கையருகே கிரீடம் - 3: படித்து புதுமை விவசாயி ஆகலாம்!

கையருகே கிரீடம் - 3: படித்து புதுமை விவசாயி ஆகலாம்!
Updated on
2 min read

விவசாயிகள் வாழைத் தோட்டத்தில் இருந்து வாழைப்பழங்கள், வாழையிலை ஆகியவற்றை விற்பனைக்கு அனுப்புவார்கள். ஆனால், வாழைத்தண்டு பெருமளவு குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது.

வாழைத்தண்டில் இருந்து திரவ உரம், கட்டிடங்களுக்குத் தேவையான கட்டுமான பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களைத் தயாரிக்கலாம். படித்த இளைஞர்கள் இப்படி பல புதுமையான கனவு முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற்று வருகிறார்கள்.

இந்திய வாழ்வியல் முறை விவசாயம் சார்ந்தது. இயற்கையோடு இயைந்த விவசாய வாழ்க்கை மனித உடலுக்கும் ஆரோக்கியமானது. ரசாயன கலப்பில்லாத விவசாய விளைபொருட்களுக்கு உலக அளவில் கிடைத்துள்ள வரவேற்பு மறுபடியும் விவசாயத்தின் பக்கம் வெளிச்சம் பாய்ச்சி உள்ளது.

மென்பொறியாளர்கள் பலர் தங்கள் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் குதிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. மண்ணும் மண்சார்ந்த வாழ்க்கையும் உங்கள் நெஞ்சுக்கு நெருக்கமானதெனில் வேளாண்மை தொடர்பான படிப்பை படித்து புதுமைமிகு விவசாயியாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

விவசாய படிப்புகள் என்னென்ன?

இந்திய அளவில் வேளாண்மை துறை சார்ந்த கல்வி மற்றும் ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் அமைப்பு இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Agricultural Research-ICAR) ஆகும். இந்திய அரசின் அங்கமான வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் நிர்வாகத்தில் இயங்கும் தன்னாட்சி அமைப்பு, ஐ.சி.ஏ.ஆர். இந்தியாவில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகங்கள் இந்த அமைப்பின் வழிகாட்டுதலில் உள்ளன.

வேளாண்மை படிப்புகள் பல

இளம் அறிவியல் (B.Sc-Hons)என்ற நான்கு ஆண்டு பட்டப்படிப்பில், வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், பட்டு வளர்ப்பு, வேளாண்வணிக மேலாண்மை, உணவு-ஊட்டச்சத்து-உணவு விதிமுறை ஆகிய படிப்புகளில் சேரலாம்.

இளநிலை தொழில்நுட்பம் (B.Tech) பட்டப்படிப்பில், வேளாண்மைப் பொறியியல், உணவு தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் (Energy and Environmental Engineering) ஆகிய பாடங்களைப் படிக்கலாம்.

இளம் அறிவியல் படிப்பில் சேர, ப்ளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் போன்ற பாடங்களைப் படித்திருக்க வேண்டும். கணித பாடம் படித்தவர்களும் இளநிலை தொழில்நுட்பப் படிப்பிலும், இளம் அறிவியல் (உணவு-ஊட்டச்சத்து-உணவு விதிமுறை) படிப்பிலும் சேரலாம்.

எங்கு படிப்பது?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை தொடர்பான படிப்புகளை வழங்குகிறது. திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பல்கலைக்கழகத்தின் 14 கல்லூரிகள் உள்ளன. இவை மட்டுமின்றி தமிழகத்தில் 27 அங்கீகரிக்கப்பட்ட தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. (tnau.ac.in/ugadmission.html)

பிற மாநிலங்களிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து படிக்கலாம். இதற்கான அகில இந்திய தேர்வை ஐ.சி.ஏ.ஆர். (ICAR- All India Entrance Examinations for Admission -UG) அமைப்பு நடத்துகிறது.

வேலை கிடைக்குமா?

வேளாண்மை படிப்பை முடித்த பிறகு விவசாயி ஆகி பயிர்களை விளைவிக்கலாம். அது மட்டுமல்ல பல வேளாண்மை துறைசார்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசுத்துறைகளில் வேளாண் அதிகாரியாகலாம். உரத்தொழிற்சாலைகள், விதை நிறுவனங்களில் பணியாற்றலாம். வங்கிகளில் வேளாண் கடன் அதிகாரி ஆகலாம். வேளாண்மை தொடர்பான சொந்தத் தொழில் தொடங்கி தொழிலதிபர் ஆகலாம். துளிர் நிறுவனம் (Start-up) தொடங்கி புதுமை விவசாயி ஆகலாம்.

முறையான படிப்போடு தொழில்நுட்பப் பின்புலத்தோடும் தீராத வேட்கையோடும் விளை நிலத்தில் களமாடினால் விவசாயத்தில் புதிய பரிமாணங்களை தொடமுடியும். நாட்டின் உணவுச்சங்கிலியில் உங்களால் கணிசமான பங்காற்ற முடியும். வானம் பார்த்த தொழிலான விவசாயத்துறையில் வானம் வரை வாய்ப்புகளும் உண்டு.

(கனவுகள் தொடரும்…)

கட்டுரையாளர், ‘விண்ணும் மண்ணும்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

தொடர்புக்கு: dilli.drdo@gmail.com

உங்களின் கனவை ‘கையருகே கிரீடம்’ பகுதியில் தெரிவியுங்கள். வரும் வாரங்களில் அவற்றுக்கான வழிகாட்டப்படும்.
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in