

பல்கலைக்கழகங்களில் ஊடகப் படிப்பினில் சேர வரும் மாணவர்களை, ஒரு பக்கத்திற்கு, ஏதேனும் ஒரு செய்தியை எழுதச் சொல்வோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் கேட்கும் ஒரே கேள்வி, ‘‘ஆங்கிலத்தில் எழுதலாமா?” இந்த கேள்வியின் அர்த்தம், அவர்களுக்குத் தமிழில் எழுத வராது என்பதே.
ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான முதன்மைத் தகுதியை வளர்த்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். தகுதியின் அடிப்படையில்தான் இன்று ஊடகங்கள் மாணவர்களுக்குச் சம்பளத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, எந்த ஒரு ஊடகப் படிப்பில் சேர விரும்புகிறீர்களோ, அந்த படிப்புக்குரிய அடிப்படைத் தகுதியைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
பொதுவாகவே, தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் பணியாற்ற இருமொழி திறமை அவசியமானது. ஒரு செய்தியைத் தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், அதே செய்தியை ஒரு சில சமயங்களில் ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் எழுத வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
ஆனால், வருத்தம் அளிக்கும் செய்தி என்னவெனில், பெரும்பான்மையான மாணவர்கள், ஆங்கிலத்தில் மட்டுமே எழுதத் தயாராக உள்ளனர். இதற்கு முழு முதற்காரணம், பள்ளிக்கூடத்தில் அவர்கள் தமிழினை ஒரு மொழிப்பாடமாகக் கூட படிக்காததே ஆகும்.
தமிழில் பிழையின்றி எழுத, படிக்க தெரியுமா?
அரசு பள்ளிகளைத் தவிர்த்து தனியார் பள்ளிகளில் மொழிப்பாடத்தினை மாணவர்களே தெரிவு செய்து கொள்ளும் வசதியிருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் தமிழ் மொழியைத் தவிர்த்துவிடுகின்றனர். நமக்குத்தான் தமிழ் பேச வருமே, எதற்காக மீண்டும் தமிழ் மொழிப் பாடத்தை படிக்க வேண்டும் எனப் பெற்றோரும் நினைக்கின்றனர்.
ஆனால், ஒன்றை அனைவரும் மறந்துவிடுகின்றனர். பேசுதல் என்பது வேறு, எழுதுதல் மற்றும் படித்தல் என்பது வேறு. நாங்கள் நேர்முகத் தேர்வின்போதே, ஒரு சில மாணவர்களிடம் தமிழ் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வோம். ஒரு சில மாணவர்கள் தயக்கத்துடன் வாங்கி, தப்பும் தவறுமாக வாசிப்பார்கள்.
இன்னும் ஒரு சில மாணவர்கள் நேரடியாகவே தங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று கூறிவிடுவார்கள். ஆனால், இவர்கள்தான் தமிழ் ஊடகங்களில் பணிபுரிய ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டம், எல்லாவற்றையும் துரிதமாகக் கற்றுக் கொள்ளும் நிலைமை. அதன் காரணமாகவே அலைபேசியில் பல்வேறு வகையான ஆப்ஸ் வந்த வண்ணம் உள்ளன. குரலில்பதிவு செய்து அதை எழுத்துருக்களாக மாற்றம் செய்யும் செயலி மற்றும் எழுத்துக்களைப் படித்துக் கூறும்செயலிகள் போன்றவை பார்வை அற்றவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். ஆனால், இன்று அவற்றை, பார்வை இருந்தும் தமிழ் எழுதத் தெரியாதவர்கள்தாம் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
24 மணி நேர செய்தி அலைவரிசைகளும், ஆன்லைன் சேனல்களும் வந்துவிட்ட இந்தகாலகட்டத்தில், களத்தில் இருந்தே உடனுக்குடன் செய்திகளை அனுப்பியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் செய்தியாளர்கள், இது போன்ற ஆப்ஸ்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால், தொடக்கத்திலேயே இதை சார்ந்து செயல்படுவது சரியானதல்ல.
அடுத்த வாரம், என்னென்ன ஊடகப் படிப்புகள் உள்ளன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
(உலா வருவோம்)
கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: bbcsakthi@gmail.com