ஈஸியா நுலையலாம் - 2: ஐஐடியில் படித்து வடிவமைப்பாளர் ஆகலாம்!

ஈஸியா நுலையலாம் - 2: ஐஐடியில் படித்து வடிவமைப்பாளர் ஆகலாம்!
Updated on
2 min read

மாணவர்கள் பலரும் சிறுவயது முதலே படம் வரைவதில் ஆர்வமும், திறமையும் கொண்டிருப்பார்கள். அந்த தனித்திறமை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் வேலைக்கும் கைகொடுக்கும் என்று ஆசிரியர்களும் பெற்றோரும் எடுத்துச் சொல்வதில்லை.

அப்படியே இத்தகைய திறமை பிற்காலத்தில் உதவும் என்று நினைத்தாலும் அதன்மூலம் பெரிதாக சம்பாதிக்க முடியாது என்கிறஅச்சம்தான் பரவலாகக் காணப்படுகிறது. உண்மை யாதெனில், மாணவர்கள் வரையும்ஆற்றலோடு படிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், ஐஐடி உயர்கல்வி நிலையத்தின் மூலமாக சர்வதேச வடிவமைப்பாளராக உருவெடுக்க முடியும். இதற்கு உதவக் காத்திருக்கிறது UCEED என்னும் நுழைவுத் தேர்வு.

என்ன நுழைவுத் தேர்வு?

இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் உயர்கல்வி நிலையங்களில் ஐஐடி என்றழைக்கப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் முதன்மையானது. நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் சிலவற்றில் பொறியியல் படிப்புகள் மட்டுமல்லாது சர்வதேச தரத்திலான இதர படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. B.Des.,(Bachelor of Design) என்னும் வடிவமைப்புக்கான இளநிலை பட்டப்படிப்பும் அவற்றில் அடங்கும். UCEED (Undergraduate Common Entrance Examination for Design) என்ற நுழைவுத் தேர்வின் வாயிலாக இந்த வடிவமைப்பாளர் படிப்பில் சேரலாம்.

எங்கே படிக்கலாம்?

மும்பை, குவஹாத்தி, ஹைதராபாத், டெல்லி ஆகிய ஐஐடி நிறுவனங்களிலும், ஐபல்பூர் ஐஐஐடிடீஎம் (IIITDM) வளாகத்திலும் வடிவமைப்பாளர் இளநிலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. சர்வதேச தரத்திலான இந்த படிப்பில் சேர வெளிநாட்டு மாணவர்களும் நுழைவுத் தேர்வில் பங்கேற்பார்கள். இதே வடிவமைப்பாளர் உயர்கல்வியை வழங்கும் இந்தியாவின் இதர 16 முன்னணிகல்வி நிறுவனங்களும், UCEED மதிப்பெண்அடிப்படையில் சேர்க்கையை தீர்மானிக்கின்றன.

யாரெல்லாம் எழுதலாம்?

பிளஸ் 2 தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அண்மையில் பிளஸ்2 தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே இந்தநுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஒருவரால் 2 முறை மட்டுமே UCEED தேர்வெழுத முடியும். அதிகபட்ச வயது வரம்பு 24. இதில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 வருட சலுகை உண்டு. பிளஸ் 2 எந்தப் பிரிவில் பயின்றவர்களும் யுசீட் நுழைவுத் தேர்வு எழுதலாம்.

விண்ணப்பிப்பது எப்படி ?

மாணவியர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1750. ஏனையோருக்கு ரூ.3500. நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும். 2023-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் நுழைவுத் தேர்வின் முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும். பதிவு, கட்டணம் உள்ளிட்ட விண்ணப்ப நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறும்.

சென்னை உட்பட இந்தியாவின் 24 நகரங்களில் யுசீட் நுழைவுத் தேர்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவரின் பொதுவான அறிவுத் திறன், ஆங்கில மொழித் திறன், வரைகலை திறன் ஆகியவற்றை சோதிக்கும் வினாக்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும்.

பொதுவான வரைகலை மற்றும் மனித உருவ வரைகலை தொடர்பான அடிப்படை வினாக்கள் இதில் அடங்கும். 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வை எழுத 3 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பு மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, மும்பை ஐஐடி-யின் இணையதளத்தை (www.uceed.iitb.ac.in/2022/index.html) நாடலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: leninsuman4k@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in