டெல்லி வழக்கறிஞராக இருந்த இவர், பீகார் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.