

“க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் குண்டு கவிதான்னு கூப்பிடறதால ஸ்கூல்ல என் பேரே இப்ப ‘குண்டு கவிதா' ஆகிப்போச்சு...பத்தாதுக்கு எங்க வீட்டில எல்லாரும் குண்டு வேற. வெயிட்டைக் குறைக்க நானும் மூணு வருஷமா தினமும் எக்சர்சைஸ் பண்றேன். குறையவே இல்ல. இதுக்கு வழி சொல்லுங்களேன் டாக்டர்!"
கவிதாவின் இந்தக் கேள்வியில் ஒரு ப்ளஸ், ஒரு மைனஸ் உள்ளது. ப்ளஸ் பாயிண்ட் கவிதாவின் மூன்று வருடத் தொடர் உடற்பயிற்சி எனும் முயற்சி. மைனஸ் வீட்டில் மற்ற அனைவருமே உடல் பருமனுடன் இருப்பது. அதைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், உடற்பருமன் என்றால் என்ன, பருவகாலத்தில் அதன் பாதகங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக பாடி மாஸ் இண்டக்ஸ் (Body Mass Index) என்ற அளவுகோலின் மூலம் உடல் பருமன் கண்டறியப்படுகிறது. நமது உயரம் மற்றும் உடல் எடையைக் கொண்டு கணக்கிடப்படும் இந்த பிஎம்ஐ விகிதாசாரத்தால், ஆரோக்கியமான எடை, அதிகப்படியான எடை, உடல் பருமன், தீவிர உடல் பருமன் என்பதாக நாம் வகைப்படுத்தப்படுகிறோம்.
இதில் எல்லோரும், குறிப்பாக மாணவ மாணவியர் பிஎம்ஐயின் முதல் பிரிவான ஆரோக்கியமான எடைப் பிரிவில்தான் இருக்கவேண்டும். ஆனால், நமது நாட்டில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் அதிகமான குழந்தைகள் உடல் பருமனுடன் உள்ளனர். கரோனா பெருந்தொற்று காலத்தில் இது இன்னும் அதிகரித்து, தற்போது ஐந்துக்கு ஒரு குண்டு குழந்தை இருப்பதாக புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. இதுவே நீடித்தால் எதிர்கால இந்தியாவே ஆரோக்கியமற்றதாக மாறும் நிலை ஏற்படக்கூடும்.
உணவுப்பழக்கத்தை மாற்றுங்கள்!
குழந்தைகள் மத்தியில் ஓடி ஆடி விளையாடுவது குறைந்துவிட்டது என்பது ஒரு புறம் இருக்க, மறுபுறம் வீட்டிலும் உடல் உழைப்பு செலுத்துவதற்காகத் தேவையும் சூழலும் இல்லை. இதுபோக இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் சேர்ந்து கொண்டது. இவை எல்லாமும் சேர்ந்துதான் அதீத உடல் பருமனுக்கு காரணம் என்று கைகாட்டுகிறது இந்தியக் குழந்தைகள் மருத்துவ சங்கம். முதலில் நமது உணவுப்பழக்கத்தை மாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது.
மாவுச்சத்து மற்றும் கொழுப்பு அதிகமுள்ள துரித உணவுகள் (Junk food), அதிகளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra processed food), அதீத ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் (Nutritionally Inappropriate food), கேஃபைன் கலந்த குளிர்பானங்கள் (Caffeinated beverages) ஆகிய அனைத்தையும் ‘ஜன்க்’ (Junk) என்று கூறும் குழந்தை நல மருத்துவர்கள், இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்கிறார்கள். தவிர்க்கவே முடியாது என்றால் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறைக்கு மேல் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.
மீறி அவற்றை தொடர்ந்து உட்கொள்ளும்போது ‘ஜன்க்’ உணவுகளில் உள்ள அதிகப்படியான கலோரிகள் கல்லீரலில் க்ளைக்கோஜனாகவும், வயிறு, இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கொழுப்பாகவும் சேமிக்கப்பட்டு ‘சென்ட்ரல் ஒபீசிட்டி' எனும் உடலின் மத்தியப் பகுதியை அதிக பருமனாக்கிவிடுகிறது. அத்துடன் குழந்தைப் பருவ சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா என்று தொடங்கி, படிக்கும் வயதில் தூக்கமின்மை, சுறுசுறுப்பின்மை, மன அழுத்தம் போன்றவற்றை அளிப்பதுடன் தற்கொலை எண்ணத்தைக் கூட தூண்டுகிறது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த உடல் பருமனைக் குறைப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு (70%) மற்றும் தொடர் உடற்பயிற்சிகள் (30%) உதவுகிறது என்று கூறும் ஆய்வுகள், நம் உடலுழைப்பைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்தவாறு உணவை உண்ணவும், மாவுச்சத்து மற்றும் கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை தவிர்க்கக் குழந்தைப் பருவத்தில் இருந்தே பழகிக்கொள்ளவும் அறிவுறுத்துகிறது.
என்னவெல்லாம் சாப்பிடலாம்?
இத்துடன் தேவைக்கு குறையாமல் நீரைப் பருகுவது, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் உண்ணுவது, இரவு உணவை சீக்கிரமே உண்ணுவது, தொலைக்காட்சி முன்பாக உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பது, வீட்டிலேயே சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சிறிய இடைவெளிகளில் குறைந்தளவு உட்கொள்வது போன்ற உபாயங்களும் உடல் பருமனைத் தவிர்க்க நன்கு உதவும்.
இதில், வீட்டில் மற்ற அனைவரும் உடல் பருமனுடன் இருப்பது எப்படி கவிதாவுக்கு மைனஸ் என்றால், இதுபோன்ற வீடுகளில் உடல் பருமனாக இருப்பது இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப் பழகிவிடுவது, பின்னாளில் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கே கேடாக முடியலாம் என்பதால்தான்.
ஆக, ஆரோக்கியமான எடையில் அனைத்துக் குழந்தைகளும் இருக்க வேண்டும் என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துகொண்டு ஒன்றுபட்டு ஊக்குவித்தால் ஆரோக்கியமான வளமான எதிர்கால இந்தியா உருவாகும்.
(ஆலோசனைகள் தொடரும்)
கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்.
தொடர்புக்கு: savidhasasi@gmail.com