நீங்க ‘பாஸ்'ஆக வேண்டுமா?-3: நிதி ஒழுக்கம் இன்றி அமையாது வாழ்க்கை!

நீங்க ‘பாஸ்'ஆக வேண்டுமா?-3: நிதி ஒழுக்கம் இன்றி அமையாது வாழ்க்கை!
Updated on
2 min read

“என் பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன், லேப்டாப் வாங்கி கொடுத்தேன். ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் வட்டிக்கு கடன் வாங்கி, அவற்றை வாங்கினேன். அந்த கடனையே இன்னும் கட்டி முடிக்கவில்லை. அதற்குள் செல்போன், லேப்டாப் இரண்டையும் நாசமாக்கி விட்டார்கள். என் பிள்ளைகளுக்கு பணத்தின் மதிப்பே தெரியவில்லை''என நண்பர் ஒருவர் வருத்தத்தோடு கூறினார்.

இதேபோல பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்குப் பணத்தின் அருமையே புரியவில்லை. காசை கரி ஆக்குகிறார்கள். தண்ணீரைப் போல செலவு செய்கிறார்கள். விலைவாசி பற்றி கவலைப்படாமல் பார்ப்பதை எல்லாம் கேட்கிறார்கள். வாங்கியபொருளை பயன்படுத்தாமல் வீணடிக்கிறார்கள்.

இதனாலே வீட்டில் பணப் பிரச்சினையும் மனப் பிரச்சினையும் வருகிறது. மாதந்தோறும் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்கி, புதிய பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறோம் என புலம்புவதை கேட்க முடிகிறது.

பணத்தின் மதிப்பை உணர்

இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படை காரணம், பணத்தின் மதிப்பை முழுமையாக அறியாததே ஆகும். பிள்ளைகளுக்கு சிறுவயதிலே பணத்தின் மதிப்பை சொல்லிக் கொடுத்திருந்தால் இத்தகைய தொல்லைகளை தர மாட்டார்கள். பணத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை என்றால், அதைக் கொண்டு வாங்கிய பொருளின் முக்கியத்துவமும் தெரியாது.

இன்றைய உலகில் நேர்மையான வழியில் பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ராத்திரி பகலாக வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டால் மட்டுமே காசு கிடைக்கும். உடல் உழைப்பினால் பணத்தை ஈட்டுபவர்கள் ஒருவகையான வலியைஎதிர்கொண்டால், மூளை உழைப்பினால் பணத்தை ஈட்டுபவர்கள் வேறுவகையான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். சும்மா இருந்தால் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள். எந்தமரத்திலும் பணம் காய்ப்பது இல்லை.

நம் கையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் கடும் உழைப்பால் விளைந்தவை. அதில் ரத்தமும் வியர்வையும் கண்ணீரும் கலந்திருக்கிறது. ஒவ்வொரு ரூபாயிலும் உழைத்த‌வரின் வியர்வை ப‌டிந்திருக்கிறது. இத்தகைய தியாகம் நிறைந்த பண‌த்தை அற்ப விஷயங்களுக்காக செலவிட‌லாமா? இனி, கையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயையும் உலகம் அழியும் நேரத்தில் கிடைத்த கடைசி நெல் மணியைப் போல பாதுகாக்க வேண்டும்!

கஷ்டத்தை அறிந்துகொள்

பெரும்பாலான பெற்றோர் வீட்டுக் கஷ்டம் பிள்ளைகளுக்கு தெரியாமல் வளர்க்கிறார்கள். அதிலும் கடன் பிரச்சினைகளை பரம ரகசியம் போல மறைக்கிறார்கள். பொருளாதார நெருக்கடிகளை தங்களுக்குள்ளே புதைத்துக்கொள்வதை பெரும் தியாகமாக நினைக்கிறார்கள். உண்மையில் இதெல்லாம் சரியான அணுகுமுறை அல்ல.

பெற்றோர் தங்கள் வீட்டின் பொருளாதார நிலையை பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். குறிப்பாக கஷ்டமான சூழலை பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். இதை எப்படி தீர்க்க போகிறோம் எனஅவர்களுடன் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பிள்ளைகள்வறுமையை புரிந்துகொண்டு பொறுப்புடன் வளர்வார்கள். சிறுவயதிலே பக்குவப்பட்டு நிதியை சரியாக கையாள்வார்கள். தேவையற்ற செலவினங்களை தவிர்த்து தீர்க்கமாக செயல்படுவார்கள்.

நிதி ஒழுக்கம் முக்கியம்

உயிரை விடவும் உயர்ந்தது ஒழுக்கம் என்றார் திருவள்ளுவர். அதேநேரம் வாழ்க்கை சிறப்பாக அமைய ஒழுக்கம் எவ்வளவு முக்கியமோ, நிதி ஒழுக்கமும் அவ்வளவு முக்கியம். நிதி ஒழுக்கம் இல்லாமல் போனால் உயிரே போய்விடும். கடன் பிரச்சினையால் உயிரிழப்பவர்களே இதற்கு உதாரணம். எனவே மாணவர்கள் நிதி ஒழுக்கத்தை சிறுவயதிலே கைக்கொள்ள‌ வேண்டும்.

பணத்தை எவ்வாறு கையாள்வது, உரிய முறையில் சேமிப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது, ஆபத்தான முதலீடுகளை தவிர்ப்பது, சேர்த்ததை பத்திரமாக பாதுகாப்பது ஆகியவை குறித்து கற்க வேண்டும். பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் இதை தலையாய கடமையாக நினைத்து மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். இளம்வயதில் கற்பிக்கப்படும் நிதி ஒழுக்கம் மாணவர்களின் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்து, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும்.

நிதி ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே வீடும் நாடும் உயர்வடையும்!

(தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in