

கதைகள் பிடிக்காத குழந்தைகள் இருப்பார்களா என்ன! ஆனால், சமூக அறிவியல் பாடம் ஏனோ பெரும்பாலான குழந்தைகளுக்குப் பிடிப்பதே இல்லை. ஏன் என்று விசாரித்தால், “அது ஆண்டுகளால் நிரம்பி இருக்கு.
அதை நினைவு வெச்சிக்கவே முடியல” என்பார்கள். ஆண்டுகளை ஏன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற துணைக் கேள்வியும் எழும். சரியான கேள்விதானே?! அதனுடைய அடிப்படை புரிந்துவிட்டால் போதும் வரலாறு சுவைக்க ஆரம்பித்திடும்.
கணித மேதை ராமானுஜம் வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும்போது அவர் கல்லூரி காலத்தில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றார் என்று வரும். அதை எளிதாக கடந்து போய்விடுவோம்.
கொஞ்சம் ஆழமாக யோசித்தால் அந்த முதல் மதிப்பெண் மாணவர் என்ன ஆனார்? அது மாணவனா, மாணவியா? எந்த காலகட்டத்தில் மாணவிகளும் போட்டிப்போட வந்தனர்? வந்ததும் எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா? ராமானுஜம் காலகட்டத்தில் இவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்து இருந்ததா? எப்படி அந்த காலகட்டத்தில் கடிதங்கள் பரிமாறப்பட்டு இருக்கும்? அப்படி சிரமம் இருந்தும் எப்படி இவ்வளவு கடித பரிமாற்றங்கள்? அதன் தொடர்ச்சியாகப் பயணங்கள்? இப்படியான ஒவ்வொன்றும் அட போட வைக்கும். வரலாறு கேள்வி கேட்க மட்டுமல்ல வியக்கவும் ரசித்துப் பார்க்கவும் வைக்கும்.
இந்த கேள்விகள் மேலும் வரலாற்றினை தேடிப் படிக்க வைக்கும். அது மனதில் உருவாகி இருக்கும் சித்திரத்தினை விரிவாக்கும், இன்னும் கூர்மையாக்கும். பதில்கள் கிடைத்தாலும் அங்கிருந்தும் கேள்விகள் எழும்.
எப்போதுமே எதில் ஒன்றில் ஈடுபடும்போதும் அதன் வரலாறு தெரிந்திருப்பது அவசியம். அதில் நுட்பமான மாறுதல்கள் எல்லாம் அத்துப்படியாக இருக்க வேண்டும். அதெல்லாம் கண்டிப்பாகக் கைகூடும். தேவை நம் அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம். சின்னஞ்சிறிய மாற்றம் அவ்வளவுதான்.
வரலாறும் ஒரு வகையில் கதைகள்தான். கதாநாயகர்கள் உண்டு, வில்லன்கள் உண்டு,திருப்பங்கள் உண்டு, வேகமாக நகரும் காட்சிகள் உண்டு. இசை உண்டு. ரம்மியம் உண்டு. உக்கிர காட்சிகளும் உண்டு. முக்கியமாக நிறைய துரோகங்களும் உண்டு. வரலாறுகளை வாசிக்கும்போது யார் இந்த வரலாறுகளை எழுதி இருப்பார்கள், யாரிடம் அப்போது கல்வி இருந்திருக்கும், யார் பார்வையில் இருந்து இந்த வரலாறு சொல்லப்பட்டு இருக்கும், ந
சுக்கப்பட்டவர்கள் மற்றும் ஆளப்பட்டவர்கள் பார்வையில் இருந்து வரலாறு சொன்னால் எப்படி இருக்கும் என யோசிக்க வேண்டும். வரலாறுகளை வெறும் ஆண்டுகளாக பார்க்காமல் அதில் இருந்து கேள்விகளை உருவாக்க வேண்டும். அந்த கேள்விக்கான விடைகளில் இருந்தே நம் தேடல் தொடங்க வேண்டும். அது கண்டிப்பாக ரசமான அனுபவமாக அமையும். இப்போது வரலாற்று பாடத்தைப் பாருங்கள், ஆண்டுகளைப் பாருங்கள் அது சொல்லும் செய்திகள் உங்களைப் புரட்டிப்போடலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்.
‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’
ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்
தொடர்புக்கு: umanaths@gmail.com